பாலின அடிப்படையிலான வன்முறைகளால் பாதிக்கப்பட்ட பெண்களைப் பொருளாதார ரீதியாக வலுவூட்டும் விசேட திட்டம்
இக்குறுகிய கால முன்னோடித் திட்டம் பாதிக்கப்பட்ட பெண்களின் மீட்சி மற்றும் சமூக மறுஒதுக்கீட்டிற்குப் பாரிய பங்களிப்பை வழங்கியுள்ளதுடன், கொள்கை வகுப்பாளர்களுக்குப் பல முக்கிய பாடங்களைக் கற்றுத் தந்துள்ளதாகத் தெரிவித்தார்.
இலங்கையில் பாலியல் மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறைகளால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு, தற்காலிகப் புகலிடங்களுக்குப் பிந்தைய பொருளாதார சுயாட்சியை வழங்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட 15 மாதக் கால விசேட திட்டத்தின் இறுதி மதிப்பீட்டு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
இதன் உத்தியோகபூர்வ நிகழ்வு 02-07-2026 அன்று கொழும்பில் இடம்பெற்றது. கனடா அரசாங்கத்தின் நிதியுதவியுடன், ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டம் மற்றும் ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியம் ஆகியன இணைந்து, மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு உள்ளிட்ட அரச மற்றும் சிவில் சமூகப் பங்காளர்களுடன் இணைந்து இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தின.
இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் செயலாளர் தரங்கனி விக்ரமசிங்க, வன்முறைகளில் இருந்து மீண்ட பெண்கள் மீண்டும் அதே வன்முறைச் சுழலுக்குள் சிக்குவதைத் தடுக்கவும், அவர்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தவும் பொருளாதார வலுவூட்டல் மிக இன்றியமையாதது. தேசியப் புகலிட வழிகாட்டல்களுக்கு இணங்க, பெண்களின் கண்ணியம் மற்றும் சுதந்திரத்தை உறுதிப்படுத்த இத்தகைய திட்டங்களை அரச மற்றும் தனியார் துறைகளின் பங்களிப்புடன் மேலும் விரிவுபடுத்த வேண்டும் என்றார்.
கனடா உயர்ஸ்தானிகரகத்தின் ஒத்துழைப்புக்கான தலைவர் கிரில் இயோர்டானவ் கருத்துத் தெரிவிக்கையில், பெண்கள் பாதுகாப்பு, திறன்கள் மற்றும் பொருளாதார வாய்ப்புகளைப் பெறும் போது, அவர்கள் தங்கள் வாழ்க்கையைத் தற்சார்புடன் மீண்டும் கட்டியெழுப்ப முடிகிறது. பாலின சமத்துவத்தை மேம்படுத்தும் இத்தகைய முயற்சிகளுக்குக் கனடா தொடர்ந்து ஆதரவளிக்கும் என்றார்.
இலங்கையின் வடக்கு, வடமத்திய, மத்திய மற்றும் மேல் மாகாணங்களைச் சேர்ந்த தற்காலிகப் புகலிடங்களில் தங்கியிருக்கும் மற்றும் அங்கிருந்து வெளியேறிய பெண்களை இலக்காகக் கொண்டு இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் பெண்களுக்குத் தனிப்பயனாக்கப்பட்ட பயிற்சிகள், வழிகாட்டல்கள் மற்றும் வணிக மேம்பாட்டு உதவிகள் வழங்கப்பட்டதோடு, புகலிடப் பணியாளர்களின் திறன்களும் மேம்படுத்தப்பட்டன.
ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் இலங்கைக்கான பிரதிநிதி அசுசா குபோடா குறிப்பிடுகையில், இக்குறுகிய கால முன்னோடித் திட்டம் பாதிக்கப்பட்ட பெண்களின் மீட்சி மற்றும் சமூக மறுஒதுக்கீட்டிற்குப் பாரிய பங்களிப்பை வழங்கியுள்ளதுடன், கொள்கை வகுப்பாளர்களுக்குப் பல முக்கிய பாடங்களைக் கற்றுத் தந்துள்ளதாகத் தெரிவித்தார்.
இறுதி மதிப்பீட்டின்படி, நேர்காணல் செய்யப்பட்ட 79 பெண்களில் 56 பேர் தற்போது வெற்றிகரமாகத் சுயதொழில் அல்லது கூட்டு வணிக முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். இத்திட்டமானது வன்முறைகளால் பாதிக்கப்பட்ட பெண்களைப் பொருளாதாரச் சார்புநிலையிலிருந்து மீட்டு, அவர்களின் தன்னம்பிக்கையை வளர்த்து, வாழ்வாதார வாய்ப்புகளை நோக்கி வழிநடத்தியுள்ளது.





