ரன்வல எம்.பியின் மனைவி விபத்தில் காயம்: இசைக்கலைஞர் கைது
விபத்தை ஏற்படுத்திய கார் சாரதியான களுத்துறை வடக்கு பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டார்.
முன்னாள் சபாநாயகரும் பாராளுமன்ற உறுப்பினருமான அசோக சபுமல் ரன்வலவின் மனைவியும் வைத்தியருமான இந்திராணி ரன்வல பயணித்த கார் மீது கட்டுப்பாட்டை இழந்த மற்றொரு கார் மோதி விபத்துக்குள்ளானதில் காயமடைந்து இந்திராணி ரன்வல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
களனி - பியகம வீதியில், பாராளுமன்ற உறுப்பினர் அசோக ரன்வலவின் வீட்டிற்கு முன்பாக 17-01-2026 அன்று அதிகாலை 6.05 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. வைத்தியர் இந்திராணி ரன்வல தனது காரை வீதியின் வலதுபுறமாக, வீட்டிற்குள் திருப்புவதற்குத் தயாராக இருந்தபோது, களனி திசையிலிருந்து வந்த கார் ஒன்று மோதியதில் இவ்விபத்து சம்பவித்துள்ளது.
இதன்போது எம்.பி.யின் வீட்டில் பாதுகாப்பு கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் வழங்கிய தகவலின் பேரில் பியகம பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர்.
விபத்தை ஏற்படுத்திய கார் சாரதியான களுத்துறை வடக்கு பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட நபர் வாகனத்தைச் செலுத்தியபோது மதுபோதையில் இருந்தமை மருத்துவப் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சந்தேகநபர் இசைக்குழு ஒன்றின் முன்னணி கிற்றார் கலைஞரென விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இதேவேளை பியகம பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.ஏ.கே.எம். விஜேசிங்கவின் ஆலோசனையின் பேரில் விபத்து சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.





