சொத்து விபரங்களை சமர்ப்பிக்காது விட்டால் நடவடிக்கை: ஆணைக்குழுவின் பணிப்பாளர் தெரிவிப்பு
இலத்திரனியல் கட்டமைப்பு தயாரிக்கும் வரை சொத்து மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான விபரங்களை ஆவணப்படுத்தப்பட்ட வகையில் சமர்ப்பிக்க வேண்டும் என்று ஊழல் எதிர்ப்பு சட்டத்தின் 83(7) ஆம் பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2025 ஆண்டுக்கான வழங்கப்பட்ட சொத்து மற்றும் பொறுப்பு தொடர்பான விபரங்கள் ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ வலைத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இருப்பினும் விபரங்கள் முழுமையாக வெளியிடப்படவில்லை. இந்நடவடிக்கைகள் நிறைவடைந்தவுடன் விபரங்களை சமர்ப்பிக்காதவர்கள் தொடர்பில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். ஒருவரின் சொத்து மற்றும் பொறுப்பு தொடர்பான தகவல்களை பதிவேற்றம் செய்து அவற்றை தவறான முறையில் பயன்படுத்த வேண்டாம் என்று குறிப்பிட்டுக்கொள்கின்றேன் என்று இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ரங்க திஸாநாயக்க தெரிவித்தார்.
இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் காரியாலயத்தில் 01-10-2025 நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, 2023 ஆம் ஆண்டின் 09 ஆம் இலக்க ஊழல் எதிர்ப்பு சட்டத்தின் ஊடாக சொத்து மற்றும் பொறுப்பு தொடர்பான வெளிப்படுத்தல்களை பொறுப்பேற்றல் மற்றும் அவற்றை பாதுகாத்தல் ஆணைக்குழுவின் கட்டுப்பாட்டின் கீழான இலத்திரனியல் கட்டமைப்பின் ஊடாக இடம்பெற வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த இலத்திரனியல் கட்டமைப்பு தயாரிக்கும் வரை சொத்து மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான விபரங்களை ஆவணப்படுத்தப்பட்ட வகையில் சமர்ப்பிக்க வேண்டும் என்று ஊழல் எதிர்ப்பு சட்டத்தின் 83(7) ஆம் பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சட்டத்தில் 83 ஆம் பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள மத்திய இலத்திரனியல் கட்டமைப்பு தயாரிக்கப்பட்டு வருகின்ற நிலையில் 2026 மார்ச் 31 ஆம் திகதி முதல் சொத்து மற்றும் பொறுப்புக்களை இந்த கட்டமைப்பின் ஊடாக முன்வைக்க முடியும்.
2023.09.15 திகதியன்று 2023 ஆம் ஆண்டு 9 ஆம் இலக்க ஊழல் எதிர்ப்பு சட்டம் நடைமுறைப்படுத்தல் ஆரம்பிக்கப்பட்டாலும் 2024.03.31 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் சமர்ப்பிக்கப்பட வேண்டிய வருடாந்த சொத்து மற்றும் பொறுப்பு ஆகியவற்றை முன்வைப்பதற்காக இந்த சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைவாக தயாரிக்கப்பட வேண்டிய ஒழுங்குவிதிகள் ஊடாக நிச்சயிக்கப்பட வேண்டிய மாதிரிப் படிவம் உரிய காலப்பகுதியில் தயாரிக்காத காரணத்தால் 1975 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க சொத்து மற்றும் பொறுப்பு தொடர்பான சட்டத்தில் குறிப்பிடப்பட்ட மாதிரி படிவத்துக்கு அமைவாக சொத்து மற்றும் பொறுப்பு தொடர்பான விபரங்களை சமர்ப்பிப்பற்கு அனுமதியளிக்கப்பட்டது.
அதற்கமைய 2024 ஆம் ஆண்டுக்குரிய சொத்து மற்றும் பொறுப்பு தொடர்பான விபரங்கள் அந்த அதிகாரிகளின் கீழ் உள்ள திணைக்களங்களின் பிரதானிகள் வசம் வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்ட நிலையில்,பெற்றுக்கொள்ளப்பட்ட சொத்து மற்றும் பொறுப்பு தொடர்பான தகவல்கள் அடங்கிய அறிக்கையை மாத்திரம் ஆணைக்குழு பெற்றுக்கொண்டது.
சமர்ப்பிக்கப்படும் சொத்து மற்றும் பொறுப்பு தொடர்பான விபரங்களை மக்கள் பார்வையிடும் வகையில் வெளிப்படுத்த வேண்டும் என்று ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் 88 ஆவது பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் மத்திய இலத்திரனியல் கட்டமைப்பு தயாரிக்கப்படாத காரணத்தால் ஆவணப்படுத்தப்பட்ட வகையில் நேரடியாக சமர்ப்பித்த அறிக்கைகள் அனைத்தும் வெளிப்படுத்த முடியாது.ஆகவே நாட்டின் பதவி நிலைகளின் அடிப்படையில் 1 முதல் 14 வரையான பிரதான பிரதான பதவிகளை வகிப்பவர்களின் விபரங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
2025 ஆம் ஆண்டுக்குரிய சொத்து மற்றும் பொறுப்பு தொடர்பான விபரங்கள் ஆவணப்படுத்தப்பட்ட வகையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில் அவை கடந்த கால சட்ட ஏற்பாடுகளுக்கு அமைவாகவே ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. 2025 ஆண்டுக்கான வழங்கப்பட்ட சொத்து மற்றும் பொறுப்பு தொடர்பான விபரங்கள் ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ வலைத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.இருப்பினும் விபரங்கள் முழுமையாக வெளியிடப்படவில்லை.இந்நடவடிக்கைகள் நிறைவடைந்தவுடன் விபரங்களை சமர்ப்பிக்காதவர்கள் தொடர்பில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.