நாட்டின் எரிபொருள் இறக்குமதி செலவு கணிசமாக உயரக்கூடும் - இலங்கை மத்திய வங்கி
பொருளாதார நடவடிக்கைகள் வளர்ச்சியடைந்தமையால் 2025 ஆம் ஆண்டில் பெற்றோலிய உற்பத்திப் பொருட்களின் விற்பனை 7.4சதவீதம் இனால் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் புவிசார் அரசியல் நெருக்கடிகள் மற்றும் உலகளாவிய எண்ணெய் சந்தையில் நிலவும் ஸ்திரமற்ற நிலை காரணமாக, எதிர்வரும் காலத்தில் நாட்டின் எரிபொருள் செலவு உயர்ந்த மட்டத்திலேயே காணப்படுமென இலங்கை மத்திய வங்கி எதிர்வு கூறியுள்ளது.
எரிபொருள் இறக்குமதிச் செலவானது இலங்கையின் மொத்த இறக்குமதிச் செலவில் பெரும் பங்கைக் கொண்டுள்ளதுடன், கடந்த 10 ஆண்டுகளில் சராசரியாக மொத்த இறக்குமதியில் சுமார் 20சதவீதம் அதற்காகச் செலவிடப்பட்டுள்ளதாக மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.
மத்திய வங்கியின் பொருளாதார ஆய்வு அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: 2025 ஆம் ஆண்டில் கச்சா எண்ணெய் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட பெற்றோலிய இறக்குமதி அளவு அதிகரித்த போதிலும், மொத்தச் செலவு 2024 ஆம் ஆண்டின் 4.4 பில்லியன் அமெரிக்க டொலரிலிருந்து 2025 இல் 4 பில்லியன் அமெரிக்க டொலராகக் குறைந்துள்ளது.
கச்சா எண்ணெய், சுத்திகரிக்கப்பட்ட பெற்றோலியம் மற்றும் நிலக்கரி விலைகள் குறைந்தமையே இதற்கு முக்கிய காரணமாகும். அத்துடன், சர்வதேச சந்தை விலை மாற்றங்களுக்கு ஏற்ப கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் சராசரி இறக்குமதி விலை 2024 இல் 84.7 டொலரிலிருந்து 2025 இல் 73.2 டொலராக வீழ்ச்சியடைந்துள்ளது.
இதேவேளை, உள்நாட்டு எரிபொருள் விலைகளுக்காகச் செலவுகளைப் பிரதிபலிக்கும் விலை திருத்த முறைமை 2025 ஆம் ஆண்டு முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டதுடன், அதன் மூலம் உலகளாவிய விலை மாற்றங்கள் நேரடியாக உள்நாட்டு சந்தையில் பிரதிபலிக்க இடமளிக்கப்பட்டது. இதற்கமைய, 2024 ஆம் ஆண்டு இறுதியுடன் ஒப்பிடுகையில் 2025 இறுதிக்குள் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் விற்பனை செய்யப்படும் 92 ரக பெற்றோல், வெள்ளை டீசல் மற்றும் மண்ணெண்ணெய் விலைகள் முறையே 15, 9 மற்றும் 8 ரூபாவினால் குறைந்துள்ளன.
மேலும், பொருளாதார நடவடிக்கைகள் வளர்ச்சியடைந்தமையால் 2025 ஆம் ஆண்டில் பெற்றோலிய உற்பத்திப் பொருட்களின் விற்பனை 7.4சதவீதம் இனால் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும், மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள புவிசார் அரசியல் அழுத்தங்களுக்குப் பதிலளிக்கும் வகையில், 2026 மார்ச் மாதத்தில் சாதாரண விலை நிர்ணயக் கட்டமைப்பிற்குப் புறம்பாக எரிபொருள் விலைகளை கணிசமாக உயர்த்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.





