ஹோர்முஸ் நீரிணை மூடப்படுதால் இலங்கையில் உணவு பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்
ஹோர்முஸ் நீரிணை வழியாக உலகின் ஐந்தில் ஒரு பங்கு எண்ணெயும், கால் பங்கு திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவும் கொண்டு செல்லப்படுவதனால், அந்நீரிணை மூடப்படுவது ஒரு தொடர் விளைவை ஏற்படுத்தும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஹோர்முஸ் நீரிணை முழுமையாக மூடப்பட்டால், இலங்கையில் உணவுப்பொருட்களின் விலைகள் 15 சதவீதத்துக்கும் அதிகமாக உயர்வடைந்து ஒரு பேரழிவு நிலை ஏற்படுமென ஜேர்மனியின் கீல் உலகப் பொருளாதார நிலையம் எச்சரித்துள்ளது.
கடந்த பெப்ரவரி மாத இறுதியில் ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்திய கூட்டுத்தாக்குதலை அடுத்து மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல்கள் தீவிரமடைந்திருக்கும் பின்னணியில், அதன் விளைவாக ஏற்பட்ட தாக்கங்கள் ஒட்டுமொத்த உலகையும் பாதித்துள்ளன.
இவ்வாறானதொரு பின்னணியில் ஜேர்மனியை தளமாகக்கொண்டு இயங்கிவரும் அரச சார்பற்ற பொருளாதார ஆய்வுக் கட்டமைப்பான கீல் உலகப் பொருளாதார நிலையம் ஹோர்முஸ் நீரிணை மூடப்படுவதனால் உலக நாடுகள் மத்தியில் ஏற்படக்கூடிய தாக்கங்கள் குறித்து 'ஹோர்முஸ் நீரிணையை மூடுவதற்கான விலை: எரிசக்தி தடைகள் மற்றும் உலகளாவிய உணவுப்பாதுகாப்பு' எனும் தலைப்பில் விரிவான ஆய்வறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
அவ்வறிக்கையின் பிரகாரம், ஹோர்முஸ் நீரிணை குறுகிய காலத்துக்குள் மூடப்பட்டால், உலகளாவிய ரீதியில் உணவுப்பொருட்களின் விலைகள் சடுதியாக உயர்வடையக்கூடிய நாடுகளின் பட்டியலில் முதலாவது இடத்தில் சாம்பியாவும், இரண்டாவது இடத்தில் இலங்கையும் இருக்கின்றன.
'ஹோர்முஸ் நீரிணை முழுமையாக மூடப்பட்டால், இலங்கையில் உணவுப்பொருட்களின் விலைகள் 15 சதவீதத்துக்கும் அதிகமாக உயர்வடைந்து, ஒரு பேரழிவு நிலை ஏற்படும்' என அவ்வறிக்கையில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தற்போதைய சூழ்நிலையில் உலகளாவிய கவனம் பொதுவாக எண்ணெய் விலைகள் மீது மாத்திரமே இருக்கும் நிலையில், இந்த நெருக்கடியானது இலங்கை போன்ற தெற்காசிய நாடுகளுக்கு எரிபொருள் தட்டுப்பாட்டிலிருந்து தீவிர உணவுப்பாதுகாப்புசார் அவசரநிலையாக மிகவேகமாக நிலைமாற்றமடையும் என்றும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்தோடு ஹோர்முஸ் நீரிணை வழியாக உலகின் ஐந்தில் ஒரு பங்கு எண்ணெயும், கால் பங்கு திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவும் கொண்டு செல்லப்படுவதனால், அந்நீரிணை மூடப்படுவது ஒரு தொடர் விளைவை ஏற்படுத்தும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதற்கமைய எரிபொருள் இறக்குமதி, உர இறக்குமதி மற்றும் குறைவான உள்நாட்டுப் பதிலீடுகளைக் கொண்ட பரந்துபட்ட விவசாயத்துறை ஆகியவற்றில் இலங்கை பெருமளவுக்குத் தங்கியிருப்பதனால், ஹோர்முஸ் நீரிணை மூடப்படுவது இலங்கைக்கு பல்வேறு வழிகளிலும் நேரடி பாதிப்புக்களை ஏற்படுத்தும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
ஆகவே இந்தப் பாதிப்புக்களைக் குறைப்பதற்கு, பாதிப்புக்கு உள்ளாகும் நிலையில் உள்ள நாடுகள் எரிபொருள் பாதுகாப்புக்கு வழங்கும் அதே முக்கியத்துவத்தை உரப்பாதுகாப்புக்கும் வழங்கவேண்டும் என அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.





