இடமாற்றம்பெறவே பொலிஸார் மக்கள் மீது தாக்குதல்: வசந்த முதலிகே
மக்களை தாக்கிய பொலிஸார் மீது உடனடியாக நடவடிக்கைகள் எடுக்கப்படுவதோடு, விசாரணைகள் நிறைவடையும் வரையில் அவர்களை பணி இடைநீக்கம் செய்ய வேண்டும்.
வாழ்வுரிமைக்காக போராடும் மன்னார் மக்கள் மீது தாக்குதல் நடத்தும் பொலிஸார் அதன்மூலம் அரசாங்கத்திடம் நன்மதிப்பைப் பெற்று இடமாற்றம் பெறுவதற்கே முயற்சிக்கின்றனர் என்று மக்கள் போராட்ட முன்னணியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் வசந்த முதலிகே குற்றம் சாட்டினார்.
மன்னாரில் 29-09-2025 அன்று முன்னெடுக்கப்பட்ட கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், மன்னார் மக்கள் தங்களின் வாழ்வுரிமைக்காக போராடுகின்றார்கள். ஆட்சியில் உள்ள அரசாங்கம் தங்களது பிரசாரகாலத்தில் காற்றாலைத் திட்டத்தினை நிறுத்துவோம், கனிய மணல் அகழ்வை அனுமதிக்க மாட்டோம் என்று வாக்குறுதி அளித்தார்கள்.
ஆனால், பதவிக்கு வந்ததும் வாக்குறுதிகளை மறந்து மக்களின் விரும்பமற்ற செயற்றிட்டங்களை முன்னெடுக்கின்றார்கள். நாட்டின் வளங்களை தனியார் துறைக்கும், வெளிநாடுகளுக்கும் விற்பனை செய்கின்றார்கள்.
இதற்கு மக்கள் எதிர்ப்புத் தெரிவிக்கின்றபோது, பொலிஸாரைக் பயன்படுத்தி வன்முறைகளை கட்டவிழ்த்து விடுகின்றார்கள். மன்னாரில் தற்போது கடமையில் உள்ள பொலிஸார் ஏற்கனவே கொழும்பில் பணி புரிந்தவர்கள்.
அவர்கள் கடந்த அரசாங்கத்தின் நன்மதிப்பைப் பெறுவதற்காக போராட்டங்களை வன்முறையாக அடக்கியவர்கள். அத்தகையவர்கள் தற்போது இடமாற்றம் பெற்று மன்னாருக்கு வந்துள்ளனர்.
அவ்வாறு வந்தவர்கள் தற்போதைய அரசாங்கத்திடம் நன்மதிப்பைப் பெறுவதற்காக அவர்கள் மீது வன்முறைகளைப் பிரயோகிக்கின்றார்கள். இதன்மூலம் அவர்கள் மீண்டும் தமக்கு தேவையான பகுதிகளுக்கு இடமாற்றத்தைப் பெற்றுக்கொள்வதற்காகவே மக்கள் மீது தக்குதல்களை நடத்துகின்றார்கள்.
அப்பாவி மக்கள் மீது தாக்குதல்களை நடத்துவதற்கு இடமளிக்கமுடியாது. மக்களை தாக்கிய பொலிஸார் மீது உடனடியாக நடவடிக்கைகள் எடுக்கப்படுவதோடு, விசாரணைகள் நிறைவடையும் வரையில் அவர்களை பணி இடைநீக்கம் செய்ய வேண்டும்.
எம்மைப்பொறுத்தவரையில் உடனடியாக காற்றாலைத்திட்டத்தினையும், கனியமணல் அகழ்வையும் நிறுத்த வேண்டும். இந்தச் சிறிய மன்னார் தீவில் இந்தியாவுக்கு தேவையானவாறு செயற்பாடுகளை முன்னெடுக்க முடியாது. அதற்கு இடமளிக்கப்போவதில்லை என்றார்.





