ஆயுர்வேத சட்டக் கட்டமைப்பு விரைவில் திருத்தம்: பிரதி அமைச்சர் ஹன்சக
தற்போதைய தேவைகளுக்கு ஏற்ப குறித்த சட்டத்தை மேம்படுத்துவதே இதன் முக்கிய நோக்கமாகும்
ஆயுர்வேத துறையை நிர்வகிக்கும் சட்ட கட்டமைப்பை நவீனமயமாக்கி மேம்படுத்தும் நோக்கில், 1961 ஆம் ஆண்டின் 31 ஆம் இலக்க ஆயுர்வேத சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாக சுகாதார பிரதி அமைச்சர் கலாநிதி ஹன்சக விஜேமுனி தெரிவித்துள்ளார்.
ஹோமியோபதி சட்டத்தில் முன்மொழியப்பட்ட திருத்தங்களுடன் இணைந்து, ஆயுர்வேதச் சட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட வேண்டிய மாற்றங்கள் குறித்தும் சுகாதார அமைச்சு பல்வேறு தரப்பினரின் கருத்துக்களைக் கோரி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய தேவைகளுக்கு ஏற்ப குறித்த சட்டத்தை மேம்படுத்துவதே இதன் முக்கிய நோக்கமாகும் என்றும் இச்சட்டம் ஏற்கனவே பலமுறை திருத்தப்பட்டுள்ள நிலையில், இறுதியாக 2023 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க ஆயுர்வேத (திருத்தச்) சட்டத்தின் மூலம் ஆயுர்வேத மருத்துவக் பேரவை மற்றும் அதன் நிர்வாக ஒழுங்குமுறைகளில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன என்றும் அவர் குறிப்பிட்டார்.
தற்போதைய காலத்திற்கு ஏற்ற வகையில் ஆயுர்வேத சட்டக் கட்டமைப்பை மேலும் புதுப்பிப்பதே இந்த முன்மொழியப்பட்ட மதிப்பாய்வின் நோக்கமாகும் என்றும் அவர் கூறினார்.





