கறுப்பு ஜுலை வரலாற்றை அரசு மூடிமறைக்க கூடாது:கஜேந்திரகுமார்
3000 ஏக்கர் காணி நிரந்தரமாக உயர்பாதுகாப்பு வலயமாக விடுவிக்கப்படாமல் இருக்கின்றது.

கறுப்பு ஜூலை வரலாற்றை மறைக்க முயலாமல் அதனை அனைவரும் அனுஷ்டிக்கும் பொதுவான தினமாக அறிவிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் 23-07-2025 அன்று இடம்பெற்ற கம்பெனிகள் (திருத்தச்) சட்டமூலம் மீதான விவதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
தமிழர்கள் இன்றைய நாளை கறுப்பு ஜூலையாக அனுஷ்டிக்கின்றனர். 1983இல் வடக்கு, கிழக்கிற்கு வெளியே தமிழர்கள் கொல்லப்பட்டனர். குறிப்பாக கொழும்பில் பலர் கொல்லப்பட்டனர். இராணுவ மற்றும் பொலிஸாரின் தலைமையில் அரச உதவி பின்னணியில் தமிழ் குடும்பங்கள் உயிருடன் எரிக்கப்பட்டன. அது மறக்க முடியாத சம்பவங்கள். சிங்களவர்களிடையே இருந்த நல்லவர்கள் தமிழர்களை பாதுகாக்கவும் நடவடிக்கை எடுத்தனர். அந்த சம்பவங்கள் இடம்பெற்ற நாளையே தமிழர்கள் அனுஷ்டிக்கின்றனர்.
எனினும் இன்னும் இதனை அனைவரும் அனுஷ்டிக்கும் பொதுவான நாளாக அறிவிக்க முடியவில்லை. அதேபோன்று இதுவரையில் இன்னும் எந்த அரசும் உத்தியோகபூர்வமாக மன்னிப்பு கோரவும் இல்லை. தற்போதைய அரசாங்கத்தின் ஏற்பாட்டில் இளைஞர்கள் குழு தெற்கில் இருந்து இந்த நாளை நினைவுகூர்ந்து வடக்கிற்கு செல்கின்றனர்.
ஆனால் முற்றிலும் அனுஷ்டிப்பு நாளை மாற்றியமைக்கும் வகையில் இது அமைகின்றது. ஜே.வி.பியும் இதில் குற்றவாளிகளே. கறுப்பு ஜூலையை வரலாற்றில் இருந்து மறைக்க முயற்சிக்கின்றனர். ஆனால் அதனை மறைக்க முடியாது. இதுவரையில் எவரும் உத்தியோகபூர்வமாக மன்னிப்பு கோரவில்லை என்பதனை குறிப்பிடுகின்றோம். அதற்கான நீதி கிடைக்கவில்லை. அதற்காக எதுவும் நடக்கவில்லை. ஏன் தமிழ் மக்கள் ஆயுதம் ஏந்த வேண்டியேற்பட்டது என்பதனை பாருங்கள். அதனை பயங்கரவாதம் என்று கூற முடியாது. அவ்வாறு நான் கூற மாட்டேன். பாதுகாப்புக்காக மக்கள் அதனை செய்ய வேண்டியிருந்தது. ஆனால் நீங்கள்தான் பயங்கரவாதம் போன்று செயற்பட்டீர்கள்.
இதேவேளை வலிகாமம் வடக்கு மக்கள் கொழும்பில் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சிலர் செயலகத்திற்குள் சென்று கலந்துரையாட அனுமதிக்கப்பட்டனர்.
அதாவது அந்த ஆர்ப்பாட்டமானது 2013ஆம் ஆண்டில் 6370 ஏக்கர் காணி இராணுவ தேவைகளுக்காக வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டங்கள் மற்றும் சர்வதேச அழுத்தங்களால் 3000 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டது.
மேலும் 3000 ஏக்கர் காணி நிரந்தரமாக உயர்பாதுகாப்பு வலயமாக விடுவிக்கப்படாமல் இருக்கின்றது. இது நீங்கள் வழங்கிய வாக்குறுதிகளுக்கு எதிரானது. அவ்வாறு கையகப்படுத்தியுள்ள 75 வீதமான காணிகள் இராணுவ தேவைக்காக பயன்படுத்தப்படவில்லை.
அங்கே இராணுவம், கடற்படை, விமானப்படை என்பன விவசாயம் செய்கின்றன. 6 ஆலயங்களும், தேவாலயங்களும் அந்த பாதுகாப்பு வலயத்திற்குள் இருந்தன. அவை அழிக்கப்பட்டுள்ளன. அங்கு யுத்தம் நடக்கவில்லை. யார் அவற்றை அழித்தது. இவை யுனேஸ்கோ குற்றமாகும் என்றார்.