இலங்கை ஜனாதிபதியின் மாலைதீவு விஜயம் ஒரு தீர்க்கமான காரணி; மாலைதீவு ஜனாதிபதி கலாநிதி முகமது முய்சு
தீவு-இலங்கை உறவுகளின் பொருளாதார முக்கியத்துவத்தை எடுத்துரைத்த மாலைதீவு ஜனாதிபதி, பிராந்தியத்தில் செழிப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை கட்டியெழுப்ப இலங்கையுடன் இன்னும் நெருக்கமாக பணியாற்ற ஆவலுடன் இருப்பதாகக் கூறினார்.

இலங்கை-மாலைதீவு இராஜதந்திர உறவுகள் 60வது ஆண்டு நிறைவை எட்டியுள்ள நிலையில் இலங்கை ஜனாதிபதியின் மாலைதீவு உத்தியோகபூர்வ விஜயம் ,இருநாடுகளினதும் பொருளாதார ரீதியாக ஒருங்கிணைந்த மற்றும் வளமான எதிர்காலத்தை நோக்கிய பயணத்தில் ஒரு தீர்க்கமான காரணியாக இருக்கும் என்று மாலைதீவு ஜனாதிபதி கலாநிதி முகமது முய்சு தெரிவித்தார்.
‘குரும்பா மோல்டீவ்ஸ்’ விடுதியில் நேற்று (28) இரவு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ இராப்போசன விருந்துபசாரத்தின் பின்னர் மாலைதீவு ஜனாதிபதி கலாநிதி முகமது முய்சு இவ்வாறு தெரிவித்தார்.
மாலைதீவு-இலங்கை உறவுகளின் பொருளாதார முக்கியத்துவத்தை எடுத்துரைத்த மாலைதீவு ஜனாதிபதி, பிராந்தியத்தில் செழிப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை கட்டியெழுப்ப இலங்கையுடன் இன்னும் நெருக்கமாக பணியாற்ற ஆவலுடன் இருப்பதாகக் கூறினார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான வரலாற்று முக்கியமான உறவுகள் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளதாக தெரிவித்த அவர், தற்போது கருவாடு போன்ற பாரம்பரிய வர்த்தகப் பரிமாற்றங்களுக்கு அப்பால் சுற்றுலா, டிஜிட்டல் தொழில்நுட்பம், பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் கலாச்சார பரிமாற்றங்கள் போன்ற நவீன துறைகளையும் உள்ளடக்கும் வகையில் விரிவடைந்துள்ளன என்றும் தெரிவித்தார். இந்த பன்முகப்படுத்தல், இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளின் எதிர்காலத் தன்மையை மட்டுமல்லாமல், வேகமாக மாறிவரும் உலகின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான இரு நாடுகளின் பொதுவான விருப்பத்தையும் பிரதிபலிக்கிறது என்று ஜனாதிபதி முய்சு மேலும் சுட்டிக்காட்டினார்.
கல்வி, சுகாதாரம் மற்றும் மனிதவள அபிவிருத்தி போன்ற முக்கிய துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால ஒத்துழைப்பை நினைவு கூர்ந்த மாலைதீவு ஜனாதிபதி, இந்த ஒத்துழைப்பு தற்போதைய பொருளாதார விரிவாக்கத்திற்கு ஒரு உறுதியான அடித்தளத்தை அமைக்கிறது என்று சுட்டிக்காட்டினார். இரு நாடுகளுக்கும் இடையிலான அண்மைய உயர்மட்ட கலந்துரையாடல்கள் இது வரை பயன்படுத்தப்படாத புதிய பொருளாதார மூலங்கள் குறித்து ஆராய்ந்து இரு நாட்டு மக்களுக்கும் பொருளாதார வாய்ப்புகளை விரிவுபடுத்தும் என்றும் ஜனாதிபதி முய்சு நம்பிக்கை தெரிவித்தார்.
பல தலைமுறைகளாக, மாலைதீவு மக்கள் இலங்கையை ஒரு பங்காளராக மட்டுமல்லாமல் இரண்டாவது வீடாகவும் கருதி வருவதாகக் கூறிய அவர், இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் வலுவான தனிப்பட்ட மற்றும் நிறுவன ரீதியிலான உறவுகளை அடிப்படையாகக் கொண்டவை என்றும் அவர் தெரிவித்தார். இந்த உறவு ரீதியான உணர்வு இரு நாடுகளின் பொருளாதார முன்னேற்றத்திற்கு ஒரு தனித்துவமான சாதக நிலைமையை உருவாக்குகிறது என்று மாலைதீவு ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.