அனைத்து அரசியல் சக்திகளுடனும் ஒன்றிணைந்து, சவால்களுக்கு முகங்கொடுக்க வேண்டும் - ரணில்
இக்கூட்டத்தில், தற்போதைய அரசியல் சூழ்நிலைகள் மற்றும் அதற்கு கட்சியின் தரப்பிலிருந்து வழங்கப்பட வேண்டிய பதிலளிப்புகள் குறித்து விரிவாகக் கருத்துக்கள் பரிமாறப்பட்டன.
தனித்தனியாக இயங்காமல் அனைத்து அரசியல் சக்திகளுடனும் ஒன்றிணைந்து, ஒருமித்த பலமாகவே எதிர்கால அரசியல் சவால்களுக்கு முகங்கொடுக்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பிலுள்ள அரசியல் அலுவலகத்தில் அவரது தலைமையில் நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவின் விசேட கூட்டத்திலேயே அவர் இதனை வலியுறுத்தியுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள் பலரின் பங்கேற்புடன் நடைபெற்ற இக்கூட்டத்தில், தற்போதைய அரசியல் சூழ்நிலைகள் மற்றும் அதற்கு கட்சியின் தரப்பிலிருந்து வழங்கப்பட வேண்டிய பதிலளிப்புகள் குறித்து விரிவாக கருத்துக்கள் பரிமாறப்பட்டன.
அத்துடன், ஐக்கிய தேசியக் கட்சியின் எதிர்காலக் கட்டமைப்பு மற்றும் அமைப்புகளை மீண்டும் அடிமட்டத்திலிருந்து கட்டியெழுப்புவது தொடர்பான பல முக்கிய திட்டங்கள் இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டன. ஏனைய அரசியல் கட்சிகள், பலங்கள் மற்றும் அமைப்புகளுடன் இணைந்து எதிர்கால அரசியல் நடவடிக்கைகளை எவ்வாறு ஒருங்கிணைப்பது என்பது குறித்தும் செயற்குழு உறுப்பினர்களுக்கு இதன்போது தெளிவுபடுத்தப்பட்டது.
மேலும், கட்சியின் ஒழுக்க விதிகளுக்கு முரணாகச் செயற்பட்ட உள்ளுராட்சி மன்றப் பிரதிநிதிகளுக்கு எதிராக எடுக்கப்பட்டுள்ள ஒழுக்காற்று நடவடிக்கைகள் குறித்து, கட்சியின் பொதுச் செயலாளரான சட்டத்தரணி தலதா அதுகோரள அவர்கள் செயற்குழு முன்னிலையில் உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.
கட்சியின் கட்டமைப்பை மீண்டும் பலப்படுத்துவது மற்றும் ஏனைய அரசியல் சக்திகளுடன் இணைந்து செயலாற்றுவது குறித்து நீண்டநேரம் கலந்துரையாடப்பட்டுப் பல முக்கிய தீர்மானங்கள் எட்டப்பட்டதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன இக்கூட்டத்தின் நிறைவில் தெரிவித்தார்.





