மலையக பெண்கள் பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துள்ளார்கள் - சாணக்கியன்
இனிவரும் காலங்களிலாவது அது குறித்து கவனம் செலுத்த வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சாணக்கியன் இராசமாணிக்கம் சபையில் வலியுறுத்தினார்.
எமது மலையக பெண்கள் இன்றும் பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துள்ளார்கள். அவர்கள் பாதுகாப்பற்ற நிலையில் தான் பெருந்தோட்டங்களில் தொழில் புரிகிறார்கள். அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும், பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கும் இதுவரை காலமும் சாதகமான முன்மொழிவுகள் மற்றும் சட்டத்திருத்தங்கள் ஏதும் முன்வைக்கப்படவில்லை. இனிவரும் காலங்களிலாவது அது குறித்து கவனம் செலுத்த வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற குழுத் தலைவரும், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சாணக்கியன் இராசமாணிக்கம் சபையில் வலியுறுத்தினார்.
பாராளுமன்றத்தில் 20-08-2026 அன்று நடைபெற்ற பெண்களையும், இளம் ஆட்களையும் மற்றும் பிள்ளைகளையும் தொழிலுக்கமர்த்துதல் (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு வலியுறுத்தினார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், பெண்களையும், இளம் ஆட்களையும் மற்றும் பிள்ளைகளையும் தொழிலுக்கமர்த்துதல் (திருத்தச்) சட்டமூலம் என்ற மிக முக்கியமான சட்டமூலம் பாராளுமன்றத்துக்கு முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த சட்டமூலம் ஊடாக தண்டப்பணம் அதிகரிக்கப்படும் என்ற திருத்தமும் முன்வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறான சட்டமூலங்களை பாராளுமன்றத்துக்கு கொண்டு வந்து அவற்றை இயற்றுவது முக்கியமானதுடன், அதேபோல் தீர்க்கப்பட வேண்டிய பல பிரச்சினைகளுக்கும் தீர்வு காண வேண்டும்.
பெண்களுடன் தொடர்புடைய நேரடியான பிரச்சினைகள் என்று பார்த்தால் எமது மலையக பெண்கள் பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துள்ளார்கள். அவர்கள் இன்றும் பாதுகாப்பற்ற நிலையில் தான் பெருந்தோட்டங்களில் தொழில் புரிகிறார்கள். அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும், பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கும் இதுவரை காலமும் சாதகமான முன்மொழிவுகள் மற்றும் சட்டத்திருத்தங்கள் ஏதும் முன்வைக்கப்படவில்லை.இனிவரும் காலங்களிலாவது அது குறித்து கவனம் செலுத்த வேண்டும்.
பெருந்தோட்ட மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கும், காணி உரிமைகளுக்கும் தீர்வு காண வேண்டும். சம்பளத்தை அதிகரித்தால் மாத்திரம் அவர்களின் பிரச்சினைகள் முடிவுக்கு வந்து விடாது. தித்வா புயல் தாக்கத்தின் பின்னரும் மலையக மக்களின் வீடு மற்றும் காணி பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்படவில்லை.அவர்களின் வாழ்க்கை இன்றும் பாதுகாப்பற்ற நிலை காணப்படுகிறது. அரசாங்கத்துக்கு எதிராக அரசாங்கமே எதிர்காலத்தில் தண்டப்பணம் விதிக்கும் நிலை ஏற்படும் என்றார்.





