வடக்கு கடற்கரையில் 1.5 பில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதிமிக்க 81 கிலோ போதைப்பொருள் மீட்பு
நாட்டின் பொருளாதாரத்திற்கும் பொதுமக்களின் நல்வாழ்விற்கும் முக்கிய பங்காற்றும் மீனவச் சமூகத்தினரின் ஜீவனோபாய உரிமைகளுக்கு கடற்படை எப்போதும் மதிப்பளிக்கும்.
யாழ், மாதகல் குசுமன்துறை கடற்கரைப்பகுதியில் கடற்படையினரரால் முன்னெடுக்கப்பட்டிருந்த விசேட தேடுதல் நடவடிக்கையின் போது 1.5 பில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதிமிக்க 81 கிலோ கிராம் ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளன.
கடற்படையினருக்கு கிடைத்த விசேட புலனாய்வுத் தகவலுக்கமைய, யாழ்ப்பாணம் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தின் பங்களிப்புடன் கடற்படையினர் இணைந்து இந்நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர். இதன்போது , மாதகல் குசுமன்துறை கடற்கரைப்பகுதியில் 27-09-2026 அன்று காலை மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் 45.5 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 35.7 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருள் ஆகியன மீட்கப்பட்டுள்ளன.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதுடன், போதைப்பொருள் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட மீன்பிடிப் படகொன்றும் கடற்படையினரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளது. வட பகுதியில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட மிகப்பெரிய போதைப்பொருள் தொகுதி இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
இவ்விடயம் தொடர்பாக கடற்படைப் பேச்சாளர் தெரிவிக்கையில், வட பிராந்தியத்தில் கடற்படையினரால் அண்மைய காலத்தில் கைப்பற்றப்பட்ட மிகப்பெரிய போதைப்பொருள் தொகுதி இதுவாகும். புலனாய்வுத் தகவல் மற்றும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தின் பங்களிப்புடன் கூட்டு நடவடிக்கையாகவே இது சாத்தியமானது. கடல்சார் சூழலில் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் மிகவும் சிக்கலானவை. சவால்கள் நிறைந்த அக்கடல் சூழலை முறியடித்து, நவீன தொழில்நுட்ப உதவிகள் மற்றும் பாதுகாப்பு அமைச்சின் வழிகாட்டல்கள் மூலம் இந்நடவடிக்கை வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கடல் எல்லை மிகப்பெரியது என்பதுடன், இது ஒரு சர்வதேசப் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. எனவே, சர்வதேச கடத்தல் வலையமைப்புகளை முறியடிக்க உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு புலனாய்வு அமைப்புகளின் ஒத்துழைப்புகளையும் பெற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதேவேளை, நாட்டின் பொருளாதாரத்திற்கும் பொதுமக்களின் நல்வாழ்விற்கும் முக்கிய பங்காற்றும் மீனவச் சமூகத்தினரின் ஜீவனோபாய உரிமைகளுக்கு கடற்படை எப்போதும் மதிப்பளிக்கும்.
எனினும் மீன்பிடி நடவடிக்கை எனும் போர்வையில் இவ்வாறான குற்றச்செயல்களில் ஈடுபடுவோருக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மேலும் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் மற்றும் சந்தேகநபர் தொடர்பில் யாழ் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளைத் முன்னெடுத்து வருகின்றனர்.





