வெளியகப்பொறிமுறைகளை ஏற்கப்போவதில்லை: வெளிவிவகார அமைச்சர் பேரவையில் அறிவிப்பு
நல்லிணக்கத்தைப் பிரதிபலிக்கும் வகையில் எதிர்வரும் டிசம்பர் மாதம் முதலாம் வாரத்தில் தேசிய இலங்கையர் தினத்தைக் கொண்டாடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மிகக்குறுகிய காலப்பகுதியில் எம்மால் அடையப்பட்டுள்ள முன்னேற்றங்கள் உள்ளகப்பொறிமுறையின் ஊடாக பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதில் நாம் கொண்டிருக்கும் அர்ப்பணிப்புடன்கூடிய கடப்பாட்டினைக் காண்பிக்கின்றன. அவ்வாறிருக்கையில் இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறல் செயற்திட்டம் போன்ற வெளியகப்பொறிமுறைகளினால் நாம் தேசிய ரீதியில் முன்னெடுத்துவரும் நல்லிணக்க செயன்முறைகள் பாதிப்படையும். எனவே அவ்வாறான வெளியகப்பொறிமுறைகளை எம்மால் ஏற்றுக்கொள்ளமுடியாது என வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித்த ஹேரத் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அறிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடர் 08-09-2025 அன்று ஜெனீவாவில் ஆரம்பமானது. கூட்டத்தொடரின் தொடக்கநாள் அமர்வில் ஜெனீவா நேரப்படி நண்பகல் 12.15 மணிக்கு (இலங்கை நேரப்படி பி.ப 3.45) உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பான தனது எழுத்துமூல அறிக்கையின் உள்ளடக்கம் குறித்து உரையாற்றினார்.
அதனைத்தொடர்ந்து உயர்ஸ்தானிகரின் அறிக்கைக்குப் பதிலளிக்கும் வகையில் இலங்கையின் நிலைப்பாடுகளைத் தெளிவுபடுத்தி உரையாற்றிய அமைச்சர் விஜித்த ஹேரத்தினால் சுட்டிக்காட்டப்பட்ட முக்கிய விடயங்கள் வருமாறு:
இலங்கையில் புதிய அரசியல் கலாசாரத்தைக் கட்டியெழுப்பும் எதிர்பார்ப்பில் கடந்த ஆண்டு மக்கள் எமக்கு வாக்களித்தனர். அதன்படி நாட்டுமக்களின் சமூக மற்றும் பொருளாதார நலன்களையும், மேம்பாட்டையும் உறுதிசெய்வதற்கு அவசியமான நடவடிக்கைகள் எமது அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. குறிப்பாக ஊழலுக்கு எதிரான எமது நடவடிக்கைகளால் குறுகிய காலத்தில் குறிப்பிட்டுக்கூறத்தக்க முக்கிய பல விடயங்கள் இடம்பெற்றுள்ளன.
அதேபோன்று பயங்கரவாதத்தடைச்சட்டத்தை நீக்குவதற்கும், அதற்குப் பதிலீடாக உரிய நியமங்களுக்கு அமைவாக பயங்கரவாத எதிர்ப்புச்சட்டத்தைக் கொண்டுவருவதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. நிகழ்நிலைக்காப்புச்சட்டத்தைத் திருத்தியமைப்பதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஸ்தாபிப்பதற்குரிய சட்ட வரைபைத் தயாரிக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
செம்மணி மனிதப்புதைகுழி அகழ்வுப்பணிகளை முன்னெடுப்பதற்கு அவசியமான நிதியை ஒதுக்கீடு செய்து வழங்கியிருப்பதுடன், அதுசார்ந்த ஏனைய நடவடிக்கைகளுக்கான வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. சிவில் சமூக செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு அவசியமான இடைவெளி உறுதிசெய்யப்பட்டிருக்கிறது. நினைவுகூரல்களில் ஈடுபடுவதற்கான உரிமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதுமாத்திரமன்றி நல்லிணக்கத்தைப் பிரதிபலிக்கும் வகையில் எதிர்வரும் டிசம்பர் மாதம் முதலாம் வாரத்தில் தேசிய இலங்கையர் தினத்தைக் கொண்டாடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அடுத்ததாக உயர்ஸ்தானிகரின் அறிக்கையில் சட்டமா அதிபர் திணைக்களம் தொடர்பில் குறிப்பிடப்பட்டிருந்த எதிர்மறையான விடயங்கள் முற்றிலும் தவறானவை என்பதைச் சுட்டிக்காட்டுகிறேன். நாம் நம்பகமான உள்ளகப்பொறிமுறையின் ஊடாக பொறுப்புக்கூறலையும், நீதியையும் நிலைநாட்டுவதற்குத் தயாராக இருக்கிறோம். அதன் ஓரங்கமாக உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல்கள் மற்றும் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பான வழக்குகள் முறையாக விசாரிக்கப்பட்டுவருகின்றன.
வட, கிழக்கு மாகாணங்களில் படையினரால் சுவீகரிக்கப்பட்ட காணிகள் பெருமளவுக்கு விடுவிக்கப்பட்டுள்ளன. அவ்வாறு விடுவிக்கப்படமுடியாத காணிகளுக்குப் பதிலாக அவற்றின் உரித்தாளர்களுக்கு நட்ட ஈடு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மலையகத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 5000 வீடுகள் மக்களிடம் கையளிக்கப்படவுள்ளன.
இந்நிலையில் நாம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை மற்றும் ஐக்கிய நாடுகள் உயர்ஸ்தானிகர் அலுவலகம் என்பவற்றுக்கு அவசியமான முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதற்குத் தயாராக இருக்கிறோம். மிகக்குறுகிய காலப்பகுதியில் எம்மால் அடையப்பட்டுள்ள முன்னேற்றமானது உள்ளகப்பொறிமுறையின் ஊடாக பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதில் எமது அரசாங்கம் கொண்டிருக்கும் அர்ப்பணிப்புடன்கூடிய கடப்பாட்டினைக் காண்பிக்கிறது. அவ்வாறிருக்கையில் இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறல் செயற்திட்டம் உள்ளிட்ட வெளியகப் பொறிமுறைகளின் விளைவாக உள்ளக ரீதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் தேசிய நல்லிணக்க செயன்முறைகள் பாதிப்படையும். ஆகவே அவற்றை எம்மால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமுடியாது என்றார்.





