சித்திரவதைகளை தடுப்பதற்கான ஐ.நா. உபகுழுவின் பிரதிநிதிகள் 15 இல் வருகை
எதிர்வரும் 15 ஆம் திகதி நாட்டுக்கு வருகைதரவிருக்கும் மேற்படி உபகுழுவின் பிரதிநிதிகள், இம்மாதம் 24 ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருப்பர்.
நாடளாவிய ரீதியில் கண்காணிப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக சித்திரவதைகளைத் தடுப்பதற்கான ஐக்கிய நாடுகள் உபகுழுவின் பிரதிநிதிகள் எதிர்வரும் 15 ஆம் திகதி நாட்டுக்கு வருகைதரவுள்ளனர்.
உறுப்பு நாடுகளில் சித்திரவதைகள் இடம்பெறுவதை தடுத்தல், வழிகாட்டல்களை வெளியிடல், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளல் என்பவற்றை பிரதான நோக்கங்களாகக்கொண்டு 2007 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட சித்திரவதைகளைத் தடுப்பதற்கான ஐக்கிய நாடுகள் உபகுழுவில் 25 சுயாதீன நிபுணர்கள் உள்ளடங்குகின்றனர்.
அதன்படி எதிர்வரும் 15 ஆம் திகதி நாட்டுக்கு வருகைதரவிருக்கும் மேற்படி உபகுழுவின் பிரதிநிதிகள், இம்மாதம் 24 ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருப்பர்.
இக்காலப்பகுதியில் விசேடமாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிரதிநிதிகளைச் சந்திக்கவுள்ள ஐ.நா உபகுழுவின் பிரதிநிதிகள், நாடளாவிய ரீதியில் பல்வேறு வகைப்படுத்தல்களின்கீழ் இடம்பெறும் சித்திரவதைகள், அவற்றைத் தடுப்பதற்கு முன்னெடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கைகள், இச்செயன்முறையில் பொலிஸார், சிவில் சமூக அமைப்புக்கள் உள்ளிட்ட ஏனைய பங்காளிகளின் வகிபாகம் என்பன தொடர்பில் பரந்துபட்ட கலந்துரையாடல்களை முன்னெடுக்கவுள்ளனர்.
அதேவேளை சித்திரவதைகள் இடம்பெறக்கூடிய சாத்தியப்பாடு உள்ள இடங்களுக்கும் அவர்கள் களவிஜயங்களை மேற்கொள்ளவுள்ளனர். மேலும் இவ்விஜயத்தின்போது சிவில் சமூகப்பிரதிநிதிகளுடனான பிரத்யேக சந்திப்பொன்றுக்கு அழைப்புவிடுக்கப்பட்டிருப்பதாக அறியமுடிகிறது.





