கொழும்பிலும் அண்மித்த பகுதிகளிலும் நான்கு துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்கள்
நேற்றும் நேற்றுமுன்தினமும் நாட்டின் நான்கு வெவ்வேறு பிரதேசங்களில் துப்பாக்கிப் பிரயோகம் பதிவாகியுள்ளது.
நாட்டில் இடம்பெற்ற நான்கு வெவ்வேறு துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களில் 26 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார்.
துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் 05-09-2025, 06-09-2025 அன்று கொழும்பு கிராண்ட்பாஸ், மருதானை, நீர்கொழும்பு மற்றும் பாணந்துறை ஆகிய பிரதேசங்களில் பதிவாகியுள்ளதுடன் இதன்போது சந்தேக நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கமைய இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் 96 துப்பாக்கி சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளதுடன் இதில் 50 பேர் உயிரிழந்துள்ளனர்.
கிராண்ட்பாஸ் துப்பாக்கிச்சூடு
கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஹவத்த மணிக்கூட்டு கோபுரத்துக்கு அருகாமையில் நேற்றுமுன்தினம் இரவு 11.45 மணியவில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிள் ஒன்றில் வருகை தந்த அடையாளம் தெரியாத இருவர் நபர் ஒருவரை இலக்கு வைத்து இந்தத்துப்பாக்கிப்பிரயோகத்தை மேற்கொண்டு விட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த துப்பாக்கிச் சூட்டுக்கு ரிவோல்வர் ரக துப்பாக்கி பயன்படுத்தப்பட்டுள்ளதுடன் சம்பவத்தின் போது காயமடைந்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
26 வயதுடைய கொட்டாஞ்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே சம்பவத்தின் போது உயிரிழந்துள்ளார். தொலைபேசி அழைப்பொன்றை மேற்கொண்டு குறித்த இளைஞரை சம்பவ இடத்துக்கு வரவழைத்து இந்த துப்பாக்கிச்சூட்டை மேற்கொண்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. எவ்வாறாயினும் உயிரிழந்த நபர் எந்தவித குற்ற செயல்களுடன் தொடர்புடையவர் அல்லர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில் துப்பாக்கிதாரிகளுக்கு துப்பாக்கியை பெற்றுக்கொடுத்து அவர்களுக்கு உதவி ஒத்தாசை வழங்கிய குற்றச்சாட்டில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பிரதிப் பொலிஸ் மாஅதிபர் நிஷாந்த டி சொய்சா தெரிவித்துள்ளார். சம்பவம் தொடர்பில் கிராண்ட்பாஸ் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மருதானை துப்பாக்கிச்சூடு
மருதானை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பஞ்சிகாவத்தை பிரதேசத்தில் நேற்று அதிகாலை 1.40 மணி அளவில் மற்றுமொரு துப்பாக்கிப் பிரயோகம் நடைபெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிள் ஒன்றில் வருகை தந்த அடையாளம் தெரியாத இருவர் நபரொருவரை இலக்கு வைத்து இந்தத்துப்பாக்கிப்பிரயோகத்தை மேற்கொண்டு விட்டு தப்பிச்சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது பலத்த காயமடைந்த குறித்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
44 வயதுடைய பஞ்சிகாவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் சமப்வத்தின் போது காயமடைந்துள்ளார்.
குறித்த நபர் திட்டமிட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர் என அறியப்படும் '''பஞ்சிகாவத்தை நெவில்'' என்பவருடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய ஒருவரென பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் '' கெசெல்வத்த கவி'' என அழைக்கப்படும் பாதாள உலகக்குழுவினரால் இந்தத்துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் மோட்டார் சைக்கிளின் ஓட்டுநர் புளுமென்டல் பிரதேசத்தில் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன் துப்பாக்கிப் பிரயோகத்தில் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் மோட்டார் சைக்கிள் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.
மேலும் பிரதான துப்பாக்கிதாரி அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அவரை கைது செய்வதற்கான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நீர்கொழும்பு துப்பாக்கிச்சூடு நீர்கொழும்பு குட்டிதுவ பிரதேசத்தில் நேற்று அதிகாலை 1.30 மணியளவில் வீடொன்றை இலக்கு வைத்து துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிள் ஒன்றில் வருகை தந்த அடையாளம் தெரியாத இருவர் இந்தத்துப்பாக்கிப்பிரயோகத்தை மேற்கொண்டு விட்டு தப்பிச்சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லையென பொலிஸார் தெரிவித்தனர். தனிப்பட்ட தகராறு காரணமாக இந்தத்துப்பாக்கிப்பிரயோகம் இடம் பெற்றிருக்கலாமென சந்தேகம் வெளியிட்டுள்ள பொலிஸார் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை கைது செய்ய மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
பாணந்துறை துப்பாக்கிச்சூடு
பாணந்துறை அலுபோவமுல்ல சந்தகலவத்த பிரதேசத்தில் உள்ள வர்த்தக நிலையமொன்றின் உரிமையாளரை இலக்கு வைத்து நேற்று முற்பகல் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தனிப்பட்ட தகராறு காணரமாக இந்தத் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆரம்ப கட்டவிசாரணைகளில் வெளிக்கொணரப்பட்டுள்ளது.
இந்ததுப்பாக்கிப்பிரயோகம் வெளிநாட்டில் தலைமறைவாகி இருக்கும் பாதாள உலக குழுவொன்றின் உறுப்பினரால் ஒழுங்கமைக்கப்பட்டிருக்கலாமென பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த நிலையில் நேற்றும் நேற்றுமுன்தினமும் நாட்டின் நான்கு வெவ்வேறு பிரதேசங்களில் துப்பாக்கிப் பிரயோகம் பதிவாகியுள்ளது. இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார்.
இதற்கமைய இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் 96 துப்பாக்கி சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதில் 50 பேர் உயிரிழந்துள்ளதுடன் 53 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.





