திருமலை மாவட்ட பாதுகாப்பு தொடர்பில் கலந்துரையாடல்
கலந்துரையாடலின் ஆரம்பத்தில் திருகோணமலை மாவட்டத்தின் கரையோப் பாதுகாப்பை வலுப்படுத்தல் உள்ளிட்ட செயற்பாடுகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.
திருகோணமலை மாவட்டத்தின் பாதுகாப்பு தொடர்பில் முக்கிய கலந்துரையாடலொன்று நடைபெற்றுள்ளது.
வெளிவிவகார அமைச்சில் 27-09-2025 நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுத் தலைவரும் பதில் வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா, பதில் பாதுகாப்பு அமைச்சர் அருண ஜயசேகர, பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் (ஓய்வு பெற்ற) சம்பத் துய்யகொந்த ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில் முப்படைகளின் அதிகாரிகளும் பங்கேற்றிருந்தனர்.
இக்கலந்துரையாடலின் ஆரம்பத்தில் திருகோணமலை மாவட்டத்தின் கரையோப் பாதுகாப்பை வலுப்படுத்தல் உள்ளிட்ட செயற்பாடுகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது. தொடர்ந்து, போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தல், ஒழுங்கமைக்கப்பட்ட குழுக்கள் மற்றும் சட்டவிரோதச் செயற்பாடுகளில் பங்கேற்கும் தரப்புக்கள் உள்ளிட்டவற்றை கட்டுப்படுத்துவதற்கான தீவிரமான நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயப்பட்டது.
அதனையடுத்து, முப்படைகளிடமுள்ள தனியார் காணிகளை படிப்படியாக விடுப்பது சம்பந்தமாக ஆராயப்பட்ட நிலையில் குறித்த காணிகளை விடுவிப்பதற்குரிய நடவடிக்கைகளை தாமதமின்றி முன்னெடுக்குமாறு பதில் அமைச்சர் அருண் ஹேமசந்திரா வலியுறுத்திய நிலையில், விரைந்து உரிய செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என்று பாதுகாப்பு துறையின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





