கெஹல்பத்தர பத்மே உள்ளிட்ட ஐவரும் அழைத்து வரப்பட்டனர்
இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் தொடர்பிலான சந்தேகநபரான பெக்கோ சமனின் மனைவி மற்றும் குழந்தை ஆகியோர் 29-08-2025அன்று நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் அவர்களிடத்தில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்ட பாதாள உலகக்குழுவின் முக்கியஸ்தர்களான கெஹல்பத்தர பத்மே உள்ளிட்ட ஐவரும் 30-08-2025 அன்று இரவு நாட்டுக்கு விசேட பாதுகாப்புக்கு மத்தியில் அழைத்து வரப்பட்டுள்ளதாக உதவி பொலிஸ் அத்தியட்சகர் எப்.யு. வுட்லர் தெரிவித்தார்.
இவர்கள் அழைத்து வரப்பட்ட போது கட்டுநாயக்க விமான நிலையத்தின் உள்ளேயும் வெளியேயும் பலத்த பாதுகாப்பு காணப்பட்டது. அத்துடன் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேயபால, பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய, விசேட அதிகரடிப்படையினர் மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் குழுவினர், ஊடகப் பேச்சாளர் வுட்லர் உள்ளிட்ட பலரும் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக விமான நிலையத்தில் பிரசன்னமாகியிருந்தனர்.
முன்னதாக 30-08-2025 அன்று அதிகாலை குறித்த பாதாள உலகக் குழுவினரை அழைத்து வருவதற்காக விசேட பொலிஸ் குழுவொன்று இந்தோனேசியாவுக்கு புறப்பட்டுச் சென்றிருந்தது. ஏற்கனவே இந்தோனேசியாவில் சி.ஐ.டி. குழுவினர் தங்கியிருந்த நிலையில் அவர்களுடன் இணைந்து கைது செய்யப்பட்ட கெஹல்பத்தர பத்மே உள்ளிட்டவர்களை நாட்டுக்கு மீள அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் விரைவாக முன்னெடுக்கப்பட்டன.
அதன் பிரகாரம் பிற்பகல் 3.30 மணியளவில் ஜெகர்த்தாவிலிருந்து கட்டுநாயக்க நோக்கி புறப்பட்ட விமானத்தில் குறித்த பாதாள உலகக் குழுவினர் விசேட பாதுகாப்புக்கு மத்தியில் அழைத்து வரப்பட்டனர். குறித்த விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தை இரவு 7.20க்கு வந்தடைந்திருந்தது. அதைத் தொடர்ந்து குறித்த குழுவினர் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸாரால் அழைத்துச் செல்லப்பட்டனர்.
இதனிடையே, இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் தொடர்பிலான சந்தேகநபரான பெக்கோ சமனின் மனைவி மற்றும் குழந்தை ஆகியோர் 29-08-2025அன்று நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் அவர்களிடத்தில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
குறிப்பாக, கெஹல்பத்தர பத்மே மற்றும் அவரது கூட்டாளிகள் சட்டவிரோதமாகச் சம்பாதித்ததாகக் கூறப்படும் சொத்துக்கள் குறித்து பொலிஸார் விசாரணைகைளை ஆரம்பித்துள்ளதோடு அவர் சட்டவிரோத நிதியைப் பயன்படுத்தி இலங்கையில் பல அசையும் மற்றும் அசையா சொத்துக்களை வாங்கியிருப்பது தெரியவந்துள்ளது.
அத்துடன் கெஹல்பத்தர பத்மேவுக்கும் கமாண்டோ சாலிந்துவுடன் தொடர்புடைய சொத்துக்கள் குறித்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.





