முன்னாள் உளவுத்துறைபிரதானி சுரேஷ் சலே கைது - 72 மணிநேரத் தடுப்புக்காவலில் வைத்து தீவிர விசாரணை
கோட்டை நீதிவான் நீதிமன்றில் பி/358-82 எனும் இலக்கத்தின் கீழ் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசேட விசாரணை ஒன்றினை முன்னெடுத்து வருகின்றது.
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களைத் திட்டமிட்டமை மற்றும் அதற்கு உதவி ஒத்தாசை புரிந்தமை தொடர்பிலான குற்றச்சாட்டின் கீழ், முன்னாள் உளவுத்துறைப் பிரதானி ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் துவான் சுரேஷ் சலே குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
பேலியகொட பகுதியில் வைத்து 25-02-2026 அன்று காலை 7.45 மணி அளவில் அவரைத் தடுத்துக் கைது செய்ததாகக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்தனர். குற்றப் புலனாய்வுத் திணைக்களம் முன்னெடுத்து வரும் விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்ட சான்றுகளை மையப்படுத்தி இந்தத் தடுத்துக் கைது நடவடிக்கை இடம்பெற்றதாக அவர்கள் தெரிவித்தனர்.
இது தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் உதயகுமார வூட்லர் மற்றும் மேல் மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் சஜீவ மெதவத்த ஆகியோர் ஊடகவியலாளர் சந்திப்பிலும் விடயங்களை உறுதி செய்தனர். பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் உதயகுமார வுட்லர் ஊடகவியலாளர் சந்திப்பின் போது, மிகத் தெளிவான சான்றுகளின் அடிப்படையில் சுரேஷ் சலேவைக் கைது செய்ததாகத் தெரிவித்தார். அத்துடன் கைது செய்யப்பட்ட முன்னாள் உளவுத்துறைப் பிரதானி சுரேஷ் சலேவைத் தடுப்புக்காவலில் வைத்து விசாரிக்க நடவடிக்கை எடுப்பதாகவும், கைது தொடர்பிலான மேலதிக விடயங்களை ஓரிரு நாட்களில் மீண்டும் ஊடகங்களுக்கு அறிவிக்க நடவடிக்கை எடுப்பதாகவும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சஜீவ மெதவத்த குறிப்பிட்டார்.
கோட்டை நீதிவான் நீதிமன்றில் பி/358-82 எனும் இலக்கத்தின் கீழ் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசேட விசாரணை ஒன்றினை முன்னெடுத்து வருகின்றது. குறித்த விசாரணையானது சனல் 4 (Channel 4) தொலைக்காட்சியில் அசாத் மௌலானா எனும் நபர் வழங்கிய வாக்குமூலத்தை அடிப்படையாகக் கொண்டு ஒளிபரப்பு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் வெளிப்படுத்தப்பட்ட தகவல்களை மையப்படுத்திய விசாரணையாகும். மருதானை சி.எஸ்.ஆர் நிறுவனம் சி.ஐ.டி. யில் செய்த முறைப்பாட்டுக்கு அமைய இது தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்த விசாரணைகளில் மட்டக்களப்பு வவுணதீவு பகுதியில் இரு பொலிஸார் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் தகவல்களை மறைத்தமை, போலியான தகவல்களை விசாரணையாளர்களுக்கு அனுப்பி விசாரணைகளைத் திசைதிருப்பியமை உள்ளிட்ட விடயங்களுக்காக உளவுத்துறையோடு தொடர்புபட்ட இருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த விசாரணைகளுக்கு அமைய மேலும் பல இராணுவ உளவுப் பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு நாட்டிலிருந்து வெளியேறத் தடை விதிக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன் அடிப்படையிலேயே இந்த விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்ட சான்றுகள், புகைப்பட ஆதாரங்கள் மற்றும் மேலதிக விடயங்களை மையப்படுத்தி சுரேஷ் சலேவை நேற்று கைது செய்ததாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத் தகவல்கள் தெரிவித்தன.
சுரேஷ் சலேவிடம் தற்போது பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் பொலிஸ் அத்தியட்சகர் ஒருவருக்கு உள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி ஆரம்பகட்டமாக 72 மணிநேரத் தடுப்புக்காவலில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாகவும், அவசியம் ஏற்படின் பாதுகாப்பு அமைச்சர் ஊடாக 90 நாள் தடுப்புக்காவல் உத்தரவைப் பெற்றுக்கொள்ள எதிர்பார்ப்பதாகவும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் தெரிவித்தனர்.
இந்த நிலையில் கடந்த 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி இலங்கையின் 8 இடங்களில் நடந்த தொடர் குண்டுவெடிப்புச் சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளில், அதன் பின்னால் சதித் திட்டம் ஒன்று இருப்பதாக வெளிப்படுத்தப்பட்டிருந்தது. இது தொடர்பிலான விசாரணைகள் மந்தகதியில் இடம்பெற்று வந்த நிலையில், கடந்த 2024 ஆம் ஆண்டில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இது தொடர்பிலான விசாரணைகளை ஆரம்பிப்பதாகக் கோட்டை நீதிவான் நீதிமன்றுக்கு 'பி' அறிக்கை ஊடாகத் தகவல் அளித்து அந்த விசாரணைகளை ஆரம்பித்திருந்தது.
அதன் அங்கமாகவே உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்கள் இடம்பெறும்போது இராணுவப் புலனாய்வுப் பிரிவின் பிரதானியாகவும் அதன் பின்னர் தேசிய உளவுச் சேவை உள்ளிட்ட பிரிவுகளுக்குப் பொறுப்பாகவும் இருந்த சுரேஷ் சலே தற்போது கைதாகியுள்ளார்.





