வரிச்சுமையை குறைக்காவிடின் மக்கள் புரட்சி வெடிப்பது உறுதி - லங்கா சமசமாஜக் கட்சி
எரிபொருள் மற்றும் எரிவாயு விலைகளின் அதிகரிப்பு காரணமாக, இந்த உற்சவ காலமானது மக்களுக்கு மகிழ்ச்சிக்குப் பதிலாக கசப்பான அனுபவங்களையே தந்துள்ளதாக மக்கள் உணர்கின்றனர்.
தற்போதைய நாட்டின் பொருளாதார சூழலில் புத்தாண்டு என்பது ஒரு சிறு குழுவினர் மாத்திரம் மென்மேலும் சொத்துக்களைச் சேர்த்துக்கொள்வதற்கும், நாட்டு மக்களில் பெரும்பான்மையான ஒடுக்கப்பட்ட வர்க்கத்தினர் எதிர்பாராத செலவு அதிகரிப்பால் கடன்பொறியில் சிக்கித் தவிக்கும் நிகழ்வாகவுமே அமைந்துள்ளதாக லங்கா சமசமாஜக் கட்சியின் அரசியல் குழு மற்றும் மத்திய குழு உறுப்பினர் சந்தன ரணசிங்க தெரிவித்தார்.
வாழ்க்கைச்சுமை சம்பந்தமாக ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அதிகாரத்திற்கு வருவதற்கு முன்னர் வழங்கிய வாக்குறுதிகளுக்கு அமைய, அத்தியாவசியப் பொருட்கள் மீதான வரிகளை நீக்குவதற்குப் பதிலாக, அதே பொருட்களின் மீது மென்மேலும் வரிச்சுமையை அதிகரித்துள்ளமை கவலைக்குரிய விடயமாகும். குறிப்பாக கல்வி, சுகாதாரத் துறைகள் மட்டுமன்றி, சிறுவர்களுக்கான பால்மா உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் சேவைகள் மீதும் வரிகள் விதிக்கப்பட்டுள்ளன. எரிபொருள் மற்றும் எரிவாயு விலைகளின் அதிகரிப்பு காரணமாக, இந்த உற்சவ காலமானது மக்களுக்கு மகிழ்ச்சிக்குப் பதிலாக கசப்பான அனுபவங்களையே தந்துள்ளதாக மக்கள் உணர்கின்றனர்.
எனவே, அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என நாம் வலியுறுத்துகின்றோம். அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் சேவைகள், கல்வி உபகரணங்கள் மற்றும் மருந்துகள் உள்ளிட்ட சுகாதாரத் தேவைகளுக்கான வரிகளை உடனடியாக நீக்கி மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால், மக்கள் அனுபவிக்கும் இந்தத் துன்பமானது அரசாங்கத்தைப் பதவி விலக்கச் செய்யும் ஒரு மக்கள் புரட்சியாக வெடிப்பது நிச்சயம் என்றார்.





