ஜே.வி.பி. - பா.ஜ.க பரஸ்பரம் நம்பிக்கை - வானதி சீனிவாசன்
சபரிமலை யாத்திரையை புனித யாத்திரையாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டனர்.
இலங்கையின் ஆளும் தரப்பான மக்கள் விடுதலை முன்னணிக்கும் (ஜே.வி.பி.) இந்தியாவின் ஆளும் கட்சியான பாரதீய ஜனாதாக்கட்சிக்கும் இடையில் நடைபெற்ற கருத்துப் பரிமாற்றத்தில் பரஸ்பர நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாக அக்கட்சியின் ஆந்திரமாநில இணைப்பொறுப்பாளரும், தமிழகத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
அத்துடன், தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகள் மீண்டும் தமது சொந்த இடங்களுக்கு திரும்புதல், இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களுடனான ஊடாட்டம், இந்திய, இலங்கை மீனவர்கள் இடையில் தொடரும் பிரச்சினைகள் மற்றும் தமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் காணப்படுகின்ற இந்துக்கோவில்கள் ஆக்கிரமிக்கப்படுதல் உள்ளட்ட விடயங்கள் தொடர்பிலும் கருத்துக்கள் பரிமாற்றப்பட்ட நிலையில் இருநாட்டு அரசாங்க மட்டத்தில் அவ்விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்துவதற்குரிய நடவடிக்கைகளை எதிர்காலத்தில் முன்னெடுப்பது தொடர்பிலும் இணக்கப்பாடுகள் எட்டப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
புதுடில்லிக்கு விஜயம் செய்துள்ள ஜே.வி.பி.யின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா தலைமையிலான குழுவினருக்கும் பா.ஜ.கவின் தேசிய தலைவர் நிதின் நபின் தலைமையிலான குழுவினருக்கும் இடையிலான சந்திப்பு 28-09-2026 அன்று நடைபெற்றிருந்ததோடு பா.ஜ.கவின் குழுவில் வானதி சீனிவாசனும் பங்குபற்றியிருந்தார்.
இந்நிலையில் குறித்த சந்திப்பு தொடர்பில் வானதி சீனிவாசன் வீரகேசரிக்கு கருத்து வெளியிட்டபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
பாரதத்தின் ஆளும் கட்சியான பா.ஜ.க. ஏனைய நாடுகளில் உள்ள ஆளும் கட்சிகளுடன் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தி வருகின்றது. அந்த வகையில் தான் இலங்கையின் ஆளும் கட்சியான ஜே.வி.பியின் பொதுச்செயலாளர் தலைமையிலான குழுவினரை டில்லிக்கு அழைத்து பரஸ்பர கருத்துப்பரிமாற்றங்களையும், சந்திப்புக்களையும் நடத்தி வருகின்றது.
அந்தவகையில் இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு புதிய கட்சியொன்றுக்கு தமிழ் மக்கள் உள்ளடங்கலாக மக்கள் வாக்களித்திருக்கின்றார்கள். அந்த வகையில் தமிழ் மக்களுடனான ஊடாட்டம் எப்படியிருக்கின்றது என்பது தொடர்பிலேயே எமது கருத்துப்பரிமாற்றம் ஆரம்பமாகியிருந்தது.
அச்சமயத்தில் ஜே.வி.பி.பொதுச்செயலாளர் தலைமையிலான குழுவினர் புதிய அரசாங்கம் கல்விக்கொள்கைகளை மறுசீரமைத்து வருகின்றது. அத்துடன் பாடத்திட்ட மறுசீரமைப்பையும் மேற்கொண்டுள்ளது. அந்த வகையில் தமிழ், சிங்கள மொழிகளை கற்பது இணைப்பு மொழியான ஆங்கிலத்தை கற்பது அனைத்து மாணவர்களுக்கும் அவசியமான விடயமாக முன்னெடுப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார்கள்.
அத்துடன், தமிழ் மக்கள் வழங்கிய ஆணைக்கு ஏற்ப அரசாங்கம் தமது செயற்பாடுகளை முன்னெடுத்திருப்பதாகவும் அந்த மாற்றம் நடைமுறையில் வெற்றி பெறுவதற்கு சிறிய கால அவகாசம் அவசியமாக இருப்பதாகவும் குறிப்பிட்டார்கள்.
