சர்வதேச விசாரணை கோரிய தமிழ் மக்களின் கையெழுத்துகள் அடங்கிய மகஜர் ஜ.நா. பிரதிநிதியிடம் கையளிப்பு
ஐநாவின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி மார்க் அண்ட்ரே பிரான்சே அவர்களிடம் அனைத்து தமிழ்த் தேசியக் கட்சிகளும் ஒன்றிணைந்து பெற்றுக் கொண்ட கையொப்பங்கள் 23-09-2025 செவ்வாய் மாலை 3:30 மணியளவில் கொழும்பில் உள்ள ஐநா அலுவலகத்தில் கையளிக்கப்பட்டன.
செம்மணி உட்பட மனித புதைகுழிகளுக்கும், தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலைக்கும் சர்வதேச விசாரணை கோரி வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் தமிழ் மக்களிடம் பெறப்பட்ட கையெழுத்துக்கள் அடங்கிய மகஜர் ஜக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
ஐநாவின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி மார்க் அண்ட்ரே பிரான்சே அவர்களிடம் அனைத்து தமிழ்த் தேசியக் கட்சிகளும் ஒன்றிணைந்து பெற்றுக் கொண்ட கையொப்பங்கள் 23-09-2025 செவ்வாய் மாலை 3:30 மணியளவில் கொழும்பில் உள்ள ஐநா அலுவலகத்தில் கையளிக்கப்பட்டன.
இக்கையொப்பங்களுடன் தமிழ் தேசிய கட்சிகளின் தலைவர்கள் ஒன்றிணைந்து கையொப்பமிட்ட கடித வரைவும் கையளிக்கப்பட்டது. இதன் போது தமிழ் தேசிய கட்சிகளின் சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ செல்வம் அடைக்கலநாதனும், சமத்துவ கட்சியின் பொதுச் செயலாளர் மு.சந்திரகுமார், கட்சிகளின் ஒருங்கிணைப்பாளரான குருசுவாமி சுரேந்திரனும் இச்சந்திப்பில் கலந்து கொண்டனர். சுமார் ஒரு மணி நேரம் இச்சந்திப்பும் கலந்துரையாடலும் இடம்பெற்றது.
ஐநா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகருக்கு எழுதப்பட்டு ஐநா செயலாளர் நாயகத்துக்கும் பாதுகாப்பு சபைக்கும் மனித உரிமைகள் பேரவையின் அங்கத்துவ நாடுகளின் பிரதிநிதிகளுக்கும் பிரதி செய்யப்பட்டுள்ள இக்கடிதத்தில் நீதியரசர் திரு சீ.வீ. விக்னேஸ்வரன், பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சார்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செ. கஜேந்திரன், பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன், சுரேஷ் பிரேமச்சந்திரன், . முருகேசு சந்திரகுமார் மற்றும் எஸ். நவீந்திரா (வேந்தன்) ஆகியோர் கையொப்பம் இட்டுள்ளனர்.
காலம் காலமாக தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அட்டூழிய குற்றங்களுக்கான நீதியை விரைந்து நிலை நாட்டவும், பிரதானமாக செம்மணி உட்பட எமது வடக்கு கிழக்கு தாயகத்தில் அடையாளப்படுத்தப்படும் மனிதப் புதைகுழிகளில் தொடர்ந்தும் அகழ்வுப் பணிகளை முன்னெடுக்கவும், கண்டெடுக்கப்படும் ஆதாரங்களை உறுதிப்படுத்துவும் சர்வதேச மேற்பார்வையுடன் கூடிய ஆலோசளை, தொழில்நுட்பம், நிதி, பாதுகாப்பு என பல கோரிக்கைகள் இக்கடிதத்தில் உள்ளடங்கியிருந்தன. அவற்றை நேரடியாகவும் ஐநா ஒருங்கிணைப்பாளரிடம் இச்சந்திப்பின்போது தமிழ் மக்களின் பிரதிநிதிகளால் வலியுறுத்தப்பட்டன.