மக்களுக்கான எனது அரசியல் பணி தொடரும்: டக்ளஸ் தேவானந்தா
அரசியல் உரிமை, அபிவிருத்தி மற்றும் அன்றாட பிரச்சினைகளுக்கான தீர்வுகளுக்கான முன்மொழிவுகளை முன்வைத்திருந்தோம். அது தொடரும்.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு பல காரணிகளுக்காக நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். எனது கைது மக்களை அதிர்ச்சிக்கும் கவலைக்கும் உள்ளாக்கியிருக்கிறது. எவ்வாறிருப்பினும் மக்களுக்கான எனது அரசியல் பணி தொடரும் என்று ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் முன்னாள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுக்கப்பட்ட டக்ளஸ் தேவானந்தா 10-01-2026 அன்று காணொளிப்பதிவொன்றை வெளியிட்டு இதனைத் தெரிவித்துள்ளார்.
அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது : எனது திடீர் கைதினால் மக்களுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி, கவலை என்பவற்றை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. எனது விடுதலையையடுத்து மக்களும் அந்த கவலைகளிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். எனக்காக குரல் கொடுத்த மக்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். அதேவேளை பல்வேறு காரணிகளுக்காக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும் நன்றி கூற விரும்புகின்றேன்.
மேலும் எனது தரப்பு உண்மைகளை எடுத்துரைத்த எனது தரப்பு சிரேஷ;ட ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ், அவரால் எடுத்துரைக்கப்பட்ட உண்மைகளை உணர்ந்து கொண்டு எனக்கு பிணை வழங்கிய கம்பஹா நீதிவான் நீதிமன்றத்துக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். எனவே அரசியல் நடவடிக்கைகள் முன்னரைப் போன்று இனியும் தொடரும்.
கடந்த காலங்களில் எமக்கு கிடைத்த வாய்ப்புக்களைப் பயன்படுத்தி மக்கள் எதிர்கொள்ளும் மூன்று வகையான பிரச்சினைகளுக்கு தீர்வுகளைப் பெற்றுக் கொடுத்தோம். அரசியல் உரிமை, அபிவிருத்தி மற்றும் அன்றாட பிரச்சினைகளுக்கான தீர்வுகளுக்கான முன்மொழிவுகளை முன்வைத்திருந்தோம். அது தொடரும்.
அதேபோன்று இனிவரவுள்ள சந்தர்ப்பங்களிலும் எமது மக்கள் நம்பிக்கையை இழக்காது தங்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டவர்களுடன் என்னும் நாம் நிற்போம் என்றார்.