முறைமை மாற்றம் என்ற விடயத்தில் கடந்த காலங்களில் இளைஞர்,யுவதிகளுக்கான வேலைவாய்ப்புக்களை வழங்குவதில் அரசியல் தலையீடுகள் காணப்பட்டிருந்த நிலையில் தற்போது, அவ்விதமான நிலைமை மாற்றப்பட்டு போட்டிப்பரீட்சைகள் மற்றும் திறந்த விண்ணப்பங்கள் மூலமாக வெளிப்படைத்தன்மையுடன் வேலைவாய்ப்புக்களுக்குள் அவர்கள் உள்வாங்கப்படுவதாகவும் பதிலளித்தனர்.
இந்நிலையில், தமிழக மீனவர்களுக்கும், வடக்கு மீனவர்களுக்கும் இடையிலான சுமூகமற்ற நிலைமைகள் நீடிப்பது தொடர்பில் இருதரப்பினரும் அவதானம் செலுத்தினோம். இந்த விடயத்தில் அரசாங்கமட்டத்தில் உரையாடல்களை முன்னெடுப்பது பொருத்தமானது என்று இருதரப்பினரும் ஏற்றுக்கொண்டோம்.
அத்துடன் தமிழகத்தில் தங்கியிருக்கின்ற இலங்கை அகதிகள் மற்றும் சிறிமா சாஸ்திரி உடன்படிக்கையின்போது இந்தியாவுக்கு அகதிகளாக வந்தர்வகள் இன்னமும் அகதிகளாகவே வாழுகின்ற விடயம் சம்பந்தமாக என்னால் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டதோடு அதுதொடர்பில் இருநாட்டு அரசாங்கங்களினால் முன்னெடுக்கப்பட வேண்டிய விடயங்கள் சம்பந்தமாகவும் அவதானம் செலுத்தப்பட்டது.
அந்தவகையில், தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகள் மீள் திரும்பலுக்கு போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாக இலங்கை குழுவினரால் தெரிவிக்கப்பட்டது. அச்சமயத்தில் சிறிமா சாஸ்திரி உடன்பாடிக்கை மூலம் இந்தியாவுக்கு அனுப்பபட்டவர்களுக்கு பிராஜாவுரிமை வழங்குவதாக இருந்தால் அவர்கள் இந்தியப்பிரஜைகள் என்பதற்கான பட்டியல் அவசியமாகின்றது. அதற்குரிய தயார்ப்படுத்தல்களை அரசாங்கத்தின் ஊடாக வழங்க வேண்டும் என்ற விடயத்தினையும் வலியுறுத்தினேன். அதனையும் இலங்கை குழுவினர் ஏற்றுக்கொண்டனர்.
மேலும், அசாதாரண சூழல் காரணமாக, இலங்கையிலிருந்து வெளியேறி கனடா, ஐரோப்பியா, பிரித்தானியா உள்ளிட்ட நாடுகளில் வாழுகின்ற தமிழ் மக்களுடனான அணுகுமுறை அரசாங்கத்துக்கு எவ்வாறு காணப்படுகின்றது என்பது தொடர்பில் கேள்வி எழுப்பியபோது, ஜனாதிபதி தேர்தல் பிரசாரகாலத்திலேயே புலம்பெயர் நாடுகளில் வாழ்கின்ற தமிழ் மக்களுடன் தமது தொடர்புகளும், உறவுகளும் கட்டியெழுப்பபட்டு விட்டதாக தெரிவித்தார்கள்.
அதேநேரம், வட,கிழக்கு பிரதேசங்களில் உள்ள இந்துக்கோவில்கள் உள்ள இடங்களில் ஆக்கிரமிப்புச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவது பற்றி கேள்வி எழுப்பியபோது, கடந்த அரசாங்கத்தில் எல்லைக்கிராமங்களுக்கு இடையிலான பகுதிகளில் அவ்விதமான சூழல்கள் இருந்தோடு தற்போது அந்த நிலைமைகள் காணப்படவில்லை என்று குறிப்பிட்டனர்.
அத்துடன், சபரிமலை யாத்திரையை புனித யாத்திரையாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டனர். அச்சமயத்தில் சிதம்பரத்துக்கு வழிபாட்டுக்காக வருகை தரும் பக்கதர்களுக்கான ஒழுங்கமைப்புக்களையும் மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டேன்.
இவ்வாறான நிலையில், ஜே.வி.பி குழுவினருக்கும், பா.ஜ.க.குழுவினருக்கும் இடையிலான இந்த பரஸ்பர கருத்துப்பரிமாற்றமானது இருதரப்பினருக்கும் இடையில் நம்பிக்கையை கட்டியெழுப்புவதாகவும் இருதரப்பு உறவுகள் வலுப்படும் வகையிலும் இருக்கின்றது என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது என்றார்.





