புதிய கிரிக்கெட் சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிட முடிவு
திய சட்டம் அமல்படுத்தப்படும்வரை, தற்போது இருக்கும் பிரச்சினைகளுடனே இதனை கொண்டு செல்லவேண்டி இருக்கிறது.
அரசாங்கம் வாக்குறுதியளித்த பிரகாரம் இலங்கை கிரிக்கெட்டை புதிய வழியில் கொண்டுசெல்ல அரசாங்கம் தீர்மானித்திருக்கிறது. அதனடிப்படையில் தற்போது புதிய கிரிக்கெட் சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டிருக்கிறது என விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே தெரிவித்தார்.
கொழும்பில் 30-09-2026 அன்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில், இலங்கை கிரிக்கெட்டை புதிய வழியில் கொண்டு செல்வதாக நாங்கள் மக்களுக்கு வாக்குறுதியளித்திருந்தோம். குறிப்பாக புதிய கிரிகெட் சட்டம் கொண்டுவந்து, அதனை மாற்றியமைப்பதாகவே நாங்கள் தெரிவித்திருந்தோம். அதன் பிரகாரம் தற்போது புதிய கிரிக்கெட் சட்டமூலம் திங்கட்கிழமை வர்த்தமானியில் வெளியிடப்பட்டிருக்கிறது.
அதன் பின்னர் அது பாராளுமன்றத்தில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சட்டமாக்கப்படும். இலங்கை கிரிக்கெட் அணி தொடர்பில் ரசிகர்கள் மத்தியில் விமர்சனம் இருந்துவருகிறது. என்றாலும் அதனை உடனடியாக சரிசெய்வது கடினமான விடயமாகும்.
அதனால்தான் முதலாவது நாங்கள் புதிய சட்டத்தை அமைத்திருக்கிறோம். அதன் பிரகாரம் பதிய கிரிக்கெட் நிர்வாக சபை தெரிவு செய்யப்பட இருக்கிறது.
புதிய கிரிக்கெட் சபை நிர்வாகத்தின் ஊடாகவே அணியில் மாற்றங்கள் ஏற்படுத்தி, அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டி இருக்கிறது. அதனால் புதிய சட்டம் அமல்படுத்தப்படும்வரை, தற்போது இருக்கும் பிரச்சினைகளுடனே இதனை கொண்டு செல்லவேண்டி இருக்கிறது.
புதிய சட்டத்தின் பிரகாரம் புதிய நிர்வாக சபைக்கு தேர்தல் மூலம் 7பேரும் சுயாதீன சபையில் இருந்து 7பேரும் என்ற அடிப்படையில் 14பேர் கொண்ட சபை நியமிக்கப்படும். இதில் விசேடத்துவம் என்னவென்றால், கிரிக்கெட் சபையின் தலைவர் நியமிக்கப்படுவது, சுயாதீன குழுவில் இருந்து தெரிவாகிய 7 பேரில் ஒருவராகும். அந்த 7பேரும் விசேட வாக்களிப்பொன்றின் மூலமே தெரிவுசெய்துகொள்ளப்படுவார்கள் என்றார்.





