சுகாதார துறையின் வளர்ச்சிக்கு ஜப்பான் தொடர்ந்தும் ஆதரவு: ஜப்பானிய தூதுவர்
ஜப்பான் அரசாங்கத்தால் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட மருத்துவ இயந்திரங்கள் தொடர்பிலும் ஆய்வு செய்திருந்தனர்.
இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையே நீண்ட காலமாக வலுவானதொரு நட்புறவு நிலவிவருவதோடு இந்த நாட்டின் சுகாதாரத் துறையின் எதிர்கால வளர்ச்சிக்கு ஜப்பான் அரசாங்கம் தொடர்ந்தும் தன் ஆதரவை வழங்க தயாராக உள்ளது என இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் அகியோ இசோமாட்டா தெரிவித்தார்.
நாட்டின் அரச வைத்தியசாலை கட்டமைப்பில் பிரதான வைத்தியசாலையாக உள்ள இலங்கை தேசிய வைத்தியசாலைக்கு (கொழும்பு) 10-12-2025 சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ மற்றும் இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் அகியோ இசோமாட்டா உள்ளிட்ட ஜப்பானிய பிரதிநிதிகள் சிறப்பு விஜயமொன்றை மேற்கொண்டிருந்தனர். இதன்போது ஜப்பான் அரசாங்கத்தால் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட மருத்துவ இயந்திரங்கள் தொடர்பிலும் ஆய்வு செய்திருந்தனர்.
ஜப்பான் அரசாங்கமும் ஜப்பானிய மக்களும் இலங்கை தேசிய வைத்தியசாலைக்கு நன்கொடையாக வழங்கிய மருத்துவ உபகரணங்களால் வழங்கப்படும் சிகிச்சை சேவைகள் குறித்த புரிதலைப் பெறுவதற்கும், சுகாதார துறையின் வளர்ச்சிக்கு ஜப்பான் அரசாங்கத்தின் ஆதரவினையும் பங்களிப்பினையும் தொடர்ந்து பெற்றுக் கொள்வதற்காக இந்த கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது.
இந்த நாட்டு மக்களின் சுகாதார நிலையை மேம்படுத்தவும், மக்களுக்கு உயர் தரமான, சிறந்த சிகிச்சை சேவைகளை வழங்குவதற்காகவும், சில மாதங்களுக்கு முன்னர் ஜப்பான் அரசாங்கத்தால் எம்.ஆர்.ஐ இயந்திரம், சி.ரி ஸ்கேன் இயந்திரம், கெத்லேப் சிகிச்சை பிரிவு, அத்தியாவசிய மருத்துவ உபகரணங்கள் மற்றும் அறுவை சிகிச்சை உபகரணங்கள் என்பன இலங்கை தேசிய வைத்தியசாலைக்கு வழங்கப்பட்டன. ஜப்பான் அரசாங்கத்தால் வழங்கி வைக்கப்பட்ட உபகரணங்களின் மதிப்பு சுமார் 1000 மில்லியன் ஜப்பான் யென் ஆகும்.
இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் மற்றும் ஜப்பான் அரசாங்கம் நாட்டின் சுகாதாரத் துறையின் எதிர்கால வளர்ச்சியை கருதி நன்கொடைகளை வழங்க மேற்கொண்ட முயற்சிகளுக்கு சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் மற்றும் ஜப்பான் அரசாங்கத்திற்கும் இதன்போது நன்றி தெரிவித்தார். தற்போதைய அரசாங்கமும் சுகாதார அமைச்சும் இந்த நாட்டின் முதல் தேசிய வைத்தியசாலையின் வளர்ச்சி தொடர்பில் சிறப்பு கவனம் செலுத்தி வருவதோடு, இதற்காக உலக நாடுகளின் உதவியை பெறவும் எதிர்பார்த்துள்ளதாக தெரிவித்தார்.
இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையே நீண்ட காலம் வலுவானதொரு நட்புறவு நிலவிவருவதோடு, இதுவரை காலமும் ஜப்பான் அரசாங்கம் இந்த நாட்டின் சுகாதாரத் துறைக்கு பல உதவிகளை வழங்கியுள்ளதுடன் சுகாதாரத் துறையின் எதிர்கால வளர்ச்சிக்கும் ஜப்பான் அரசாங்கம் தொடர்ந்தும் தன் ஆதரவை வழங்க தயாராக உள்ளது என இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் அகியோ இசோமாட்டா தெரிவித்தார்.





