தேசிய அபிவிருத்தி வங்கியில் 13.2 பில்லியன் ரூபா மோசடி - மத்திய வங்கி விசேட அறிக்கை
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, என்.டி.பி வங்கி திட்டமிட்டிருந்த ரொக்க ஈவுத்தொகை (Cash Dividend) கொடுப்பனவை நிறுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
தேசிய அபிவிருத்தி வங்கியில் (NDB) சுமார் 13.2 பில்லியன் ரூபாய் பெறுமதியான பாரிய உள்வாரி மோசடி ஒன்று இடம்பெற்றுள்ளதாக அவ்வங்கி உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. முன்னைய மதிப்பீடுகளை விடவும் இந்த மோசடித் தொகை மிக அதிகமாகும் எனத் தெரிவித்துள்ள வங்கி, இது குறித்து கொழும்பு பங்குப் பரிவர்த்தனைக்கும் விபரங்களை வெளிப்படுத்தியுள்ளது.
இந்த மோசடியானது வங்கியின் குறிப்பிட்ட ஒரு செயல்பாட்டுப் பிரிவுக்குள் மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டது என்றும், சில ஊழியர்கள் ஒன்றிணைந்து கூட்டுச் சதியாக இதனைச் செய்துள்ளனர் என்றும் வங்கி தெரிவித்துள்ளது. இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய ஊழியர்கள் அனைவரும் உடனடியாகப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதுடன், வங்கியின் கோப்புப் பதிவுகள் யாவும் பாதுகாப்பாக வைக்கப்பட்டு, குறித்த பிரிவு புதிய மேற்பார்வையின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.
அத்துடன், சட்ட அமலாக்கல் பிரிவினரின் ஆதரவுடன் பணத்தை மீட்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதோடு, இச்சம்பவம் குறித்து ஆராய்ந்து உள்வாரி கட்டமைப்புக்களைப் பலப்படுத்துவதற்கு ஒரு சுயாதீன தடயவியல் கணக்காய்வு முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்த விவகாரம் தொடர்பில் இலங்கை மத்திய வங்கியும் விசேட அறிக்கை ஒன்றை விடுத்துள்ளது. தேசிய அபிவிருத்தி வங்கி வழங்கிய தகவல்களின் அடிப்படையில் இந்த நிதி இழப்பு குறித்த முதற்கட்ட மதிப்பீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. வங்கியின் மூலதனப் போதுமை மற்றும் திரவத்தன்மை விகிதங்கள் ஆகியவை ஒழுங்குமுறைக்குத் தேவையான குறைந்தபட்ச மட்டத்திற்கு மேல் இருப்பதை இட்டுத் தாம் திருப்தியடையகின்றோம்.
எனினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, என்.டி.பி வங்கி திட்டமிட்டிருந்த ரொக்க ஈவுத்தொகை (Cash Dividend) கொடுப்பனவை நிறுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. அத்துடன், புதிய கிளைகளைப் பொதுவாக்குவது உள்ளிட்ட வங்கியின் விருப்பார்ந்த செலவினங்களைக் கட்டுப்படுத்துமாறும் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. எனினும், பங்கு வடிவிலான ஈவுத்தொகை (Scrip Dividend) கொடுப்பனவைத் தொடர அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், வங்கி போதுமான திரவத்தன்மையையும் மூலதனத்தையும் பேணுவதை உறுதி செய்வதற்கான ஆதரவையும் மத்திய வங்கி வழங்கியுள்ளது. தேவைப்படின் தற்காலிக திரவத்தன்மை ஆதரவைப் பெற்றுக் கொள்ள முடியும் என்று மத்திய வங்கி மேலும் தெரிவித்துள்ளது.
இந்த பாரிய நிதி மோசடி இடம்பெற்ற போதிலும், வாடிக்கையாளர்களின் கணக்குகளுக்கோ, வைப்புகளுக்கோ அல்லது அவர்களின் கணக்கு இருப்புகளுக்கோ இதனால் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை என என்.டி.பி வங்கி மற்றும் மத்திய வங்கி ஆகிய இரண்டுமே பொதுமக்களுக்கு உறுதியளித்துள்ளன. வங்கியின் செயல்பாடுகள் எந்தவித இடையூறுமின்றித் வழமை போல் தொடர்கின்றன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.





