சாகர் பந்து நடவடிக்கையின் கீழ் 58 தொன் நிவாரணப் பொருட்கள்
78 மருத்துவப் பணியாளர்கள் அடங்கிய முழு அளவிலான கள மருத்துவமனை ஒன்று கண்டிக்கு அருகிலுள்ள மஹியங்கனையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.
சாகர் பந்து நடவடிக்கை கடந்த நவம்பர் 28ஆம் திகதியன்று தொடங்கப்பட்டதிலிருந்து, இந்தியா சுமார் 58 தொன் நிவாரணப் பொருட்களை வழங்கியுள்ளது. இதில் உலர் உணவுகள், கூடாரங்கள், சுகாதாரப் பெட்டிகள், அத்தியாவசிய உடைகள், நீர் சுத்திகரிப்பு உபகரணங்கள் மற்றும் சுமார் 4.5 தொன் மருந்துகள் மற்றும் சத்திரசிகிச்சை உபகரணங்கள் ஆகியவை அடங்கும்.
மேலும், மின்பிறப்பாக்கிகள், காற்றடைக்கும் மீட்புப் படகுகள், வெளிப்புற மோட்டார்கள், அகழாய்வு இயந்திரங்கள் உள்ளிட்ட 60 தொன் உபகரணங்களும் இலங்கைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளதாக கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது.
அத்துடன், முக்கியமான இணைப்பை மீட்டெடுப்பதற்காக 185 தொன் பெய்லி பாலத்துக்கான அலகுகள் 44 பொறியாளர்களுடன் விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்திய தேசிய அனர்த்தப் பதிலளிப்புப் படையின் இரண்டு பிரிவுகளில் அடங்கிய 80 நிபுணர்கள் மற்றும் விசேட பயிற்சி பெற்ற நாய்களைக் கொண்ட மு9 பிரிவுகள் உடனடி மீட்பு மற்றும் நிவாரண முயற்சிகளுக்கு உதவியுள்ளன.
78 மருத்துவப் பணியாளர்கள் அடங்கிய முழு அளவிலான கள மருத்துவமனை ஒன்று கண்டிக்கு அருகிலுள்ள மஹியங்கனையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இது இதுவரை 850க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து, அறுவை சிகிச்சைகள் மற்றும் காயங்களுக்கு சிகிச்சையளித்து உயிர் காக்கும் சேவையை வழங்கி வருகிறது. மேலும், மோசமாகப் பாதிக்கப்பட்ட ஜா-எல பகுதியிலும், நீர்கொழும்பிலும் பிஹிஷ்ம் ஆரோக்கிய மைத்ரி கியூப்ஸிலிருந்து மருத்துவ மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ஐ.என்.எஸ் விக்ராந்த், ஐ.என்.எஸ் உதயகிரி மற்றும் ஐ.என்.எஸ் சுகன்யா ஆகிய இந்திய கடற்படைக் கப்பல்கள் இலங்கைக்கு உடனடி மீட்பு மற்றும் நிவாரண உதவிகளை வழங்கின. ஐ.என்.எஸ் விக்ராந்திலிருந்து நிலைநிறுத்தப்பட்ட இரண்டு சேத்தக் ஹெலிகொப்டர்களைத் தவிர, இந்திய விமானப்படையின் இரண்டு கனரக, எம்.ஐ 17 ஹெலிகொப்டர்கள் வெளியேற்றம் மற்றும் நிவாரணப் பொருட்களை வான்வழியாகக் கொண்டு செல்லும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
மேலும் 400க்கும் மேற்பட்டோர் இந்திய விமானப்படை விமானம் மூலம் உட்பட, இலங்கையிலிருந்து சிக்கித் தவித்த சுமார் 2500 இந்தியர்கள் வெளியேற்றப்பட்டனர்.





