செம்மணியில் காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் மாபெரும் கவனயீர்ப்பு
போராட்டத்தின் இடைநடுவில் அங்கு பிரசன்னமான பொலிஸ் அதிகாரியொருவர், யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தின் உத்தரவை போராட்டக்காரர்களிடம் காண்பித்தார்.
நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார செம்மணி மனிதப்புதைகுழியை நேரடியாக சென்று பார்வையிட்ட நிலையில், செம்மணி மனிதப்புதைகுழி தொடர்பில் சர்வதேச கண்காணிப்பையும், சர்வதேச நீதியையும் கோரி வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் மாபெரும் கவனயீர்ப்புப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.
செம்மணி மனிதப்புதைகுழியில் இதுவரை 350 க்கும் மேற்பட்ட மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார 19-06-2026அன்று செம்மணி மனிதப்புதைகுழியை முதன்முறையாக நேரடியாகச்சென்று பார்வையிட்டுள்ளார்.
நீதியமைச்சரின் வருகையை அடுத்து செம்மணி மனிதப்புதைகுழி அகழ்வுகள் தொடர்பில் சர்வதேச கண்காணிப்பையும், சர்வதேச நீதியையும் கோரி வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தினரால் நேற்றைய தினம் (19) பி.ப 2.00 மணியளவில் செம்மணியில் கவனயீர்ப்புப்போராட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இப்போராட்டத்தில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருhன கஜேந்திரகுமார் பொன்னம்பலம், அக்கட்சியின் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன், வேலன் சுவாமிகள், வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்ததுடன், அவர்கள் 'நீதி வேண்டும், நீதி வேண்டும், சர்வதேச நீதி வேண்டும்' என்றும், 'சர்வதேச கண்காணிப்பு வேண்டும், செம்மணிக்கு சர்வதேச கண்காணிப்பு வேண்டும்', 'அநீதி இழைக்கும் அரசின் நீதியமைச்சர் செம்மணிக்கு எதற்கு?', 'வலிந்து காணாமலாக்கப்பட்டோருக்கு சர்வதேச நீதிப்பொறிமுறையே வேண்டும்', 'சரணடைந்த உறவுகள் எங்கே?' என்று வீதியின் ஒருபுறம் வரிசையாக நின்றவாறு கோஷங்களை எழுப்பினர். அத்தோடு சர்வதேச நீதியை வலியுறுத்தும் பதாதைகளையும், வலிந்து காணாமலாக்கப்பட்ட தமது உறவுகளின் புகைப்படங்களையும் அவர்கள் ஏந்தியிருந்தனர்.
போராட்டத்தின் இடைநடுவில் அங்கு பிரசன்னமான பொலிஸ் அதிகாரியொருவர், யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தின் உத்தரவை போராட்டக்காரர்களிடம் காண்பித்தார்.
அந்த உத்தரவில் சிவகுமார் இளங்கோதை, கனகரஞ்சனி, சிவானந்தன் ஜெனிட்டா, செல்வராஜா கஜேந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், வேலன் சுவாமி மற்றும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளவுள்ள ஏனைய அமைப்பினர் செம்மணி சித்துபாத்தி இந்துமயானத்தை சூழவுள்ள பகுதி, யாழ்ப்பாண மாவட்ட செயலகம் மற்றும் யாழ் நீதிமன்றத்துக்கு முன்னாள் உள்ள பகுதிகளில் வீதி மறியலை ஏற்படுத்துவதோ அல்லது தடைகளை ஏற்படுத்துவதோ முற்றாகத் தடை செய்யப்பட்டிருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.
அதனையடுத்து தாம் வீதியை மறிக்கவில்லை என்றும், நீதியைக் கோரியுமே போராடுவதாகத் தெரிவித்த வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள், 'உள்நாட்டுப் பொறிமுறையை நிலைநிறுத்துவதற்காகவே நீதியமைச்சர் இங்கு வருகிறார். ஆனால் நாம் நீண்டகாலமாக சர்வதேச நீதியையே கோரிவருகிறோம். உள்நாட்டுப் பொறிமுறை ஊடாக செம்மணி உள்ளிட்ட மனிதப்புதைகுழிகளில் கண்டறியப்பட்ட எலும்புக்கூடுகள் யாருடையவை என்பதைக் கண்டறியாமல், உண்மைகள் மூடிமறைக்கப்படுகின்றன' என கரிசனை வெளியிட்டனர்.





