இலங்கை - ஜப்பான் நீடித்த நட்புறவின் அடையாளம் புதிய சசகாவா கலாசார நிலையம்: - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய
புதிய நிலையம் கலாசார பரிமாற்றம் மற்றும் கல்வி ஒத்துழைப்பிற்கான ஒரு சிறந்த தளமாக அமையும் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது.
புதிய சசகாவா ஞாபகார்த்த இலங்கை-ஜப்பான் கலாசார நிலையமானது இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையில் பல தசாப்தங்களாக நிலவி வரும் நீடித்த நட்புறவின் அடையாளத்தை வெளிப்படுத்துவதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
கொழும்பு 07, வார்ட் பிளேஸ், இலக்கம் 85 என்ற முகவரியில் சசகாவா ஞாபகார்த்த இலங்கை-ஜப்பான் கலாசார நிலைய அறக்கட்டளையினால் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த நிலையத்தின் உத்தியோகபூர்வ திறப்பு விழா 11-06-2026 அன்று நடைபெற்றது. இதில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான கலாசாரப் பரிமாற்றம், கல்வி, தொழில்சார் பயிற்சி மற்றும் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்தும் முக்கிய மையமாகச் செயற்படும் வகையில் இந்த நவீன கலாசார நிலையம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய,
இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையிலான நட்புறவு நீண்டகால கலாசார மற்றும் ஆன்மீகத் தொடர்புகளால் செழுமையடைந்துள்ளது. இயற்கை, கலாசாரம், கல்வி மற்றும் சமூக விழுமியங்களை மதிப்பதில் இரு நாட்டு மக்களும் ஆழமான பிணைப்பைக் கொண்டுள்ளனர்.
ஜப்பானிய மொழிக் கல்வியை மேம்படுத்துவதிலும், இரு நாட்டு மக்களுக்கிடையிலான பரஸ்பர புரிந்துணர்வை வலுப்படுத்துவதிலும் சசகாவா நிலையம் ஆற்றி வரும் பணி அளப்பரியதாகும். புதிய நிலையம் கலாசார பரிமாற்றம் மற்றும் கல்வி ஒத்துழைப்பிற்கான ஒரு சிறந்த தளமாக அமையும் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது.
உலகளாவிய ரீதியில் நிச்சயமற்ற சூழல் நிலவும் இக்காலகட்டத்தில், பரஸ்பர மரியாதை மற்றும் சமாதானத்திற்கான அர்ப்பணிப்புடன் கூடிய கூட்டுறவானது முன்னெப்போதையும் விட மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றது. அமைதி, செழுமை மற்றும் மானிட கௌரவத்தை ஊக்குவிக்கும் சர்வதேச ஒழுங்கிற்காகவும், சர்வதேச ஒத்துழைப்பிற்காகவும் இலங்கை மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் தொடர்ந்து உறுதிபூண்டுள்ளன' எனத் தெரிவித்தார்.





