புலமைப்பரீட்சையில் யாழ்.இந்து மாணவன் சாதனை
யாழ்ப்பாணத்துக்கு 132 வெட்டுப்புள்ளியாகும். கிளிநொச்சி, மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, மட்டக்களப்பு மாவட்டங்களுக்கு சிங்கள மொழி மூலம் வெட்டுப்புள்ளி 127 ஆகும்.
2025 ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளன. அதற்கமைய காலி மாவட்டம் அம்பலாங்கொட ஸ்ரீ தேவானந்தா கல்லூரியின் மாணவியான ஷானுதி அமையா அஸ்வினி, 198 புள்ளிகளைப் பெற்று நாடளாவிய ரீதியில் முதலிடத்தைப் பெற்றுள்ளார். இதேவேளை, தமிழ் மொழிமூலம் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி ஆரம்பப் பாடசாலை மாணவன் ஆனந்தசோதி லக்ஷண் 194 புள்ளிகளைப் பெற்று அதிகூடிய புள்ளிகளைப் பெற்றுள்ளார்.
கடந்த ஆகஸ்ட் 10ஆம் திகதி ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கான புலமைப் பரிசில் பரீட்சை இடம்பெற்றது. 24 நாட்கள் என்ற மிகக் குறுகிய காலத்துக்குள் பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன. இம்முறை சிங்கள மொழி மூலம் 229 303 மாணவர்களும், தமிழ் மொழி மூலம் 74 368 மாணவர்களும் பரீட்சைக்கு தோற்றியிருந்தனர். இவர்களில் 51 969 மாணவர்கள் மாவட்டங்களுக்கு வழங்கப்பட்டுள்ள வெட்டுப்புள்ளிகளை விட அதிக புள்ளிகளைப் பெற்றுள்ளனர். இது 17.11 சதவீதமாகும். கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 0.16 சதவீத அதிகரிப்பை காண்பிக்கிறது. 213 872 மாணவர்கள் 70க்கும் அதிகமான புள்ளிகளைப் பெற்றுள்ளனர். இது 70.43 சதவீதமாகும் என பரீட்சைகள் ஆணையாளர் இந்திகா குமாரி தெரிவித்தார்.
இதேவேளை மாவட்டங்களுக்கான வெட்டுப்புள்ளிகளும் பரீட்சை திணைக்களத்தினால் வெளியிடப்பட்டள்ளன. அதற்கமைய கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, மாத்தளை, காலி, மாத்தறை, குருணாகல் மற்றும் கேகாலை மாவட்டங்களுக்கு சிங்கள மொழி மூலம் வெட்டுப்புள்ளி 140 ஆகும். இந்த மாவட்டங்களுக்கு தமிழ் மொழி மூலம் வெட்டுப்புள்ளி 134 ஆகும். நுவரெலியா மாவட்டத்தில் இரு மொழிகளுக்கும் வெட்டுப்புள்ளி 132 ஆகும். அம்பாந்தோட்டை மாவட்டத்துக்கு முறையே 135 மற்றும் 132 வெட்டுப்புள்ளிகளாகும்.
யாழ்ப்பாணத்துக்கு 132 வெட்டுப்புள்ளியாகும். கிளிநொச்சி, மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, மட்டக்களப்பு மாவட்டங்களுக்கு சிங்கள மொழி மூலம் வெட்டுப்புள்ளி 127 ஆகும். அம்பாறை, திருகோணமலை, புத்தளம், அநுராதபுரம், பொலன்னறுவை மாவட்டங்களுக்கு வெட்டுப்புள்ளி 133 ஆகும். பதுளை மற்றும் மொனராகலை மாவட்டங்களுக்கு 134 வெட்டுப்புள்ளியாகும். இரத்தினபுரி மாவட்டத்துக்கு 140 ஆகும்.
மேலும் கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, மட்டக்களப்பு, அம்பாறை, பதுளை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களுக்கு தமிழ் மொழி மூலம் 132 வெட்டுப்புள்ளியாகும். மன்னார், திருகோணமலை, புத்தளம், அநுராதபுரம், பொலன்னறுவை மாவட்டங்களுக்கான தமிழ் மொழி மூல வெட்டுப்புள்ளி 131 ஆகும்.





