உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் அசாத் மௌலானவிடம் வாக்குமூலம்
இலங்கையிலிருந்து தப்பிச் சென்றதாக கருதப்படும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய மற்றுமொரு முக்கிய சந்தேகநபரைப் பற்றிய தகவல்களையும் இக்குழு திரட்டி வருவதாகவும் அறியமுடிகின்றது.
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பாக அசாத் மௌலானவிடத்தில் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் மூலம் அறிய முடிகின்றது.
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் குறித்த விசாரணைகளை முன்னெடுப்பதற்காக, இலங்கை குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளர் ஷானி அபேசேகர தலைமையிலான உயர் மட்டக் குழுவொன்று கடந்தவாரம் பிரான்ஸிக்குத் விஜயம் மேற்கொண்டிருந்தது.
இந்த பயணத்தின் முதன்மை நோக்கம், தற்போது ஐரோப்பாவில் அரசியல் புகலிடம் கோரியுள்ள அசாத் மௌலானாவை நேரடியாகச் சந்தித்து வாக்குமூலம் பெறுவதாகும். 'சனல் 4' ஆவணப்படத்தில் அவர் முன்வைத்த குற்றச்சாட்டுகள் குறித்து மேலதிக டிஜிட்டல் ஆதாரங்கள் மற்றும் ஆவணங்களை அவரிடமிருந்து சேகரிக்க இந்த குழு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அண்மையில் கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் குற்றப்புலனாய்வுப்பிரிவு பி- அறிக்கையை தாக்கல் செய்திருந்த நிலையில் அசாத் மௌலானவிடத்தில் வாக்குமூலம் பெறவேண்டியதன் அவசியம் பற்றி நீதிபதியால் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் அசாத் மௌலானவிடத்தில் வாக்குமூலம் பெறுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக நிதிமன்றுக்கு குற்றப்புலனாய்வு பிரிவினரும், சட்டமா அதிபர் திணைக்களமும் குறிப்பிட்டிருந்தது.
அதனையடுத்தே குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் ஷானி அபேசேகர தலைமையிலான குழுவினர் பிரான்ஸுக்குச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிரான்ஸில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் வைத்து அசாத் மௌலானவிடத்தில் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக தெரியவருவதோடு குறித்த விசாரணைக் குழுவானது பிரான்ஸ் நாட்டுப் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் சர்வதேச பொலிஸான இன்டர்போல் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் தனது பணிகளை முன்னெடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, இலங்கையிலிருந்து தப்பிச் சென்றதாக கருதப்படும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய மற்றுமொரு முக்கிய சந்தேகநபரைப் பற்றிய தகவல்களையும் இக்குழு திரட்டி வருவதாகவும் அறியமுடிகின்றது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக நடைபெற்று வரும் விசாரணைகளின் ஒரு பகுதியாக, குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரி தற்போது வெளிநாடு சென்றுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மஹரகமையில் இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் மே தினக் கூட்டத்தில் உரையாற்றிய போது தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.





