சிவில் ஊழியர்களுக்கு இந்தியாவில் பயிற்சி
இந்த திட்டத்தின் மையக்கருத்து, நிலையான நகர்ப்புற மேலாண்மை, சுற்றுச்சூழல் பொறுப்பு மற்றும் பிரஜைகளின் பங்கேற்பு ஆகியவற்றை ஆதரிக்கும் வகையில் தேர்ந்தெடுக்கப்பட்டது.

தூய நகரங்கள், சிறந்த எதிர்காலம், பிராந்திய நடைமுறைகளுடன் நகர்ப்புற இலங்கையை மாற்றியமைத்தல் என்ற கருப்பொருளில் வரை இந்தியாவின் தேசிய நல்லாட்சிக்கான மையத்தில் விசேட வலுவூட்டல் பயிற்சித் திட்டத்தில் 40 சிரேஷ்ட இலங்கை சிவில் சேவை அதிகாரிகள் பங்குபற்றியுள்ளதாக கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து உயர்ஸ்தானிகரகத்தால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவால் 2025 ஜனவரி 01 அன்று அறிவிக்கப்பட்ட 'தூய இலங்கை' முன்முயற்சி மற்றும் இந்தியாவில் 'சுவச் பாரத் மிஷன்' திட்டத்தின் கீழ் உள்ள சுவச்சதா ஹி சேவா 2025 பிரச்சாரம் ஆகியவற்றுடன் ஒருங்கிணைந்து, 40 சிரேஷ்ட இலங்கை சிவில் சேவை அதிகாரிகள், செப்டம்பர் 22 முதல் இம்மாதம் 3ஆம் திகதி வரை இந்தியாவின் தேசிய நல்லாட்சிக்கான மையத்தில் ஒரு விசேட வலுவூட்டல் பயிற்சித் திட்டத்தில் கலந்துகொண்டனர். இந்த திட்டத்தின் மையக்கருத்து 'தூய நகரங்கள், சிறந்த எதிர்காலம்: பிராந்திய நடைமுறைகளுடன் நகர்ப்புற இலங்கையை மாற்றியமைத்தல்' என்பதாகும்.
இந்த திட்டத்தின் மையக்கருத்து, நிலையான நகர்ப்புற மேலாண்மை, சுற்றுச்சூழல் பொறுப்பு மற்றும் பிரஜைகளின் பங்கேற்பு ஆகியவற்றை ஆதரிக்கும் வகையில் தேர்ந்தெடுக்கப்பட்டது. இது இரண்டு தேசிய முன்முயற்சிகளின் இலக்குகளையும் பிரதிபலிக்கிறது. நகர்ப்புற திட்டமிடல், மாநகராட்சி நிர்வாகம், நகர்ப்புறத் துறையில் பொது-தனியார் கூட்டாண்மைகள், பிளாஸ்டிக் கழிவு மறுசுழற்சிக்கு முக்கியத்துவமளித்து திடக் கழிவு மேலாண்மை, உள்ளுர் மட்டத்தில் புத்தாக்கம் மற்றும் இலக்கவியல் மாற்றம், நகர்ப்புற போக்குவரத்து போன்ற முக்கிய பகுதிகளை உள்ளடக்கிய நிபுணர்கள் தலைமையிலான அமர்வுகளில் பங்கேற்பாளர்கள் ஈடுபட்டனர்.
தேசிய நகர்ப்புற விவகார நிறுவனம், முஸோரி–டேராடூன் அபிவிருத்தி அதிகார சபை, ஒருங்கிணைந்த பழங்குடியினர் மேம்பாட்டு நிறுவனம், தேக்கந்த் கழிவுகளை-ஆற்றலாக மாற்றும் திட்டம் மற்றும் டெல்லி மெட்ரோ ரயில் திட்டம் போன்ற முன்னணி நிறுவனங்களில் நடைபெற்ற கள விஜயங்கள், இத்திட்டத்தின் கருப்பொருளுக்குப் பொருத்தமான குறிப்பிடத்தக்க முன்முயற்சிகளைப் பற்றிய நடைமுறை அறிவைப் பங்கேற்பாளர்களுக்கு வழங்கின. மாநகராட்சி நிர்வாகம், நகர்ப்புறக் கட்டமைப்பு, கழிவுகளை-ஆற்றலாக மாற்றும் தீர்வுகள் மற்றும் குடிமக்கள் மையப்படுத்திய பொதுச் சேவைகள் ஆகியவற்றில் உள்ள புதிய நடைமுறைகளை பங்கேற்பாளர்கள் நேரடியாக அனுபவித்தனர்.
இது இந்தியாவின் தேசிய நல்லாட்சிக்கான மையம் மற்றும் இலங்கை அபிவிருத்தி நிர்வாக நிறுவனத்துக்கு இடையே 2024 டிசம்பரில் கையொப்பமிடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ், ஐந்து ஆண்டுகளில் 1500 இலங்கை சிவில் சேவை அதிகாரிகளுக்குப் பயிற்சியளிப்பதற்கான ஐந்தாவது வலுவூட்டல் பயிற்சித் திட்டமாகும். இந்தப் பயிற்சியுடன், புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் பயிற்சி பெற்ற அதிகாரிகளின் மொத்த எண்ணிக்கை 201 ஐ எட்டியுள்ளது. பங்கேற்பாளர்களின் மிகவும் நேர்மறையான கருத்துக்களின் அடிப்படையிலும், இலங்கை அரசாங்கத்தின் கோரிக்கையின் பேரிலும், புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் உள்ள ஆறாவது திட்டமும் இதே கருப்பொருளின் கீழ் நடைபெறும், மேலும் 40 இலங்கை சிவில் ஊழியர்களை உள்ளடக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.