மத்திய வங்கி - திறைசேரிக்கிடையிலான கொள்கை முரண்பாடு - அரசாங்க நிதி பற்றி குழுத்தலைவர் ஹர்ஷ
இந்த குழுவின் அனைத்து உறுப்பினர்களது ஒப்புதலுடனும் இணக்கப்பாட்டுடனும் தான் அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும்.
மத்திய வங்கி மற்றும் திறைசேரி ஆகிய இரு முக்கிய நிறுவனங்களுக்கும் இடையே ஏற்பட்டுள்ள கொள்கை முரண்பாடுகளை ஆராய்ந்து தயாரிக்கப்பட்ட அரசாங்க நிதி பற்றி குழுவின் இறுதி அறிக்கை, அடுத்த வாரம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அக்குழுவின் தலைவர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.
இக்குழுவின் விசாரணை அமர்வுகள் அனைத்தும் முழுமையான வெளிப்படைத்தன்மையுடன் நடத்தப்பட்டுள்ளதால், அது தொடர்பான காணொளி பதிவுகளும் நாட்டின் பொதுமக்களின் பார்வைக்காக விரைவில் வெளியிடப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், மத்திய வங்கி மற்றும் திறைசேரியுடன் நாங்கள் மூன்று கலந்துரையாடல்களை நடத்தினோம். இதன்போது அவர்கள் இரண்டு வெ வ்வேறு அறிக்கைகளை சமர்ப்பித்தார்கள். திறைசேரி வழங்கிய அறிக்கையில் இருந்த பல விடயங்களை மத்திய வங்கி ஏற்றுக்கொள்ளாததன் காரணமாகவே, மத்திய வங்கியின் அறிக்கை தனியாக சமர்ப்பிக்கப்பட்டது.
எனவே, இந்த இரண்டு அறிக்கைகளையும் நாங்கள் ஆழமாக பகுப்பாய்வு செய்து ஒரு வரைபு அறிக்கையை தயாரித்துள்ளோம். அந்த வரைபு தற்போது நிதிக்குழுவின் அனைத்து உறுப்பினர்களிடமும் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவர்கள் அதனை வாசித்துவிட்டு தங்களது கருத்துக்களை முன்வைக்க வேண்டும்.
உறுப்பினர்களின் கருத்துக்கள் கிடைத்தவுடன், அந்த அறிக்கையை இறுதி செய்ய எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த வாரம் பாராளுமன்றம் கூடும் வார என்பதால், பாராளுமன்றத்தில் அந்த அறிக்கை முறையாகச் சமர்ப்பிக்கப்படும். இவ்வாறான நிதி மற்றும் கொள்கை சார்ந்த விடயங்களை அவசர அவசரமாகச் செய்ய முடியாது. நாம் ஒன்றும் பாதுகாப்புதுறை கிடையாது. நிதிக்குழு என்ற ரீதியில் கொள்கை ரீதியான விடயங்களை ஆராய்வதே எங்களது பணியாகும். அங்கு என்ன நடந்துள்ளது என்பது தற்போது எங்களுக்கு மிகத் தெளிவாகத் தெரிகிறது.
இந்த குழுவின் அனைத்து உறுப்பினர்களது ஒப்புதலுடனும் இணக்கப்பாட்டுடனும் தான் அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும். தலைவர் என்பதற்காக எனது தனிப்பட்ட விருப்பப்படி மட்டும் இதனைச் சமர்ப்பிக்க முடியாது. அனைவரது கருத்துக்களையும் பெற்று, ஒரு இணக்கப்பாட்டிற்கு வந்த பின்னரே அறிக்கை சமர்ப்பிக்கப்படும். அங்கு பல விடயங்கள் நடந்துள்ளன. அதனை முழு நாடும் மிக விரைவில் கண்டுகொள்ள முடியும்.
அத்துடன், இந்த அமர்வுகளின் காணொளி பதிவுகள் உட்பட அனைத்தையும் மக்களுக்கு வழங்கவுள்ளோம். ஏனென்றால் வெளிப்படைத்தன்மை என்பது மிகவும் முக்கியமானது என நான் நம்புகிறேன். அந்த வெளிப்படைத்தன்மையுடன் தான் நாங்கள் இந்த வேலையைச் செய்கிறோம் என்றார்.





