துப்பாக்கி முனையில் அதிகாரங்களை தக்கவைப்பதற்கு முயற்சிக்க வேண்டாம்: சுதந்திர கட்சி
எதிர்காலத்தில் இந்தக் கட்சியை மீண்டும் மக்கள் மத்தியில் பலம் மிக்க கட்சியாக கட்டியெழுப்புவோம். தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தற்போது தமக்கு கிடைக்கப் பெற்றுள்ள அதிகாரத்தை மீள கையளிக்க முடியாது எனத் தெரிவித்துள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை மீண்டும் மக்கள் மத்தியில் பலம் மிக்க கட்சியாகக் கட்டியெழுப்புவோம். ஆட்சி அதிகாரம் என்பது தேர்தல் ஊடாக ஜனநாயக ரீதியில் பரிமாற்றப்பட வேண்டும். அதனை விடுத்து துப்பாக்கி முனையில் இந்த அரசாங்கம் அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ள முயற்சித்தால் அதற்கு மக்கள் தகுந்த பதிலை வழங்குவர் என முன்னாள் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
மறைந்த முன்னாள் பிரதமர் எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்கவின் 66ஆவது நினைவு தின நிகழ்வு 26-09-2025 அன்று ஹொரகொல்லவிலுள்ள நினைவு தூபி வளாகத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,
எதிர்காலத்தில் இந்தக் கட்சியை மீண்டும் மக்கள் மத்தியில் பலம் மிக்க கட்சியாக கட்டியெழுப்புவோம். தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தற்போது தமக்கு கிடைக்கப் பெற்றுள்ள அதிகாரத்தை மீள கையளிக்க முடியாது எனத் தெரிவித்துள்ளது. அவ்வாறு சர்வாதிகாரமாக துப்பாக்கி முனையில் அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொண்டிருக்க முடியாது.
அதற்கு நாம் இடமளிக்கவும் போவதில்லை. ஆட்சி அதிகாரம் என்பது தேர்தல் ஊடாக ஜனநாயக ரீதியில் பரிமாற்றப்பட வேண்டும். 2020இல் கோட்டாபய ராஜபக்ஷ 69 இலட்சம் வாக்குகளைப் பெற்ற போதும் இதனையே கூறினார். அவரால் 10 – 15 ஆண்டுகள் ஆட்சி செய்ய முடியும் என்று நாமும் நம்பினோம். ஆனால் இரண்டே ஆண்டுகளில் அவரால் ஆட்சியை ஒப்படைத்துவிட்டுச் செல்ல நேர்ந்தது.
எனவே இந்த அரசாங்கத்துக்கு அவ்வாறானதொரு நிலைமை ஏற்படாவிட்டாலும், உரிய காலத்தில் தேர்தலை நடத்தி அதன் மூலம் மக்கள் வழங்கும் ஆணைக்கமையவே ஆட்சி செய்ய முடியும். அதனை விடுத்து வன்முறைகளை கைகளிலெடுத்தால் மக்கள் அதற்கு சிறந்த பதிலை வழங்குவார் என்றார்.