இலங்கை வருகிறார் மாலைதீவு ஜனாதிபதி முகமது முயிஸு
இதன்போது இருநாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்தும் வகையில் பல்வேறு துறைகளை உள்ளடக்கிய இருதரப்புப் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் மாலைதீவு ஜனாதிபதி முகமது முயிஸு கைச்சாத்திடவுள்ளார்.
இவ்வார இறுதியில் நாட்டுக்கு வருகைதரவுள்ள மாலைதீவு ஜனாதிபதி முகமது முயிஸு, இருநாடுகளுக்கும் இடையிலான பல்துறைசார் இருதரப்புப் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கைச்சாத்திடவுள்ளார்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் விடுக்கப்பட்ட அழைப்பின் பிரகாரம் மாலைதீவு ஜனாதிபதி முகமது முயிஸு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (3) நாட்டுக்கு வருகைதரவுள்ளார்.
அடுத்த வாரம் செவ்வாய்க்கிழமை (5) வரை நாட்டில் தங்கியிருக்கவுள்ள மாலைதீவு ஜனாதிபதி, இவ்விஜயத்தின்போது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, பிரதமர் ஹரினி அமரசூரிய உள்ளிட்ட அரசாங்கத்தின் உயர்மட்டப் பிரதிநிதிகளைச் சந்தித்து இரு நாடுகளினதும் பொதுவான அக்கறைக்குரிய விடயங்கள் தொடர்பில் விரிவான கலந்துரையாடல்களை முன்னெடுக்கவுள்ளார்.
அதேவேளை இதன்போது இருநாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்தும் வகையில் பல்வேறு துறைகளை உள்ளடக்கிய இருதரப்புப் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் மாலைதீவு ஜனாதிபதி முகமது முயிஸு கைச்சாத்திடவுள்ளார்.
அதன்படி பயிற்சித் திட்டங்களை ஒழுங்கமைத்தல், ஊழியர் பரிமாற்றத் திட்டங்களை நடைமுறைப்படுத்துதல் மற்றும் கூட்டு ஆய்வுகளை மேற்கொள்ளல் என்பன தொடர்பில் மாலைதீவின் பாதுகாப்பு மற்றும் தேசிய சேவைகள் அமைச்சுக்கும் இலங்கையின் ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்துக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளது.
அதேபோன்று ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை தலைமைத்துவத்துக்கான பயிற்சி மற்றும் தொழில்சார் மேம்பாட்டுத்துறை ஒத்துழைப்பு குறித்து மாலைதீவின் கல்வி, உயர்கல்வி மற்றும் திறன்கள் மேம்பாட்டு அமைச்சு மற்றும் இலங்கையின் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு ஆகியவற்றுக்கு இடையிலும், மாலைதீவின் சுகாதார, குடும்ப மற்றும் நலன்புரி அமைச்சுக்கும் இலங்கையின் கொழும்பு பல்கலைக்கழகத்துக்கும் இடையில் கல்விசார் ஒத்துழைப்பு குறித்தும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படவுள்ளன.





