தமிழர்களின் கரிசனைகள் உள்வாங்கப்பட்டிருப்பதை வரவேற்கிறோம் -இலங்கைத் தமிழரசுக்கட்சி
இலஞ்சம், ஊழல் மற்றும் போதைப்பொருட்களுடன் சம்பந்தப்பட்ட பாதாள உலகக்குழுக்களுக்கு எதிராக அரசாங்கம் தற்போது எடுத்துவரும் நடவடிக்கைகளை வரவேற்கிறோம்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் அறிக்கையில் யுத்தகாலத்தில் இடம்பெற்ற குற்றங்களுக்கான பொறுப்புக்கூறல் சம்பந்தமாக எவ்வித முன்னேற்றமும் எட்டப்படாமை உள்ளடங்கலாக தமிழ் மக்களின் கரிசனைகள் சுட்டிக்காட்டப்பட்டிருப்பதை வரவேற்பதாகத் தெரிவித்துள்ள இலங்கைத் தமிழரசுக்கட்சி, இருப்பினும் அரசாங்கம் ஆட்சிபீடமேறி இரண்டு வருடங்கள் கடந்தும் புதிய அரசியலமைப்பு உருவாக்கம் உள்ளிட்ட தமிழர் நலன் சார்ந்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமை குறித்து ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியுள்ளது.
ஜெனிவாவில் ஆரம்பமான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 63 ஆவது கூட்டத்தொடரில் 08-09-2026அன்று அமர்வின்போது 'இல்ஙகையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துதல்' தொடர்பில் அடையப்பட்டுள்ள முன்னேற்றங்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்கின் எழுத்துமூல அறிக்கை பிரதி உயர்ஸ்தானிகர் அவா டபோவினால் வாசிக்கப்பட்டது.
ஆயுதமோதல் இடம்பெற்ற காலப்பகுதியில் அரச படையினராலும், தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பினராலும் நிகழ்த்தப்பட்ட மீறல்கள் தொடர்பில் இன்னமும் பொறுப்புக்கூறல் உறுதிப்படுத்தப்படவில்லை. முக்கிய வழக்குகள் குறித்த குற்றவியல் விசாரணைகள் தொடர்ந்து தாமதமடைகின்றன என சுட்டிக்காட்டிய அவர், வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களுக்கு என்ன நேர்ந்தது என்ற கேள்வி இன்னமும் பதிலின்றித் தொடர்வதாகக் கரிசனை வெளியிட்டார்.
இந்நிலையில் இதுபற்றி இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரனால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரின் இன்றைய (நேற்றைய) அமர்வில் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் அறிக்கையில் இலங்கையில் யுத்தகாலத்தில் இடம்பெற்ற குற்றங்களுக்கான பொறுப்புக்கூறல் சம்பந்தமாக எவ்வித முன்னேற்றமும் எட்டப்படவில்லை என்றும், இராணுவம் கையகப்படுத்தியுள்ள காணிகளை விடுவித்தல், வலிந்து காணாமலாக்கப்படல்கள், அரசியல் கைதிகளின் விடுதலை மற்றும் செம்மணி மனிதப்புதைகுழி உள்ளிட்ட தமிழ் மக்களின் கரிசனைகளைச் சுட்டிக்காட்டியமையை வரவேற்கிறோம். மாகாணசபைத்தேர்தல்கள் நீண்டகாலமாக நடத்தப்படாமல் இருக்கின்றன என்று கூறப்பட்டமையையும் அவதானித்துள்ளோம்.
இலஞ்சம், ஊழல் மற்றும் போதைப்பொருட்களுடன் சம்பந்தப்பட்ட பாதாள உலகக்குழுக்களுக்கு எதிராக அரசாங்கம் தற்போது எடுத்துவரும் நடவடிக்கைகளை வரவேற்கிறோம்.
இருப்பினும் ஆட்சிபீடமேறி இரண்டு வருடங்கள் கடந்தும் தமிழ் மக்கள் தொடர்பான எந்தவொரு விடயத்திலும், குறிப்பாக தமிழ் மக்களின் நீண்டகால அபிலாஷைகளைப் பூர்த்திசெய்வதற்கான புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பில் தமது தேர்தல் வாக்குறுதிகளைக் கூட அரசாங்கம் நிறைவேற்றவில்லை என்பதால் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளோம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.





