ஆஸி.-இலங்கை வலுவான ஒத்துழைப்பு: ஆளுநர் நாயகத்துடனான சந்திப்பில் பிரதமர் அவதானம்
இலங்கைக்கு வருகை தந்துள்ள அவுஸ்திரேலிய ஆளுநர் நாயகம் சமந்தா ஜோய் மோஸ்டினுக்கும், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கும் இடையிலான சந்திப்பு 08-08-2025 அன்று அலரிமாளிகையில் நடைபெற்றது.
அனைவராலும் பெற்றுக்கொள்ளக்கூடிய, உயர்தரக் கல்வி முறைமையைக்கொண்டிருப்பதற்காக அமல்படுத்தப்படவிருக்கும், இலங்கையின் புதிய கல்வி மறுசீரமைப்பு தொடர்பில் அவுஸ்ரேலிய ஆளுநர் நாயகத்திற்கு பிரதமர் விளக்கமளித்தார்.
இலங்கைக்கு வருகை தந்துள்ள அவுஸ்திரேலிய ஆளுநர் நாயகம் சமந்தா ஜோய் மோஸ்டினுக்கும், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கும் இடையிலான சந்திப்பு 08-08-2025 அன்று அலரிமாளிகையில் நடைபெற்றது.
இச்சந்திப்பானது இலங்கைக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை மீண்டும் உறுதிப்படுத்துவதற்கான ஒரு முக்கியமான சந்தர்ப்பமாக அமைந்தது.
பிரதமரால் வரவேற்கப்பட்ட ஆளுநர் நாயகத்துடன் நடைபெற்ற கலந்துரையாடலின்போது, குறிப்பாக அரசியல்,பொருளாதாரம், விளையாட்டு ஆகிய துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான ஒத்துழைப்பை கட்டியெழுப்புவதன் முக்கியத்துவம் வலியுறுத்தப்பட்டது.
அத்தோடு அனைவராலும் பெற்றுக்கொள்ளக்கூடிய, உயர்தரக் கல்வி முறைமையைக் கொண்டிருப்பதற்காக அமல்படுத்தப்படவிருக்கும், இலங்கையின் புதிய கல்வி மறுசீரமைப்பு தொடர்பில் ஆளுநர் நாயகத்திற்கு பிரதமர் விளக்கமளித்தார்.
அவுஸ்திரேலியாவின் கல்வி முறைமை குறித்து ஆளுநர் நாயகம் பிரதமருக்குத் தெளிவுபடுத்தியதுடன், இத்துறையில் மிக நெருக்கமாக இணைந்து செயற்படுவதற்கான தமது ஆர்வத்தினையும் வெளிப்படுத்தினார்.
இரு தரப்பினரும் பாலின சமத்துவத்துக்கான தமது நடைமுறைகளை பிரதிபலிக்கும் வகையில், அரசியலில் பெண்களின் பங்கேற்பையும், தலைமைத்துவத்தையும் அதிகரிப்பதன் முக்கியத்துவம் குறித்தும் பயனுள்ள கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர்.
இலங்கையின் அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கு அவுஸ்திரேலியா தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்கும் என உறுதியளித்த ஆளுநர் நாயகம், பல துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் கலந்துரையாடினார்.





