தசாப்தமொன்றுக்கு பலமாக இருப்போம் - மே தின உரையில் ஜனாதிபதி அநுரகுமார
தித்வா புயல்தாக்கத்தின் போது ஏற்பட்ட பாதிப்புக்களில் இருந்து மீள்வதற்கு 50 ஆயிரம் கோடி ரூபா திறைசேரியால் ஒதுக்கப்பட்டது.
ஒட்டுமொத்த மக்களின் நம்பிக்கையும் வென்றுள்ள எமது அரசாங்கத்தை எவராலும் வீழ்த்த முடியாது. ஒரு தசாப்தத்திற்கு பலமாக ஆட்சியில் இருப்போம். இந்த காலப்பகுதியில் நாட்டை சிறந்த முறையில் அபிவிருத்தி செய்வோம். அதேபோல் எதிர்கால அரசியலுக்கான உறுதிப்பாட்டையும் வலுப்படுத்துவோம் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சூளுரைத்தார்
அரசியலில் வங்குரோத்து நிலையடைந்துள்ள தரப்பினர் கலக்கமடைவது ஒன்றும் ஆச்சரியத்துக்குரியதல்ல, இந்தாண்டு பலர் சிறைச்செல்வார்கள். சர்ச்சைக்குரிய 10 வழக்குகள் இந்த மாதம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுமெனவும் அவர் குறிப்பிட்டார்,
நுவரெலியா நகரசபை மைதானத்தில் 01-05-2026அன்று இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் மே தின கூட்டத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது: பண பலம், குடும்ப செல்வாக்கு என்ற பின்னணியில் நான் அரசியலுக்கு வரவில்லை. மக்களின் ஆதரவுடன் தான் ஆட்சிக்கு வந்தேன். ஆகவே மக்களின் நலன்களை முன்னிலைப்படுத்தியே செயற்படுகிறோம். இந்த ஆண்டு தான் நாங்கள் முதன்முறையாக நுவரெலியாவில் மே தின கூட்டத்தை நடத்தினோம்.
ஆனால் கடந்த காலங்களில் நுவரெலியாவில் மே தின கூட்டத்தை நடத்தியவர்கள். இம்முறை மே தின கூட்டத்தை நடத்தவில்லை. மலையக மக்கள் இன்று எம்முடன் உள்ளார்கள். அவர்களின் நலன்சார்ந்து பல தீர்மானங்களை எடுத்துள்ளேன். மலையக மக்களும், வடக்கு, கிழக்கு தமிழ் மக்களும் எம்மீது நம்பிக்கை கொண்டுள்ளார்கள்.
உழைக்கும் மக்களை முன்னிலைப்படுத்தியே செயற்படுகிறோம். தித்வா புயல்தாக்கத்தின் போது ஏற்பட்ட பாதிப்புக்களில் இருந்து மீள்வதற்கு 50 ஆயிரம் கோடி ரூபா திறைசேரியால் ஒதுக்கப்பட்டது. ஒவ்வொரு துறைகளுக்கும் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.
தித்வா புயல் தாக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புக்களில் இருந்து மீளும்போது பூகோள யுத்த சூழலுக்கு முகங்கொடுக்க நேரிட்டுள்ளது. மத்திய கிழக்கின் மோதலை எம்மால் தீர்மானிக்க முடியாது. இந்த மோதலினால் எரிபொருள் விலை சடுதியாக உயர்வடைந்துள்ளது.
எரிபொருள் விலையேற்றத்தை தொடர்ந்து ஏற்படும் பாதிப்புக்களில் இருந்து மீள்வதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்படும் தொழிற்றுறையினருக்கு நிவாரணமளிப்பதற்கு 10 ஆயிரம் கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. மக்கள் நெருக்கடிக்குள்ளாகும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் மக்களுக்கா முன்னிற்போம். ஏனெனில் இது உழைக்கும் வர்க்கத்தின் அரசாங்கமாகும்.
அரசாங்கத்தை வீழ்த்த முடியாது
பூகோள நெருக்கடிகளால் தோற்றம் பெற்றுள்ள பாதிப்புக்களை சிதறியுள்ள எதிர்க்கட்சியினர் அரசியல் இலாபத்துக்காக இன்று ஒன்று கூடுகிறார்கள்.10 அல்லது 15 பேர் ஒன்று சேர்ந்து வீதியில் இறங்கி அரசாங்கம் வீட்டுக்கு போக வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். பின்னர் அவர்கள் வீடுகளுக்கு செல்கிறார்கள்.
இதுதான் உண்மை. இவ்வாறு போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் யார் என்று ஆராய்ந்து பார்க்க வேண்டும். சிதறியுள்ள அரசியல் கட்சிகளின் முகவர்களாகவே இவர்கள் செயற்படுகிறார்கள்.
எதிர்க்கட்சியினர் முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் ஒன்றிணைந்து பேசுகிறார்கள். பின்னர் அரசியல் கட்சிகளில் ஒன்றிணைகிறார்கள். வெளியில் வந்து அரசாங்கத்தை வீழ்த்த பிரபல்யமான கூட்டணி அமைப்பதாக குறிப்பிடுகிறார்கள். ஒருசில ஊடகங்கள் இவற்றை பெரிப்பித்துக் காட்டுகின்றன.
எமது அரசாங்கத்தை எவராலும் வீழ்த்த முடியாது. ஒரு தசாப்தத்துக்கு பலமாக ஆட்சியில் இருப்போம். இந்த காலப்பகுதியில் நாட்டை சிறந்த முறையில் அபிவிருத்தி செய்வோம். அதேபோல் எதிர்கால அரசியலுக்கான உறுதிப்பாட்டையும் வலுப்படுத்துவோம்.
