ஈரானிய கடற்படை கப்பல் விபத்துக்கு காரணம் தெரியவில்லை - கடற்படை மறுப்பு
கப்பலில் 180 பேர் காணப்பட்டதாக வெளிநாட்டு செய்தி சேவைகள் செய்தி வெளியிட்டிருந்தாலும், எம்மால் அதனை உறுதியாகக் கூற முடியாது.
இலங்கையை அண்மித்த கடற்பிராந்தியத்தில் விபத்துக்குள்ளான ஈரானிய கடற்படை போர்க்கப்பலிலிருந்து 32 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். அவர்களது நலன் குறித்த மருத்துவ சான்றிதழ் கிடைத்த பின்னரே விசாரணை நடவடிக்கைகளை ஆரம்பிக்க முடியும். எனவே அதுவரை இந்த விபத்து தாக்குதல் என உறுதிபடக் கூற முடியாது என கடற்படை தெரிவித்துள்ளது.
இலங்கையின் தென் கடற்பரப்பில், காலி கடலோரத்திலிருந்து சுமார் 40 கடல் மைல் தொலைவில் ஈரான் கடற்படைக்கு சொந்தமான 'IRIS Dena' என்ற போர்க்கப்பல் மூழ்கி விபத்துக்குள்ளாகியுள்ளது. நேற்று புதன்கிழமை அதிகாலை இந்த கப்பலிலிருந்து கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்துக்கு அவசர உதவி கோரிக்கை (Distress Call) விடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய இலங்கை கடற்படையின் துரித நடவடிக்கைக்கமையவே 32 பேர் மீட்க்கப்பட்டதாகவும், மேலும் பல சடலங்களும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாகவும் கடற்படை பேச்சாளர் கமான்டர் புத்திக சம்பத் தெரிவித்தார்.
இந்த சம்பவம் குறித்த விசேட ஊடகவியலாளர் மாநாடு 04-03-2026 அன்று கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது. இதன் போதே இவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், விபத்துக்குள்ளான குறித்த கப்பல் ஈரானிய கடற்படை போர்க்கப்பல் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எவ்வாறிருப்பினும் அதிலுள்ள அனைவரும் ஈரானிய கடற்படையினர் என உறுதியாகக் கூற முடியாது. உயிருடன் மீட்கப்பட்டவர்களிலும் மற்றும் மீட்க்கப்பட்ட சடலங்களிலும் ஈரான் கடற்படை சீருடை அணிந்தவர்களும் உள்ளனர். சிவில் உடையிலுள்ளவர்களும் காணப்படுகின்றனர். சடலங்களாக மீட்க்கப்பட்டுள்ளவர்களும் குறித்த கப்பலில் பயணித்தவர்கள் என சந்தேகிக்கின்றோம்.
04-03-2026 அன்று அதிகாலை 5.10 மணியளவில் கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்துக்கு அவசர உதவி கோரிக்கை விடுக்கப்பட்டது. அதற்கமைய துரிதமாக செயற்பட்ட இலங்கை கடற்படை அவசர அனர்த்த மீட்பு குழு தனது முதலாவது மீட்பு கப்பலை 6 மணிக்கு அனுப்பியது.
எவ்வாறிருப்பினும் இலங்கை கடற்படையின் மீட்பு கப்பல் சென்ற போது குறித்த கப்பல் தென்படவில்லை. மாறாக குறித்த பகுதியில் மிதந்து கொண்டிருந்த உயிர் காக்கும் மிதவைப் படகுகள் மற்றும் எண்ணெய் கசிவு என்பவற்றை அடிப்படையாகக் கொண்டே தேடுதல் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.
இந்த விபத்து இலங்கை கடற்பரப்பில் இடம்பெறாவிட்டாலும், இலங்கை கடற்படையின் கண்காணிப்பின் கீழுள்ள கடற்பிராந்திலேயே இடம்பெற்றுள்ளது. அந்தவகையில் மீட்பு பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த கப்பல் ஈரானிய கடற்படை போர்க்கப்பல் என்பது மாத்திரமே தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன் பயண பாதை மற்றும் நோக்கம் குறித்த உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் இன்னும் கிடைக்கவில்லை. மீட்க்கப்பட்டவர்களிடம் முன்னெடுக்கப்படும் விசாரணைகளின் அடிப்படையிலேயே இந்த தகவல்களை அறிந்து கொள்ள முடியும்.
அத்தோடு அந்த விசாரணைகளின் அடிப்படையிலேயே இந்த விபத்துக்கான காரணம் தொடர்பிலும் அறிந்து கொள்ள முடியும். குறித்த விசாரணை சர்வதேச கடற்படையின் உதவியுடன் முன்னெடுக்கப்பட்டு உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே தொழிநுட்ப ரீதியில் சரியான காரணத்தைக் கூற முடியும். மேலும் விசாரணைகள் மருத்துவ ஆலோசனைக்கமையவே ஆரம்பிக்கப்படும். குறித்த பகுதியில் இந்த விபத்து இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் வேறு ஏதேனும் கப்பல்கள் பயணித்தனவா என்பது குறித்து இதுவரை (நேற்று மாலை வரை) உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் எவையும் கிடைக்கவில்லை. அதேபோன்று குறித்த வான் பரப்பிலும் விமானங்கள் பயணித்தமை தொடர்பிலும் தகவல்கள் கிடைக்கவில்லை.
கப்பலில் 180 பேர் காணப்பட்டதாக வெளிநாட்டு செய்தி சேவைகள் செய்தி வெளியிட்டிருந்தாலும், எம்மால் அதனை உறுதியாகக் கூற முடியாது. அதேபோன்று இது நீர்மூழ்கிக் கப்பல் தாக்குதல் என கடற்படை குறிப்பிட்டதாக சர்வதேச செய்தி சேவைகள் வெளியிட்டுள்ள தகவல்களையும் நாம் முற்றாக நிராகரிக்கின்றோம். இலங்கை கடற்படை அவ்வாறு எந்தவொரு தகவல்களையும் உத்தியோகபூர்வமாக வெளியிடவில்லை. இந்த சம்பவம் இப்போதைக்கு அவசர அனர்த்த/விபத்து கோரிக்கையாகவே பதிவாகியுள்ளது.
அதேவேளை இதனை அடிப்படையாகக் கொண்டு இலங்கை கடற்பிராந்தியத்தின் பாதுகாப்பு குறித்து அச்சமடையத் தேவையில்லை. தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில், நாட்டின் கடற்பாதுகாப்பு தொடர்பில் கடற்படை, கரையோர பாதுகாப்பு படை உள்ளிட்டவை தொடர்ந்தும் உன்னிப்பான அவதானத்துடனேயே இருக்கின்றது என்றார்.





