தெற்கு கடலில் கைவிடப்பட்ட நிலையில் 839 கிலோவுக்கும் அதிக போதைப்பொருட்கள் மீட்பு
தெற்கு கடலில் மேற்கொள்ளப்பட்ட இந்த விசேட தேடுதல் நடவடிக்கையின்போது, அக்கடல் பகுதியில் கைவிடப்பட்டிருந்த மூட்டைகள் சோதனையிடப்பட்டுள்ளன.
பாதுகாப்பான நாட்டை உறுதிப்படுத்தும் நோக்கில், இலங்கைக்குள் போதைப்பொருள் கடத்தலைத் தடுப்பதற்காக இலங்கை கடற்படையால் மேற்கொள்ளப்படும் தீவிரமான கடல்சார் நடவடிக்கைகளின் போது நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை முன்னெடுக்கப்பட்ட சுற்றி வளைப்பில் தெற்கு கடற்பரப்பிலிருந்து 839 கிலோ கிராமுக்கும் அதிகமான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
தென்கடல் பிரதேசத்தில் கைவிடப்பட்டிருந்த, 839 கிலோ கிராமுக்கும் அதிகமான ஹெரோயின், ஐஸ் மற்றும் ஹாஷ் போதைப்பொருட்கள் அடங்கிய 51 மூட்டைகள் கடற்படையால் கைப்பற்றப்பட்டுள்ளன. கைப்பற்றப்பட்ட இந்த போதைப்பொருள் தொகையை அவதானிப்பதற்காக, பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர மற்றும் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் காஞ்சன பானகொட ஆகியோர் தங்கால மீன்பிடி துறைமுகத்துக்குச் சென்றுள்ளனர்.
இதன்படி, புலனாய்வு சேவைகள் ஊடாக கிடைத்த நம்பகமான தகவலின் அடிப்படையில், கிழக்கு மற்றும் தெற்கு கடற்படை கட்டளைகளுக்கு சொந்தமான கடற்படைக் கப்பல்கள் மற்றும் படகுகள் ஒன்றிணைந்து பல நாட்களாக மேற்கொண்ட கூட்டு நடவடிக்கையின் விளைவாக, தெற்கு கடலில் மேற்கொள்ளப்பட்ட இந்த விசேட தேடுதல் நடவடிக்கையின்போது, அக்கடல் பகுதியில் கைவிடப்பட்டிருந்த மூட்டைகள் சோதனையிடப்பட்டுள்ளன.
இதன் போது, போதைப்பொருள் அடங்கியிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்ட 51 மூட்டைகள் கடற்படையால் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த மூட்டைகள் தங்கால மீன்பிடி துறைமுகத்துக்கு கொண்டுவரப்பட்டு, பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினால் மேற்கொள்ளப்பட்ட விசேட பரிசோதனையில், அதில் சுமார் 670 கிலோ 676 கிராம் ஐஸ் போதைப்பொருள், 156 கிலோ 542 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் 12 கிலோ 036 கிராம் ஹாஷ் போதைப்பொருள் உள்ளடங்கியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர, பொது பாதுகாப்புக்கும் தேசிய பாதுகாப்புக்கும் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ள போதைப்பொருள் தொல்லையிலிருந்து நாட்டின் எதிர்கால தலைமுறையை விடுவிப்பதற்கான அரசாங்கத்தின் நிலைப்பாட்டுக்கமைய தொடர்ச்சியான அர்ப்பணிப்புடன் செயற்படுவோம். அத்துடன் இந்த நச்சுப் போதைப்பொருளை ஒழிப்பதற்கான 'நாடு ஒன்றிணைந்து தேசிய நடவடிக்கை' என்ற தேசிய வேலைத்திட்டமும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய, பாதுகாப்பு அமைச்சு மற்றும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் மேற்பார்வையின் கீழ், அரச புலனாய்வு சேவை உட்பட அனைத்து புலனாய்வு சேவைகள், முப்படையினர், இலங்கை பொலிஸ், பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு, பொலிஸ் விசேட அதிரடிப்படை, கடலோரப் பாதுகாப்புத் திணைக்களம் உட்பட அனைத்து சட்டத்தை அமலாக்கும் நிறுவனங்களுக்கும் சுயாதீனமாக நடவடிக்கைகளை மேற்கொள்ள தேவையான பின்னணியை உருவாக்கியதன் விளைவாகவே, போதைப்பொருள் வேட்டை நடவடிக்கைகளை மிகவும் வெற்றிகரமாக மேற்கொள்ள முடிந்தது என்றார்.
மேலும், தேசிய பாதுகாப்புக்கு அர்ப்பணிப்புடன் செயற்படும் அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்பு மற்றும் இடைத்தொடர்பு மூலம், தேசிய பாதுகாப்பு மற்றும் சமூக பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கும் போதைப்பொருட்கள் உட்பட எந்தவொரு சட்டவிரோதப் பொருட்களையும் கடல் மார்க்கமாக நாட்டிற்குள் கொண்டுவர எந்தவொரு வாய்ப்பும் இல்லை என்றும், மீன்பிடி நடவடிக்கைகள் என்ற போர்வையில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுபவர்கள் அல்லது அதற்கு துணைபோகும் எந்தவொரு முயற்சியும் வெற்றியடைய அனுமதிக்கப்படாது என்றும், இத்தகைய கடத்தல்களை ஒடுக்குவதற்காக ஒரு ஒருங்கிணைந்த திட்டத்துடன் தொடர்ந்து நடவடிக்கைகளை முன்னெடுப்போம் என்றும் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேலும் வலியுறுத்தினார்.
அத்துடன், இலங்கை கடற்படை ஏனைய தரப்பினருடன் இணைந்து, தீவின் கடற்கரை மற்றும் கடற்பரப்பை உள்ளடக்கி மேற்கொள்ளும் தீவிரமான போதைப்பொருள் வேட்டை நடவடிக்கைகளால், நிலப்பகுதிக்கு கொண்டு செல்ல முடியாமல் போதைப்பொருள் கடத்தல்காரர்களால் கடலில் கைவிடப்பட்டிருந்த இந்த சுமார் 670 கிலோ 676 கிராம் ஐஸ் போதைப்பொருள், 156 கிலோ 542 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் 12 கிலோ 036 கிராம் ஹாஷ் போதைப்பொருள் ஆகியவை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டதாக கடற்படை தலைமையகம் தெரிவித்துள்ளது.





