பிரதி சபாநாயகர் தலைமையில் சவூதி அரேபியாவுக்கு குழு - அமைச்சர் விஜித்த ஹேரத்
அத்துடன் அவரை விரைவாக இலங்கைக்கு அழைத்து வருவதற்கு உதவுமாறு தூதரகம் அந்த நிறுவனத்திடம் கேட்டுக்கொண்டுள்ளது.
சவூதியில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள அனோஜன் சிவராசாவுக்கு பொதுமன்னிப்புக் கோரி ஜனாதிபதியினால் சவூதி மன்னருக்கு அனுப்பப்படும் கடிதத்தை சவூதி மன்னரிடம் கையளிப்பதற்காக எமது பாராளுமன்றத்தை சேர்ந்த ஆளும் மற்றும் எதிர்க்கட்சி எம்.பிக்கள் உள்ளடக்கிய பிரதிநிதிகள் குழுவொன்று பிரதி சபாநாயகர் தலைமையில் சவூதி அரேபியாவுக்கு செல்ல வேண்டும் என பிரேரிப்பதுடன் ஜனாதிபதியின் விசேட பிரதிநிதிகள் குழுவொன்றை அனுப்பி வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த விடயங்களின் உணர்வுபூர்வ நிலைமைகளை கவனத்தில்கொண்டு பொறுப்புடன் நடந்துகொள்ளுமாறும் இராஜதந்திர செயற்பாடுகளுக்கு பாதிப்பான விடயங்களை தவிர்த்துகொள்ளுமாறும் அனைத்து தரப்பினரையும் கேட்டுக்கொள்கின்றோம் என வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் விஜித்த ஹேரத் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை அமைச்சின் அறிவித்தலை வெளியிட்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், அனோஜன் சிவராசா 1999 டிசம்பர் 20ஆம் திகதி பிறந்தவர் என்பதுடன், அவர் கல்முனை நற்பிட்டிமுனையை வசிப்பிடமாக கொண்டவர். அவர் தொழிலுக்காக 2025 செப்டம்பர் 4ஆம் திகதி சவூதி அரேபியாவுக்கு சென்றுள்ளார். அங்கு வெனிஸ் அரேபியா நிறுவனத்தில் பணியாற்றியுள்ளார். இந்நிலையில் அனோஜன் சிவராசா தனது முகப்புத்தகத்தில் பதிவிட்ட கருத்தொன்று காரணமாக அவரின் தொழிலுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் அவரை இலங்கைக்கு அழைத்து வருவதற்கு ஒத்துழைப்பு கோரி அவரின் குடும்பத்தினர் வெளிவிவகார அமைச்சுக்கு ஜூலை முதலாம் திகதி எழுத்து மூல கோரிக்கையை விடுத்திருந்தனர். அன்றைய தினமே அமைச்சின் ஆலோசனைக்கமைய ரியாத்தில் உள்ள இலங்கை தூதரகம் அனோஜன் பணியாற்றிய நிறுவனத்திடம் அவரின் நிலைவரம் தொடர்பில் விளக்கம் கோரப்பட்டுள்ளது. அத்துடன் அவரை விரைவாக இலங்கைக்கு அழைத்து வருவதற்கு உதவுமாறு தூதரகம் அந்த நிறுவனத்திடம் கேட்டுக்கொண்டுள்ளது.
அவ்வாறு இருக்கையில் ஜூலை 2ஆம் திகதி அவர் சவூதி அரேபிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் பணியாற்றிய நிறுவனத்தின் மனிதவள முகாமையாளர் தூதரகத்திற்கு அறிவித்துள்ளார். நிறுவனத்தால் வழங்கப்பட்ட வாய்மூல தகவல்களுக்கமைய அனோஜனால் சமூக வலைத்தளத்தில் வெளியிடப்பட்ட மத ரீதியிலான உணர்வுபூர்வ கருத்தால் சைபர் குற்றம் தொடர்பில் சவூதி அரேபியாவில் காணப்படும் சட்டம் மீறப்பட்டுள்ளதாகவும் அதன்மூலம் மத நிந்தனை செய்யப்பட்டுள்ளதாக தூதரகத்திற்கு அறியக் கிடைத்துள்ளது.
இதன்பின்னர் ஜூலை 26ஆம் திகதி மூவரடங்கிய குற்றவியல் நீதிமன்ற நீதிபதிகள் முன்னிலையில் நிகழ்நிலை தொழில்நுட்பம் மூலம் வழக்கு விசாரணை நடத்தப்பட்டுள்ளது. குறித்த நீதிமன்றம் ரியாத் நகரில் உள்ள இலங்கை தூதரகத்தில் இருந்து 350 கிலோ மீற்றர் தூரத்திலேயே அமைந்துள்ளது. குறித்த நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கமைய அனோஜன் சிவராசா சவூதி அரேபியாவின் சைபர் குற்றவியல் சட்டத்திற்கமைய குற்றவாளியாக்கப்பட்டுள்ளார். ஆனால் அந்த தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு அரசு வழக்கறிஞரால் முன்வைக்கப்பட்டுள்ள மத நிந்தனை குற்றச்சாட்டில் அவர் குற்றவாளியாக்கப்பட்டிருக்கவில்லை. இதன்போது சவூதி அரச தரப்பு வழக்கறிஞர் இது சைபர் குற்றம் அல்ல ஷரீஆ சட்டத்தின் கீழ் மரண தண்டனை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ள போதும் ஆரம்ப நீதிமன்றம் அதனை ஏற்காது சைபர் சட்டத்தில் தண்டனை அறிவிக்கப்பட்டது.
