உண்மையை நாட்டு மக்கள் விரைவில் புரிந்துகொள்வார்கள்: லக்ஷ்மன் நிபுண ஆராய்ச்சி எம்.பி.
இன்று ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் இருந்து இந்த சீர்திருத்தங்களை விரைவாக நடைமுறைப்படுத்துமாறு பெரும் அழுத்தம் ஏற்பட்டுள்ளது.
கடந்த வரவு – செலவுத் திட்டத்தின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட அபிவிருத்திப் பணிகள் தற்போது கொழும்பு மாவட்டத்தில் 97 சதவீத முன்னேற்றத்தை எட்டியுள்ளதாக பாரளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் நிபுண ஆராய்ச்சி தெரிவித்துள்ளார்.
ஆட்சியைப் பொறுப்பேற்றது முதல் நாம் மக்களுக்கான சேவையை அர்ப்பணிப்புடன் செய்து வருகிறோம். குறிப்பாக, 2026 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் கொழும்பு மாவட்டத்திற்காக பாரிய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் கொலன்னாவ, கடுவெல மற்றும் சீதாவக்க போன்ற இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் வசிக்கும் மக்களுக்கான வீடமைப்புத் திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளதான அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் 24-01-2026 அன்று ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் அங்கு மேலும் கூறுகையில்
மாகாண சபைகள் மற்றும் பல்வேறு அமைச்சுகளின் ஊடாக முன்னெடுக்கப்படும் இந்த அபிவிருத்திப் பணிகள் காரணமாக நாம் மிகவும் பிஸியாக இருக்கிறோம். மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதே எமது முதல் நோக்கம். கல்வி மறுசீரமைப்பு தொடர்பில் எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளில் 6 ஆம் தரத்திற்கான புதிய பாடத்திட்ட தொகுதியில் ஏற்பட்ட மிகச்சிறிய தொழில்நுட்பத் தவறினையே எதிர்க்கட்சிகள் அரசியலாக்கப் பார்த்தன. மக்களின் நம்பிக்கையின்றி எதனையும் திணிக்க நாம் தயாரில்லை. அதனால்தான் சில திருத்தங்களுக்காக இடமளித்தோம்.
ஆனால் இன்று ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் இருந்து இந்த சீர்திருத்தங்களை விரைவாக நடைமுறைப்படுத்துமாறு பெரும் அழுத்தம் ஏற்பட்டுள்ளது. இதுவே எமது பயணத்தின் வெற்றியாகும். அரசாங்கத்திற்கு எதிராக உருப்படியான விமர்சனங்களை முன்வைக்க முடியாத நிலையில், எதிர்க்கட்சிகள் கற்பனையான பயத்தை விதைக்கின்றனர். இலங்கையின் அரசியல் கலாசாரத்தில் வாரம் ஒரு தலைப்பை உருவாக்கி அரசாங்கத்திற்கு எதிர்ப்புத் தெரிவிப்பது வழமையாகிவிட்டது. நாங்கள் செய்த பணிகளில் எங்கு தவறு இருக்கிறது என்று அவர்களால் சுட்டிக்காட்ட முடியாது. அதனால் நாளை இப்படி நடக்கும், அப்புறம் அப்படி நடக்கும் என்று பயமுறுத்துகிறார்கள்.
ஆனால் உண்மையை மக்கள் விரைவில் புரிந்து கொள்வார்கள். மதத் தலைவர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுடன் அரசாங்கம் மோதிக் கொள்வதாக எழும் குற்றச்சாட்டுகளும் இருக்கின்றன. நாங்கள் விமர்சனங்களை தாங்கிக் கொள்ள முடியாதவர்கள் அல்ல. அரசியல் ரீதியாக நாம் நன்கு பக்குவப்பட்டவர்கள். ஆனால், யாராவது எம்மைத் தாக்கினால் அதற்குப் பதில் கொடுப்பது எமது உரிமை. இந்த அரசாங்கம் என்பது ஆட்சியாளர்களின் ஆட்சி அல்ல இது மக்களின் ஆட்சி என்றார்.





