மன்னாரில் காற்றாலை தொடர்ந்தால் மக்கள் வாழமுடியாது: ரவிகரன் எம்.பி
மன்னார்த்தீவில் காற்றாலை மின் உற்பத்திக்கோபுரங்களை அமைக்கக்கூடாதென வலியுறுத்தியே அவர்களால் இவ்வாறு தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
மன்னாரில் 'தம்பபவனி' காற்றாலைத் திட்டம் உள்ள நிலையில் இனி மன்னார் தீவிற்கு பிறிதொரு காற்றாலைத்திட்டம் தேவையில்லை.மன்னார்த் தீவில் மீண்டும் காற்றாலை மின் உற்பத்தி கோபுரங்களை நிறுவினால் மன்னார்த் தீவில் வாழமுடியாத துர்ப்பாக்கியநிலை ஏற்படுமென்று மன்னார் மாவட்ட மக்கள் கருதுகிறார்கள்.மக்களின் நிலைப்பாடு குறித்து அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என தமிழரசு கட்சியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் 21-08-2025 அன்று நடைபெற்ற உற்பத்தித் தீர்வை (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட கட்டளை, நிதிச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதி மற்றும் நிர்மாணத் தொழில் அபிவிருத்திச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
சிறிய அளவிலான நிலப்பரப்பினைக் கொண்ட மன்னார்த்தீவில் மீண்டும் காற்றாலைத் திட்டங்களை ஏற்படுத்தினால் அங்கு மக்கள் வாழமுடியாத நிலை ஏற்படுமென்பது அங்குள்ள மக்களின் அபிப்பிராயம்.எனவே மன்னார்தீவு மக்களின் அபிப்பிராயங்களைக் கருத்திலெடுத்துச் செயற்பட வேண்டும் .மன்னார்த்தீவின் தெற்குக்கரையில் 30 நவீன விசையாழிகளை உள்ளடக் ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ள 'தம்பபவனி' எனும் காற்றாலைத்திட்டமே போதும் இனி மன்னார்த்தீவினுள் காற்றாலைத் திட்டம் தேவையில்லை.
மன்னார் மக்கள் இன்றோடு (நேற்று ) தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். மன்னார்த்தீவில் காற்றாலை மின் உற்பத்திக்கோபுரங்களை அமைக்கக்கூடாதென வலியுறுத்தியே அவர்களால் இவ்வாறு தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்தவிடயம் தொடர்பாக இம்மாதம் 13ஆம் திகதி ஜனாதிபதியைச் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தோம். அதற்கமைய இந்தக்காற்றாலைத்திட்டத்தை ஒருமாதகாலத்திற்கு இடைநிறுத்திவைப்பதெனவும், இத்திட்டம்தொடர்பில் உரியதரப்பினர் மக்களிடம் அபிப்பிராயங்களைப் பெறவேண்டுமெனவும் தீர்மானிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் ஏற்கனவே மன்னார்த்தீவின் தெற்கு கரையில் கடந்த 2020ஆம் ஆண்டு 'தம்பபவனி' எனும் பெயரில் 30நவீன விசையாழிகளை உள்ளடக்கி இலங்கையின் முதலாவது பெரிய அளவிலான காற்றாலை மின்சக்திப் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இதனைவிட மன்னார் தீவிற்குவெளியேயும் வங்காலை மற்றும் நறுவிலிக்குளம் ஆகிய பகுதிகளிலும் 6 காற்றாலை மின்உற்பத்திக்கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அந்த வகையில் நாட்டின் பொருளாதாரத்திற்கும், நாட்டின் மின்சாரத்தேவைக்குமாக ஏற்கனவே தம்மால் பாரிய பங்களிப்பு வழங்கப்பட்டுள்ளதென்பதே மன்னார்த்தீவு மக்களின் அபிப்பிராயம். அத்தோடு சிறிய அளவிலான நிலப்பரப்பைக்கொண்ட மன்னார்த்தீவில் மீண்டும் காற்றாலை மின் உற்பத்தி கோபுரங்களை நிறுவினால் மன்னார்த்தீவில் வாழமுடியாத துர்ப்பாக்கிய நிலை ஏற்படுமென்பதும் அம்மக்களின் அபிப்பிராயமாகவுள்ளது.எனவே இந்தவிடயத்தில் மன்னார்தீவு மக்களின் இந்த அபிப்பிராயங்களை கருத்திலெடுத்து நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு வலியுறுத்துகின்றேன் என்றார்.





