கடற்றொழில் அமைச்சின் உயர்மட்டக்குழு இந்தியாவுக்கு விஜயம்
கச்சத்தீவு தொடர்பில் எந்தவொரு பேச்சுவார்த்தையிலும் இலங்கை ஈடுபடாது.
இந்திய – இலங்கை கடற்றொழில் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது தொடர்பான உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தைகளுக்காக, இலங்கை கடற்றொழில் அமைச்சின் உயர்மட்டக் குழுவொன்று எதிர்வரும் செப்டெம்பர் 25ஆம் திகதி இந்தியாவுக்கு செல்லவுள்ளது.
தமிழக மீனவர்களால் இலங்கையின் வடக்கு கடற்பரப்பில் முன்னெடுக்கப்படும் அடித்தள இழுவைமடி மீன்பிடி நடவடிக்கைகள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இந்திய அதிகாரிகளுடன் இந்தக் குழு பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக கடற்றொழில், நீர்வாழ் வளங்கள் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்குகையில், இலங்கையின் வடக்கு கடற்பரப்பிற்குள் தமிழக மீனவர்கள் அத்துமீறி நுழைந்து அடித்தள இழுவைமடி முறையில் மீன்பிடிப்பதைத் தடுப்பதே பேச்சுவார்த்தைகளின் முக்கிய நோக்கமாகும்.
அத்துடன், கச்சத்தீவு தொடர்பில் எந்தவொரு பேச்சுவார்த்தையிலும் இலங்கை ஈடுபடாது.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பதவியேற்ற பின்னர், இரு நாடுகளுக்கும் இடையிலான மீன்பிடிப் பிரச்சினை தொடர்பில் நடைபெறவுள்ள முதலாவது உத்தியோகபூர்வ மட்டப் பேச்சுவார்த்தையாக இது அமையவுள்ளது என்றார்.





