புத்தர் சிலையை பாதுகாப்பதற்காகவே எடுத்துச்செல்லப்பட்டது: அமைச்சர் ஆனந்த விஜேபால
அவசரமாக புத்தர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டமை தொடர்பிலேயே அங்கே பிரச்சினை எழுந்திருந்தது.
திருகோணமலை பகுதியில் புத்தர் சிலையொன்று பிரதிஷ்டை செய்யப்பட்டமை தொடர்பில் ஏற்பட்ட குழப்பகரமான நிலைமை தொடர்பாக இரவு பொலிஸாருக்கு தகவல்கள் கிடைக்கப் பெற்றதை தொடர்ந்து புத்தர் சிலை பாதுகாப்பான முறையில் அகற்றப்பட்டுள்ளது.மீண்டும் துரதிஸ்டவசமான சம்பவங்கள் திருகோணமலை நகரில் இடம்பெறுவதற்கு இடமளிக்க முடியாது. சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதற்கு தேவையான ஆலோசனைகள் பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ளது என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் 17-11-2025 அன்று நடைபெற்ற அமர்வில் போது திருகோணமலை பகுதியில் புத்தர் சிலை ஒன்றை பிரதிஷ;டை செய்தமையால் ஏற்பட்ட அமைதியின்மை குறித்து சபைக்கு அறிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, திருகோணமலை கோட்டை சம்போதிதாகம் பாடசாலையின் சம்புத ஜயந்தி விகாரையுடன் தொடர்புடைய சம்பவமொன்று நேற்று (நேற்று முன்தினம்) இடம்பெற்றுள்ளது. புத்தர் சிலையொன்று பிரதிஷ்டை செய்யப்பட்டமை தொடர்பில் ஏற்பட்ட குழப்பகரமான நிலைமை தொடர்பாக இரவு பொலிஸாருக்கு தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய பிரதிஷ்டை செய்யப்பட்ட அந்த புத்தர் சிலைக்கு சேதம் ஏற்படுத்தக்கூடிய நாசகார செயற்பாடு தொடர்பாக தகவல் கிடைக்கப்பட்டுள்ளது.. இதனால் பொலிஸார் குறித்த புத்தர் சிலையை அவ்விடத்தில் இருந்து அகற்றி பாதுகாப்பை உறுதிப்படுத்தியுள்ளனர்.
அவசரமாக புத்தர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டமை தொடர்பிலேயே அங்கே பிரச்சினை எழுந்திருந்தது. இந்நிலையில் மீண்டும் அந்த புத்தர்சிலையை அந்த விகாரையில் பிரதிஷ்டை செய்யுமாறு பொலிஸாருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. இதற்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ப்பட்டுள்ளன.
கரையோர பாதுகாப்பு திணைக்களத்திடம் இருந்து இது தொடர்பில் முறைப்பாடொன்று கிடைக்கப்பெற்றிருந்தது. அங்கே சிற்றுண்டிச்சாலையொன்று நடத்திச் செல்லப்படுவதாகவும் இது சட்டவிரோதமானது என்றும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில் நீதிமன்றம் ஊடாக நடவடிக்கையை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். இதனால் நீதிமன்ற தீர்ப்புக்கு அமையவே செயற்பட வேண்டும்.
இவ்வாறான நிலைமையில் அங்கே புத்தர் சிலை தொடர்பில் எழுந்த பிரச்சினைகளால் அதன் பாதுகாப்பு கருதி அந்த புத்தர்சிலை அங்கிருந்து அகற்றப்பட்டுள்ளது. அது இன்று (நேற்று) காலையில் விகாரையில் தாகம் பாடசாலை பகுதியில் பிரதிஸ்டை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த காணி தொடர்பான பிரச்சினையை நீதிமன்றம் ஊடாகவே தீர்த்துக்கொள்ள வேண்டும். இது தொடர்பில் நீதிமன்றத்திற்கு அறிவித்து நீதிமன்ற தீர்மானங்களுக்கு அமைய நடவடிக்கை எடுக்கப்படும். கரையோர பாதுகாப்பு திணைக்களத்தினால் முன்வைக்கப்படும் விடயங்களும் நீதிமன்றத்தில் முன்வைக்கப்படும்.
எவ்வாறாயினும் புத்தர்சிலையின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மீண்டும் துரதிஸ்டவசமான சம்பவங்கள் திருகோணமலை நகரில் இடம்பெறுவதற்கு இடமளிக்க முடியாது. சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதற்கு தேவையான ஆலோசனைகள் பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ளது என்றார்.