ஊழல்வாதிகள் பலர் இந்தாண்டு சிறை
சட்டத்தின் ஆட்சியை முறையாக அமல்படுத்துகையிலும், பாதாள குழுக்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை முன்னெடுக்கின்ற போதிலும் நாட்டு மக்கள் கலக்கமடையவில்லை. எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் தான் கலக்கமடைந்து மக்களின் கவனத்தை திசைத்திருப்ப ஏதாவதொன்றை சொல்லித் திரிகிறார்கள்.
இலஞ்ச ஊழல் ஆணைக்குழு கடந்த கால முறைப்பாடுகளின் விசாரணைகளை துரிதப்படுத்தியுள்ளன. குற்றப்புலனாய்வுத் திணைக்களம் தற்போது சுயாதீனமாக செயற்படுகிறது. சர்ச்சைக்குரிய பல வழக்கு விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. இதனால் சிறைச்செல்ல வேண்டிய பலர் கலக்கமடைந்துள்ளார்கள்.
நிலுவையில் உள்ள பல வழக்குகளின் விசாரணைகளை துரிதப்படுத்த முன்னாள் அமைச்சர்கள் வசித்த உத்தியோகபூர்வ இல்லங்கள் தற்போது நீதிமன்றங்களாக மாற்றியமைக்கப்பட்டுள்ளன. முன்னாள் சுகாதார அமைச்சர் அவர் வசித்த வீட்டில் இன்று குற்றவாளி கூண்டில் இருந்து சாட்சியமளிக்கிறார்.
இந்த ஆண்டு பலர் சிறைக்குச் செல்வார்கள். இந்த மாதம் பிரதான 10 பேரின் சர்ச்சைக்குரிய வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன. முன்னாள் ஜனாதிபதிகள், முன்னாள் பிரதமர்கள், ஜனாதிபதிகளின் மகன்கள், மைத்துனர்கள், மருமகன்கள் மற்றும் அவர்களின் உறவினர்கள் என்று பலர் இனி வழக்கு வரிசையில் நிற்பார்கள்.
கடந்த காலங்களில் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நிலையில் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றவர்களும் வெகுவிரைவில் நாட்டுக்கு அழைத்து வரப்படுவார்கள். இவ்வாறான கடுமையான தீர்மானங்களை எடுத்துள்ளதால் இன்று சிதறியுள்ள எதிர்க்கட்சியினர் ஒன்றிணைந்துள்ளார்கள். கலக்கமடைந்துள்ளார்கள்.இவர்கள் கலக்கமடைவதொன்றும் ஆச்சரியமல்ல,
பெருந்தோட்ட மக்களின் காணி மற்றும் வீட்டு பிரச்சினைக்கு தீர்வு
மலையக மக்கள் என் மீதும், எமது அரசாங்கத்தின் மீதும் நம்பிக்கை கொண்டுள்ளார்கள். அந்த நம்பிக்கையை நிச்சயம் பாதுகாப்பேன். காணி பிரச்சினைகளுக்கு நடைமுறைசார்ந்த பல பிரச்சினைகள் காணப்படுகின்றன.
அவற்றுக்கு இருதரப்பு பேச்சுவார்த்தைகள் ஊடாக தீர்வு பெற்றுக்கொள்ளப்படும். உழைக்கும் மலையக மக்களுக்கு காணி மற்றும் வீட்டு உரிமையை நிச்சயம் பெற்றுக்கொடுப்பேன். அத்துடன் அவர்களின் வாழ்வாதாரத்தையும் பல்வேறு வழிகளில் மேம்படுத்துவேன்.
தமிழ் மொழிமூல ஆசிரியர் பற்றாக்குறைக்கு தீர்வு
மலையக இளைஞர் யுவதிகள் அவர்களின் பெற்றோர் எதிர்கொண்ட துன்பங்களில் இருந்து மீள வேண்டும். கல்வியே அவர்களின் எதிர்காலத்துக்கான சிறந்த சக்தியாகும். மலையக கல்வி மேம்பாட்டுக்கு விசேட அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. தமிழ் மொழி மூல ஆசிரியர் பற்றாக்குறைக்குத் தீர்வு காணும் பொருட்டு கல்வியியல் கல்லூரிகளுக்கு பெருந்தோட்ட பகுதிகளில் இருந்து எதிர்வரும் காலங்களில் இளைஞர், யுவதிகள் அதிகளவில் இணைத்துக் கொள்ளப்படுவார்கள்.
பொருளாதார வளர்ச்சி
ஆட்சிக்கு வந்து ஒன்றரை வருட காலப்பகுதிகளில் அடிப்படை சமூக கட்டமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளோம். மக்களின் அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றும் பொருட்டு அடிப்படை தேவை கட்டமைப்பில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தித்வா புயல் தாக்குதலால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு நிவாரணமளிப்பதற்கும், மத்திய கிழக்கு போர் சூழலின் தாக்கங்களுக்கும் நிவாரணமிப்பதற்கு திறைசேரியின் கையிருப்பில் இருந்த நிதியே ஒதுக்கப்பட்டது. கடன்பெறவில்லை. புதிதாக நாணயம் அச்சிடவில்லை.பொருளாதார வளர்ச்சியை ஸ்திரப்படுத்துவதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
மக்களுக்காகவே நான் செயற்படுகிறேன். பணம் மற்றும் குடும்ப அரசியல் ஊடாக நான் பதவிக்கு வரவில்லை. இது மக்களாட்சி அரசாங்கம். சகல சவால்களையும் வெற்றிக்கொண்டு முன்னோக்கிச் செல்வோம். அனைவரும் அரசாங்கத்தை பாதுகாக்க ஒன்றிணைய வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.





