உத்தியோகபூர்வ அழைப்பின் பின்னரே தீர்மானம்: மத்தும பண்டார
ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதில் எவ்வித பிரச்சினையும் இல்லை.

ஐக்கிய தேசிய கட்சியின் வருடாந்த சம்மேளனத்துக்கு உத்தியோகபூர்வ அழைப்பு விடுக்கப்பட்டால் அதில் பங்கேற்பதா இல்லையா என்பது கட்சி ரீதியில் கலந்துரையாடப்பட்டு தீர்மானிக்கப்படும். எமது தற்போதைய இணைவு அரசாங்கத்தின் அடக்குமுறைகளுக்கு எதிரானது மாத்திரமே. அரசியல் பயணம் குறித்து எதிர்காலத்தில் தீர்மானிப்போம் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் தொடர்ந்தும் இடம்பெற்று வரும் கட்சி தலைவர்களுடனான சந்திப்பு மற்றும் ஐ.தே.க. சம்மேளனம் குறித்து வினவிய போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்புரிமை நீக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் அதனை வழங்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நாம் ஐக்கிய மக்கள் சக்தியினர். எமக்கு அக்கட்சியின் உறுப்புரிமை காணப்படுகிறது. எனவே ஐ.தே.க. உறுப்புரிமை தொடர்பில் எமக்கு எவ்வித சிக்கலும் இல்லை. எமது ஒன்றிணைந்த பயணம் அரசாங்கத்தினால் எதிர்க்கட்சிகள் மீது பிரயோகிக்கப்படும் அடக்குமுறைகளுக்கு எதிரானதாகும்.
அரசியல் பயணம் குறித்து தேர்தல் காலத்திலேயே சிந்திப்போம். அதுவரை சர்வாதிகார அரசாங்கத்தின் எதேச்சதிகாரத்துக்கு எதிராக குரல் கொடுப்போம். ஐ.தே.க. சம்மேளனத்துக்கான அழைப்பு இன்னும் கிடைக்கப் பெறவில்லை. கிடைத்த பின்னர் அதில் பங்கேற்பதா இல்லையா என்பது கட்சி ரீதியில் தீர்மானிக்கப்படும். இது தொடர்பில் தனித்து எவ்வித தீர்மானத்தையும் எட்ட முடியாது.
ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதில் எவ்வித பிரச்சினையும் இல்லை. ஆனால் அதனை அடிப்படையாகக் கொண்டு எதிர்க்கட்சிகள் மீது அடக்குமுறைகளைப் பிரயோகிப்பதை அங்கீகரிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. கடந்த காலங்களில் பேரூந்துகளுக்கும் மின் பிறப்பாக்கிகளுக்கும் தீ வைத்தவர்கள் இன்று வெளியில் சுதந்திரமாக நடமாடிக் கொண்டிருக்கின்றனர். உண்மையில் அவர்கள் தான் சிறையிலடைக்கப்பட வேண்டியவர்கள்.
இன்று நாட்டில் இருவேறு வகையில் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. அமைச்சர் வசந்த சமரசிங்கவுக்கு ஒரு சட்டமும், எதிர்க்கட்சி எம்.பி.க்களுக்கு பிரிதொரு சட்டமும் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இவ்வாறான செயற்பாடுகளுக்கெதிராகவே நாம் ஒன்றிணைந்துள்ளோம். எவ்வாறிருப்பினும் எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் குறித்து தற்போது எதுவும் கூற முடியாது என்றார்.