இந்து சமுத்திர அமைதியை பாதுகாப்பதில் இலங்கை - இந்தியாவுக்கு கூட்டுப் பொறுப்பு
நாகரிக மற்றும் தொழில்நுட்ப சக்தியாக இந்தியா உருவெடுப்பதை எடுத்துக்காட்டி, அதன் டிஜிட்டல் ஜனநாயகம், தயாரிப்புகள் மற்றும் நம்பகமான உலகளாவிய கூட்டாண்மைகளை போஷிப்பதில் கண்டு வரும் வெற்றிகள் தொடர்பிலும் அவர் பாராட்டினார்.
இந்து சமுத்திரத்தை அமைதி மற்றும் ஒத்துழைப்புக்கான வலயமாக பாதுகாப்பதற்கான இலங்கை - இந்திய கூட்டுப் பொறுப்பை வலியுறுத்தியுள்ள எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, இந்தியாவின் தொழில்துறை மற்றும் தொழில்நுட்ப முன்முயற்சிகளுடன் இணைவதற்கான இலங்கையின் விருப்பத்தையும் தெரியப்படுத்தியுள்ளார்.
இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, புது டில்லியில் உலக விவகாரங்களுக்கான இந்திய பேரவையில் சிறப்புரை நிகழ்த்தினார்.
இதன் போதே அவர் இந்த விடயங்களைத் தெரிவித்துள்ளார். இதில், உலகளாவிய இராஜதந்திர நடவடிக்கைகள் தொடர்பில் இந்தியாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க மற்றும் பரிணாமம் கண்டு வரும் வகிபாகத்தை பாராட்டினார்.
அதற்கமைய இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான ஆழமான நாகரிக மற்றும் ஜனநாயக உறவுகளை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மீண்டுமொறு முறை உறுதிப்படுத்தியதோடு, இந்தியப் பெருங்கடலை அமைதி மற்றும் ஒத்துழைப்புக்கான வலயமாக பாதுகாப்பதற்கான கூட்டுப் பொறுப்பையும் இங்கு சுட்டிக்காட்டினார்.
மேலும் பூகோளப் பொருளாதாரத்தின் எழுச்சி மற்றும் வர்த்தகம், பாதுகாப்பு முன்னுரிமைகளை ஒருங்கிணைப்பதன் மூலம் எதிர்பார்க்கப்படும் கட்டமைப்பு மாற்றத்தை எட்டிக் கொள்ள முடியும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
நாகரிக மற்றும் தொழில்நுட்ப சக்தியாக இந்தியா உருவெடுப்பதை எடுத்துக்காட்டி, அதன் டிஜிட்டல் ஜனநாயகம், தயாரிப்புகள் மற்றும் நம்பகமான உலகளாவிய கூட்டாண்மைகளை போஷிப்பதில் கண்டு வரும் வெற்றிகள் தொடர்பிலும் அவர் பாராட்டினார்.
குறிப்பாக மின்சார வாகனங்கள் மற்றும் விநியோக சேவைத் துறைகளில் இந்தியாவின் தொழில்துறை மற்றும் தொழில்நுட்ப முன்முயற்சிகளுடன் இணைவதற்கான இலங்கையின் விருப்பத்தையும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இங்கு சுட்டிக்காட்டினார்.
நியாயமான மற்றும் சமநிலையானதொரு உலகளாவிய ஒழுங்கை வடிவமைக்க ஐக்கிய நாடுகள பாதுகாப்புப் பேரவையில் நிரந்தர உறுப்பினர் இடத்தைப் பெற்றுக் கொள்வதற்கு இந்தியாவுக்கு காணப்படும் இயலுமை குறித்து எதிர்க்கட்சித் தலைவர் தனது நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.