இதன்படி அவருக்கு 5 வருட சிறைத் தண்டனையும் 3 மில்லியன் சவூதி ரியால் தண்டப்பணமும் விதிக்கப்பட்டதுடன், குறிப்பிட்ட இலத்திரனியல் உபகரணத்தை அரசுடமையாக்கவும் மற்றும் குறித்த சமூக வலைத்தள பக்கத்தை முடக்கவும் தீர்மானிக்கப்பட்டது. விசாரணைகளின் போதும், வழக்கு விசாரணைகளின் போதும் சிவராசா அனோஜன் தான் செய்த விடயம் தொடர்பில் வாக்குமூலமளித்துள்ளதாகவும் அவர் தவறை ஒப்புக்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த தீர்ப்பு வழங்கப்பட்ட பின்னர் ஜூலை 30ஆம் திகதி தூதரக அதிகாரிகள் அந்த தீர்ப்பின் உறுதிப்படுத்தப்பட்ட பிரதிகளை வெளிவிவகார அமைச்சுக்குக்கு அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளனர். அன்றைய தினமே அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைச்சாலைக்கு தூதரக அதிகாரிகள் சென்றுள்ளனர். அதன்போது தனிப்பட்ட ரீதியில் சந்திக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. தொலைபேசி மூலமே கதைக்க முடிந்துள்ளது. இவ்வேளையில் தனக்கு எதிராக தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்ய வசதிகளை ஏற்படுத்துமாறு அவர் தூதரக அதிகாரிகளிடம் கேட்டுள்ளார்.
இது தொடர்பில் வெளிவிவகார அமைச்சுக்கு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து அவரின் குடும்பத்தினருக்கு தீர்ப்பின் விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன . இதன்பின்னர் ஆகஸ்ட் 4ஆம் திகதி அவரின் தந்தை மேன்முறையீடு செய்வதற்கு இணக்கம் தெரிவித்து வெளிவிவகார அமைச்சிடம் எழுத்து மூல கோரிக்கையை விடுத்துள்ளார். இதன்படி மேன்முறையீடு செய்வதற்கான வசதிகள் செய்துகொடுக்கப்பட்டுள்ளன.
தூதரகத்தினால் நியமிக்கப்பட்ட சட்டத்தரணிகள் அனோஜன் சிவராசாவுக்கு எதிரான தீர்ப்பை குறைக்குமாறு மேன்முறையீட்டை செய்த போதும், சவூதி அரச வழக்கறிஞர் அலுவலகத்தால் அவருக்கு வழங்கப்பட்டுள்ள தண்டனையை அதிகரிக்குமாறும், ஷரீஆ சட்டத்தின் கீழ் தண்டனை வழங்குமாறும் ஏற்கனவே மேன்முறையீடு செய்துள்ளனர். எமது தரப்பில் மேன்முறையீட்டை செய்திருந்தாலும் செய்யாவிட்டாலும் அவர்களின் பக்கத்தில் தண்டனையை அதிகரிக்க மேன்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
செப்டம்பர் 17ஆம் திகதி இடம்பெற்ற வழக்கு விசாரணையின் பின்னர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் அவரின் தண்டனையை மரண தண்டனையாக அதிகரித்துள்ளதாக அனோஜன் சார்பாக ஆஜராகிய சட்டத்தரணியால் தூதரகத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி சவூதி அரச வழக்கறிஞர் தரப்பு மேன்முறையீடு ஏற்றுக்கொள்ளப்பட்டு எமது தரப்பு மேன்முறையீடு நிராகரிக்கப்பட்டுள்ளது.
எமக்கு கிடைக்கப்பெற்றுள்ள எழுத்துமூல தீர்ப்பு விபரங்களுக்கமைய மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் குற்றவியல் நீதிமன்றத்தில் தீர்ப்பை மாற்றி, குறித்த குற்றச்சாட்டுக்கு ஷரீஆ சட்டத்தின் கீழான குற்றமாக கருதப்பட்டு, அந்த செயற்பாடு முகம்மத் நபியை அவமதிக்கும் குற்றமாக கருதி மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மரண தண்டனை தீர்ப்பு தொடர்பில் விசேட மீளாய்வொன்று நடக்கின்றது. இதன்படி இந்த வழக்கு தொடர்பில் முன்னெடுக்கப்படும் சகல சட்ட விடயங்கள் தொடர்பிலும் சவூதி அரேபியா மற்றும் இலங்கை விசேட சட்ட நிபுணர்களிடம் தேவையான ஆலோசனைகளை பெற்றுக்கொள்ள அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது. வழக்கின் தீர்ப்பு தொடர்பில் ஆராயப்பட்டு வருகின்றது.
