அனோஜன் வீட்டுக்கு வந்து சேரவேண்டும்; குடும்பத்தினர் தெரிவிப்பு
குறித்த வழக்கினை சவூதியின் ஆரம்ப நீதிமன்றம் மீண்டும் விசாரணை செய்யவுள்ளது.
எமது மகன் அனோஜன் வீட்டுக்கு வந்து சேரவேண்டும். அதுவே எமக்கு நிம்மதி. அந்த நாளுக்காக எதிர்பார்ப்போடு காத்திருக்கின்றோம் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.
சவுதியில் சிறை வைக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜனுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை இரத்துச் செய்யப்பட்டுள்ள நிலையில் அவரது தாயார் யோகலட்சுமி சிவராசா, சகோதரன் கம்சிகன் சிவராசா ஆகியோர் வீரகேசரிக்கு கருத்து வெளியிடும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தனர்.
தாயார் யோகலட்சுமி சிவராசா தெரிவிக்கையில், எனது மகன் மீண்டும் எங்களுடன் வந்து சேரும் நாளுக்காக காத்திருக்கிறேன். அவருடைய தவறை மன்னித்து மரணதண்டனையை இரத்து செய்தது போன்று அவருடைய விடுதலையை உறுதி செய்யும் அறிவிப்பையும் வெளியிட வேண்டும் என்று எதிர்பார்க்கின்றேன். எனது மகனுக்கு உயிர்ப்பிச்சை வழங்கி அவரை விடுவியுங்கள் என்று கோருகின்றேன். அவருடைய மரண் தண்டனை இரத்துச் செய்யப்பட்டதாக எமக்கு கூறியுள்ளார்கள். இதற்காக உழைத்த அத்தனை பேரும் எமது நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம் என்றார்.
இதேவேளை, அனோஜனின் சகோதரனான கம்சிகன் தெரிவிக்கையில், அண்ணாவுக்கு மரணதண்டனை இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக எம்மிடத்தில் கூறினார்கள். அதன்பின்னர் அவர் எம்முடன் உரையாடினார். எனினும் அவருடைய வழக்கு இன்னமும் நிலுவையில் இருப்பதால் அதுதொடர்பிலான விசாரணை தொடரும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. எனது சகோதரனின் வருகைக்காகவே நாம் காத்திருக்கின்றோம். அவருக்கு பொதுமன்னிப்பளித்து எம்முடன் இணைத்துவிடுங்கள் என்றார்.
சிவரசா அனோஜனின் விடயத்தை சட்டமா அதிபர் திணைக்களத்தின் மேலதிக சொலிசிட்டர் ஜெனரலும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான ஹபீஸ் அசார்த் நவாவி, ஜனாதிபதி சட்டத்தரணி கே.ஏ. உபுல் இந்திக குமாரப்பெரும, சட்டத்தரணி பரிஸ் பஸல் அப்துல் ஹபீல் மொஹமத் மற்றும் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான பைசர் முஸ்தபா மற்றும் அவரது இணைப்புச்செயலாளர் மொஹமட் ரியாஸ்தீன் சில்மி ஆகியோர் சென்றிருந்ததோடு அவர்கள் சவூதி சட்டத்தரணிகள் மற்றும் சவூதியின் ஜெத்தா நகருக்கான இலங்கை துணைத் தூதராகப் பணியாற்றும் நீதியரசர் எம்.டி. மொஹமத் லஃபார் ஆகியோர் கூட்டிணைந்து கையாண்டிருந்தனர்.
இந்நிலையில் ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா தெரிவிக்கையில், சவூதி அரேபியாவில் பணிபுரிந்த சிவராசா அனோஜனுக்கு விதிக்கப்பட்டிருந்த மரணதண்டனை மற்றும் ஐந்தாண்டு சிறைத்தண்டனை ஆகிய இரண்டையுமே சவூதி உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு இரத்துச் செய்துள்ளது.
அனோஜனுக்கு இணையக் குற்றத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தண்டனை வழங்கப்படாமல், ஷரீஆ சட்டத்தின் கீழேயே தண்டனை விதிக்கப்பட்டிருந்த நிலையில் அத்தண்டனை இரத்துச்செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த வழக்கினை சவூதியின் ஆரம்ப நீதிமன்றம் மீண்டும் விசாரணை செய்யவுள்ளது. அதன்படி குறித்த வழக்கு எதிர்வரும் 17ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. அதற்குரிய சட்ட உதவிகளுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, வெளிவிவாகர அமைச்சு, சவூதி அரேபியாவிலுள்ள இலங்கைத் தூதரகம், இலங்கையின் சட்டக்குழு மற்றும் சவூதி சட்டக்குழு ஆகியவற்றின் கூட்டு முயற்சிகளுக்கே இந்த வெற்றி உரியது என்றார்.





