செம்மணி புதைக்குழி, அநுர அரசுக்கு அக்கினி பரீட்சை: மனோகணேசன் தெரிவிப்பு
இலங்கையர் அரசு எனக் கூறி, ஆட்சிக்கு வந்திருக்கும் அநுர அரசுக்கு அக்கினி பரீட்சை. இதை கடந்து தம்மை நிரூபிக்க வேண்டிய கடப்பாடு இந்த அரசு தலைவருக்கு இருக்கிறது.

செம்மணி புதைகுழு விடயத்தில் நீதியை நிலைநாட்ட வேண்டியது தற்போது ஆட்சியில் உள்ள அநுரகுமார திசாயக்க தலைமையிலான அரசாங்கத்தின் கடமையாகின்றது. ஆகவே செம்மணிப்புதைகுழியானது அவர்களுக்கான அக்கினி பரீட்சையாக உள்ளது என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார்.
கொழும்பு கோட்டை ரயில்வே நிலையத்தில் நடைபெற்ற செம்மணி மனிதப்புதைகுழிக்கு நீதிகோரி நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தினை அடுத்து ஊடகவியலாளர்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்ததார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தோண்ட, தோண்ட வெட்டி சாய்க்க பட்ட அப்பாவி தமிழ் பெண்களின், குழந்தைகளின், பொது மக்களின் எலும்பு கூடுகளை வெளி கொணறும் செம்மணி ஈழத்தமிழ் உடன் பிறப்புகள் ஆண்டாண்டு காலமாக எதிர் கொண்டு வரும் அரச பயங்கர வாதத்தின் ஒரு அடையாளம்.
இலங்கையர் அரசு எனக் கூறி, ஆட்சிக்கு வந்திருக்கும் அநுர அரசுக்கு அக்கினி பரீட்சை. இதை கடந்து தம்மை நிரூபிக்க வேண்டிய கடப்பாடு இந்த அரசு தலைவருக்கு இருக்கிறது.
இது மட்டுமல்ல, தெற்கிலும் பல புதை குழிகள் இருப்பதாக ஆதாரங்கள் ஆங்காங்கே வெளிப்பட்டுள்ளன. அவற்றையும் ஆய்வு செய்து நீதியை நிலை நாட்டுங்கள். எங்களது நல்லாட்சியில் பல்வேறு காரியங்களை நாமும், வட,கிழக்கு தமிழ் கட்சிகளும் நிர்ப்பந்தம் செய்து ஆரம்பித்தோம்.
ஐ.நா.சபைக்கு கொண்டு போனோம். தீர்மானங்கள் நிறைவேற்றினோம். அரசியல் கைதிகளை கணிசமாக விடுவித்தோம். காணிகள் கணிசமாக விடுவித்தோம். காணாமல் போனோர் அலுவலகம், இழப்பீட்டு அலுவலகம், ஆகியவற்றை அமைத்தோம். யுத்த அவலத்துக்கு மூல காரணமான தேசிய இன பிரச்சினைக்கு "அதிகாரபகிர்வு" தீர்வை தேடி, புதிய அரசியலமைப்பு பணியை செய்தோம்.
அனைத்தையும் நான்கு ஆண்டுகளில் செய்து முடிக்க முடியவில்லை. அவ்வாறு செய்து முடிக்கவும் முடியாது. ஆனால் நாம் நல்ல ஆரம்பத்தை தந்தோம். நாம் ஆரம்பித்த அந்த பணிகளை அப்படியே முன்னே கொண்டு செல்ல வேண்டியதே இந்த அரசின் கடமை. முதலிப் காணாமல் போனோர் அலுவலக அதிகாரிகளை அங்கே அனுப்புங்கள். முதற்கட்டமாக அப்பணியையாவது செய்யுங்கள் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவைக் கோருகின்றேன் என்றார்.