இதேவேளை இந்த விடயத்தில் இலங்கை அரசாங்கம் இராஜதந்திர மற்றும் சட்ட வழிகளில் தொடர்ந்தும் செயற்பட்டு வருகின்றது. முதலில் ரியாத்தில் உள்ள தூதரகம் அனோஜனுடன் தொடர்புகளை பேணி தேவையான சட்ட உதவிகளை வழங்கி வருகின்றது. அத்துடன் சட்ட ஆலோசகர்களுடன் கலந்துரையாடி சவூதி அரேபிய உயர் நீதிமன்றம் அல்லது வேறு சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் மேன்முறையீடு தொடர்பான நடவடிக்கைகள் மற்றும் ஏனைய நிபந்தனைகளை நிறைவேற்றுவது தொடர்பான நடவடிக்கைகள் தொடர்பில் துரிதமாக அறிவிக்குமாறு தூதரக அலுவலகத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் குமரபெரும மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி பைசர் முஸ்தபா ஆகியோர் தமது சொந்த செலவில் சவூதி அரேபியாவுக்கு சென்று அந்த சட்டத்தரணிகள் குழுவுடன் கலந்துரையாடி தேவையான சட்ட உதவிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை சிவராஜா அனோஜன் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்யப்பட்டவராக இருக்கின்றார். இதனால் அவர் தொடர்பில் சவூதி அரேபியாவில் முன்னெடுக்கப்படும் சட்ட நடவடிக்கைகளுக்காக செலவாகும் மற்றும் இதற்கு முன்னர் செலவிடயப்பட்ட சகல செலவுகளையும் அரசாங்கம் பொறுப்பேற்றுக்கொள்கின்றது. அவருக்கான நிவாரணத்தை பெற்றுக்கொள்வதற்காக சவூதி சட்டத்தின் ஊடாக பெற்றுக்கொள்ளக்கூடிய சகல பொறுத்தமான இராஜதந்திர வழிகள் தொடர்பிலும் அரசாங்கம் ஆராய்கின்றது. அத்துடன் அந்நாட்டு வெளிவிவகார அமைச்சரை அடுத்த வாரம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் சந்திப்பதற்கும் எதிர்பார்க்கின்றேன். இதன்போது இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாட நடவடிக்கை எடுக்கப்படும்.
அதேபோன்று மரண தண்டனையை செயற்படுத்தாமல் இருக்குமாறு கோரவும், தண்டனையை குறைப்பதற்கு மற்றும் சவூதி சட்டத்தின் ஊடாக பெற்றுக்கொள்ளக்கூடிய ஏனைய நிவாரணங்களை பெற்றுக்கொள்ள எதிர்பார்க்கப்படுகின்றது. பொதுமன்னிப்புக் கோரி ஜனாதிபதியினால் சவூதி அரேபிய மன்னருக்கு கடிதமொன்று அனுப்பி வைக்கப்படவுள்ளது. அந்த கடிதத்தை சவூதி மன்னரிடம் கையளிப்பதற்காக எமது பாராளுமன்றத்தை சேர்ந்த ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களை உள்ளடக்கிய பிரதிநிதிகள் குழுவொன்று பிரதி சபாநாயகர் தலைமையில் சவூதி அரேபியாவுக்கு செல்ல வேண்டும் என்றும் நான் கோரிக்கை விடுக்கின்றேன். இதற்காக அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இதேவேளை ஜனாதிபதியின் விசேட பிரதிநிதிகள் குழுவொன்றை அனுப்பி வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. அத்துடன் கொழும்பிலுள்ள சவூதி தூதரகத்துடன் தேவையான தொடர்புகள் பேணப்படுகின்றன. அதேபோன்று இந்த விடயத்தில் இலங்கை அரசாங்கம் மிகுந்த அவதானத்துடன் செயற்பட்டு வருகின்றது என்பதனையும் கூறிக்கொள்கின்றோம். அனோஜனின் குடும்பத்திற்கு இது தொடர்பில் முன்னெடுக்கும் நடவடிக்கைகளை அவர்களின் குடும்பத்திற்கு அறிவிக்க நடவடிக்கை எடுப்போம்.
எனவே இந்த விடயங்களின் உணர்வுபூர்வ நிலைமைகளை கவனத்தில்கொண்டு பொறுப்புடன் நடந்துகொள்ளுமாறு அனைத்து தரப்பினரிடமும் கேட்டுக்கொள்வதுடன், இராஜதந்திர செயற்பாடுகளுக்கு பாதிப்பான விடயங்களை தவிர்த்துக்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்கின்றோம் என்றார்.





