கணக்காய்வளர் அறிக்கை நிராகரிக்கப்படுகிறதா? மரிக்கார் எம்.பி.
இறுதியில் கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையில், இவர்களின் அனைத்து மோசடிகளும் உறுதிப்படுத்தியிருக்கிறது.
தரமற்ற நிலக்கரி கொள்வனவில் மோசடி இடம்பெறவில்லையென அரசாங்கம் தெரிவிப்பதாக இருந்தால், கணக்காய்வாளர் நாயகத்தின் கணக்காய்வு அறிக்கையை இவர்கள் நிராகரிக்கிறதா?. இந்த மோசடி திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையாகும் என்று ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் 10-04-2026 அன்று இடம்பெற்ற மின்வலு சக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், நிலக்கரி கொள்வனவில் மாேசடி இடம்பெற்றிருப்பது என்பதை ஒட்டுமொத்த நாட்டு மக்களுக்கும் தெரியும். அதனால் இதனை விவாதித்துதான் உறுதிப்படுத்த வேண்டியதில்லை. இதில் மோசடி இடம்பெற்றிருப்பதாக 3தடவைகள் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. இது இலங்கை வரலாற்றில் இடம்பெற்றிருக்கின்ற திட்டமிடப்பட்ட திருட்டு நடவடிக்கையாகும். ஏனெனில் இந்த நிலக்கரி விநியோகத்தர் 2025 ஆகஸ்ட் 19ஆம் திகதியே பதிவு செய்யப்பட்டிருக்கிறார். பதிவு செய்வதற்கு முன்னரே நிலக்கரி விலைமனு அறிக்கை விநியோகஸ்தருக்கு கையளிக்கப்பட்டிருக்கிறது. அது எவ்வாறு சாத்தியமாகும்?
அதேநேரம் கேள்வி கோரலுக்கு 42 நாட்கள் வழங்கப்படவேண்டும் என்றிருக்கின்றபோது வலுசக்தி அமைச்சர் இந்த கேள்வி கோரலுக்கு 21 நாட்களே வழங்கப்பட்டிருக்கின்றன.இதன் மூலம் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிறுவனங்கள் இந்த கேள்விக்கோரலுக்காக தயாராக போதுமான காலத்தை இல்லாமல் செய்திருக்கிறது.
அதேபோன்று நிலக்கரி விநியோக நிறுவனங்களுக்கு இருக்கவேண்டிய நிபந்தனைகள் திட்டமிட்டு, குறித்த நிறுவனத்துக்கு ஏற்றவகையில் திருத்தப்பட்டிருக்கிறது. அரசாங்கத்தின் இந்த திருத்தங்களுக்கு உடன்படமுயாமலே நிலக்கரி நிறுவனத்தின் தலைவர் பதவி விலகினார். அதேபோன்று சட்டமா அதிபர் கைச்சாத்திடுவதற்கு முன்னரே கேள்விக்கோரல் விடுக்கப்பட்டிருக்கிறது. எப்படி இவ்வாறு செய்ய முடியும்?
அத்துடன் அநுரகுமார திஸாநாயக்க விவசாய அமைச்சராக இருந்தபோது, தற்போதுள்ள வலுசக்தி அமைச்சரை உர கூட்டுத்தாபனத்தின் தலைவராக நியமித்தார். அங்கு இடம்பெற்ற மோசடிக்கு கொழும்பு மேல் நீதிமன்றில் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டு, தற்போது அவர் பிணையில் இருப்பவர்.
மேலும் நிலக்கரி இறக்க முடியுமான காலமான கடந்த வருடம் நவம்பர் 13ஆம் திகதியில் இருந்து டிசம்பர் 31ஆம் திகதிவரை நிலக்கரி அடங்கிய ஒரு கப்பலைக்கூட கொண்டுவரவில்லை.டிசம்பர் 14ஆம் திகதி வரவேண்டிய நிலக்கரி கப்பல் 31ஆம் திகதியே வந்தது. அதுவும் தரம் குறைந்தது.
ஊழல் மோசடிகளை இல்லாமலாக்குவதாக தெரிவித்தே இவர்கள் ஆட்சிக்கு வந்தார்கள். ஆனால் தற்போது நிலக்கரிமோசடி மேற்கொண்டு கோடிக்கணக்கில் நாட்டு நட்டத்தை ஏற்படுத்தி இருக்கிறது. நிலக்கரி மோசடியை மறைப்பதற்கு இவர்கள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார்கள்.
ஆனால் இறுதியில் கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையில், இவர்களின் அனைத்து மோசடிகளும் உறுதிப்படுத்தியிருக்கிறது. நிலக்கரி கொள்வனவில் மோசடி இடம்பெறவில்லை என அரசாங்கம் தெரிவிப்பதாக இருந்தால், கணக்காய்வாளர் நாயகத்தின் கணக்காய்வு அறிக்கையை இவர்கள் நிராகரிக்கிறதா என கேட்கிறோம் என்றார்.





