ஐ.தே.க.வுடன் ஏற்கனவே இணைந்துவிட்டோம் - மே தின உரையில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எமது மே தினக் கூட்டத்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதற்காக அவருக்கு நன்றி கூறுகின்றோம்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் ஏற்கனவே இணைந்துவிட்டன. இந்த ஒற்றுமையை சீர்குலைக்க நினைக்கும் சதிகாரர்களின் முயற்சி ஒருபோதும் வெற்றிபெறாதென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
அத்துடன், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துமாறு பகிரங்க சவால் விடுத்த அவர், அவ்வாறு தேர்தல் நடத்தப்பட்டால் அடுத்த வருட மே தினக் கூட்டமானது ஐக்கிய மக்கள் சக்தியின் முதலமைச்சர்களுடனேயே பிரம்மாண்டமாக நடைபெறும் என்றும் தெரிவித்தார்.
கொழும்பு - மாளிகாவத்தை பீ.டி.சிறிசேன மைதானத்தில் 01-05-2026அன்று இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் மே தினக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
கட்சி என்ற ரீதியில் தொழிலாளர் வர்க்கத்தின் உரிமைகளை நாம் பாதுகாப்போம். கடந்த அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு அடிபணிந்து தொழிலாளர்களின் ஊழியர் சேமலாப நிதி, நம்பிக்கை நிதியில் கை வைத்தது. அதனை நீக்குவோம் என வாக்குறுதியளித்து இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. ஆனால் இன்று இவர்களால் இந்த நாடு தொழிலதிபர்களின் அடிமையாக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு தொழிலாளர் வர்க்கம் இழந்த அனைத்து உரிமைகளையும் எமது ஆட்சியில் நாம் நிச்சயம் மீளப் பெற்றுக் கொடுப்போம். எமது கட்சி அடிப்படைவாரம், நவீன லிபரல் வாதக் கொள்கைகளை எதிர்க்கின்றது. ஜனநாயகத்தை அடிப்படையாகக் கொண்ட கொள்கைகளை மாத்திரமே நாம் அங்கீகரிக்கின்றோம். அதனைப் பாதுகாப்பதற்கான அர்ப்பணிப்புடன் செயற்படுவோம்.
அரசாங்கத்தின் மோசடிகளை நாம் தொடர்ந்தும் வெளிப்படுத்தி வருகின்ற போதிலும், அவை தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன. இவை அனைத்துக்கும் மேலாக பெலவத்தையிலுள்ள பொய்யர்கள் மிகவும் மோசமானவர்கள். அவர்கள் தான் புதிய கள்வர்களை உருவாக்குகின்றனர். அவர்களை பயிற்றுவிக்கின்றனர். எமது மே தினக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளவர்களின் முகங்களில் புதிய எதிர்பார்ப்புக்கள் தெரிகின்றன.
அவர்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றும் வகையில் ஜனநாயக ஆட்சியொன்றை நாம் உருவாக்குவோம். நாட்டுக்கு அழகிய வசனங்களால் ஆன கதைகள் தேவையில்லை. அவர்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகளுக்கான தீர்வுகளே அவசியமாகும். அரசாங்கம் அந்த தீர்வை வழங்காவிட்டாலும், நாம் பல்வேறு வேலைத்திட்டங்கள் மூலம் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வினை வழங்கிக் கொண்டிருக்கின்றோம்.
எதிர்க்கட்சி பலவீனமானது என சிலர் விமர்சிக்கின்றனர். ஆனால் நாம் போலி கல்வி சான்றிதழ் வைத்திருந்த சபாநாயகரை மூன்றே வாரங்களில் பதவி விலகச் செய்தோம். அதேபோன்று ஏனைய மோசடிகளையும் வெளிப்படுத்தி இந்நாட்டை நாம் நிச்சயம் மீளக் கட்டியெழுப்புவோம். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எமது மே தினக் கூட்டத்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதற்காக அவருக்கு நன்றி கூறுகின்றோம்.
இரு கட்சிகளும் ஒன்றிணைந்து பயணிப்பதற்கு குழுவொன்றை அமைக்குமாறு அவர் பரிந்துரைத்துள்ளார். ஆனால் இப்போது குழுக்கள் அவசியமற்றவை. காரணம் இரு கட்சிகளும் ஏற்கனவே இணைந்தாயிற்று. நாம் இணைந்து தான் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றோம். எமது இணைவை தடுப்பதற்கு அந்த குழுக்களில் மிகச் சிறிய குழுக்கள் இடம்பெறலாம். எமது ஒற்றுமையை சீர்குலைப்பதே அந்த குழுக்களின் எதிர்பார்ப்பாகும்.
ஆனால் நாம் அந்த சதிகாரர்களின் சதித்திட்டம் வெற்றி பெற இடமளிக்க மாட்டோம். நிச்சயமான இனிவரும் காலங்களில் நாம் இணைந்தே பயணிப்போம். இறுதியாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு முடிந்தால் மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு சவால் விடுக்கின்றோம். காலம் தாழ்த்தாமல் உடனடியாக நடத்துமாறு வலியுறுத்துகின்றோம். இது கோரிக்கை அல்ல் சவாலாகும். அவ்வாறு மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட்டால் அடுத்த ஆண்டு மே தினக் கூட்டம் ஐக்கிய மக்கள் சக்தியின் முதலமைச்சர்களுடனேயே இடம்பெறும் என்றார்.





